1
பேரரசன்
இரு மல்யுத்த வீரர்களைத்
தோளில் சுமந்து மலை ஏறுபவன்
மகன் மரணத்தின் விளிம்பிலிருந்தான்
பேரரசன் வேண்டினான்
‘என் உயிரை எடுத்துக் கொள்
மகன் உயிரை விட்டு விடு’
மகன் பிழைத்தான்
பேரரசன் நோய்மையில் வீழ்ந்து
ஆறு மாதத்தில் மறைந்தான்
2
வெர்னர் ஹெர்ஸாக்
ம்யூனிச்சில் இருந்தான்
தோழி பாரிஸில், மரணத்தின் விளிம்பில்
சில மணி நேரங்களே கெடு
’சாவதற்கு முன் உன்னைப் பார்க்க வேண்டும்’
என்கிறாள் தோழி
பனிப்பொழிவினூடே
அவன் நடந்தான்
இருபத்திரண்டு நாட்கள்
பாரிஸ் வந்து
அவளைப் பார்த்தான்
தோழி
ஒன்பது ஆண்டுகள் உயிருடனிருந்தாள்
3
சாமான்யரும் பிரார்த்தனை செய்யலாமா
எனக் கேட்டாள்
பிறிதொரு சமயம்
அவள் சொன்ன சம்பவம் இது:
அவளுக்கு வாகனம் ஓட்டத் தெரியாது
’ஸ்கூட்டர் பயின்றால்
ஆபத்து நம்மோடு போகும்
அடுத்தவருக்கு பாதகமில்லை’
தோழி சிரித்தாள்:
’ஸ்கூட்டர் நம்மைக் கொல்லும்
கார் என்றால் அடுத்தவனே சாவான்
நம் உயிருக்கு உத்தரவாதமுண்டு’
நான் மோகினிக்குட்டியிடம் சொன்னேன்:
’ஸ்கூட்டர் மனிதர்களுக்குப்
பிரார்த்தனை பலிக்கும்’