இரண்டு தினங்கள் கழித்துப் பேசினேன்
‘என்ன நடந்து கொண்டிருக்கிறது’
‘ஒன்றுமில்லை’
இதயத்தை பாரம் அழுத்தியது
சிறிய மௌனத்துக்குப் பிறகு தொடங்கினேன்
ஹைடேக்கர்
காலத்தை எப்படி மனித இருப்போடு
இணைக்கிறார்
ஒரு பொருள் ஏன் இருக்கிறது
ஏன் அது இல்லாமல் இல்லை
ஒரு குறிப்பிட்ட பொருளின் இருப்பு
அது இருக்கும் காலத்தால்தானே
அர்த்தம் பெறுகிறது…
’ஏய் ஏய் நிறுத்து
நான் விளையாடுவதேயில்லையென்று
நீதான்
புகார் செய்கிறாய்
விளையாடினால் கோபித்துக் கொள்கிறாய்
என்னதான் செய்யட்டும், சொல்’
என்றாள் சிரித்தபடி
2.
நகரில் பல சிரிப்புப் பயிற்சி மையங்களைக்
கண்டிருக்கிறேன்
வயதானவர்களெல்லாம் அங்கே
சிரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்
பார்த்தால் நமக்கு அழுகை வரும்
அது வேறு விஷயம்
அம்மாதிரி இந்நகரில்
விளையாட்டுப் பயிற்சி மையங்கள் உண்டா
எனத் தேட வேண்டும்
அங்கே
இக்காலத்துப் பெண்கள்
விளையாட்டாகப் பேசினால்
அதை விளையாட்டென்று
கண்டு கொள்ளும்
வித்தை பயில வேண்டும்