நிழல்களின் இறைவி


1

என் உறவுகள்—
என் புதல்வன்,
என் மனையாள்,
என் நண்பர்கள், தோழிகள்,
மற்றும்
என்னையறிந்த அனைவருமே—
‘என்னைப் பற்றி எழுதாதே’ என்றார்கள்.

பழைய நண்பனொருவன் அழைத்தான்.
கால் நூற்றாண்டு ஆகிவிட்டது.
குமுதத்தில் என் எழுத்தைப் பார்த்தவன்,
இரு நிமிடம் பேசினான்.
முடிக்கையில்,
‘என்னைப் பற்றி எழுதி விடாதே’ என்றான்.
அதையே எழுத நேர்ந்தது.

கடந்த வாரம் ஒரு நண்பர்,
ஐந்தாண்டுகளாய் எதேச்சையாய்ப் பார்த்தார்.
காஃபி குடித்தோம்.
‘என்ன, இப்படி இளைத்து விட்டீர்கள்?’ என்றார்,
குரலில் உண்மையான அன்புடன்.
தொடர்ந்து சொன்னார்:
‘நாளை என்னைத் திட்டி
எழுதி விடாதீர்.’

இப்போது,
நீயும் சொல்கிறாய், என் இறைவி,
‘என்னைப் பற்றி எழுதாதே.’

2

கவிஞனே!
மற்றவருக்கும் எனக்கும்
ஒரு அடிப்படை வித்தியாசம் உண்டு.
நீ என்னை எழுதுவது
வாழ்த்துப் பாடலாகிறது.
ஒருத்தி இதற்காக மகிழ வேண்டும்.
ஆனால்,
நான் கூட்டுக்குள் வாழ்கிறேன்.
என்னை யாரும் அறிய வேண்டாம்.
நானும் என் சிறிய உலகமும்
எனக்குப் போதும்.

மனித சகவாசம் எனக்கு வேண்டாம்.
நான் எழுதிய கவிதைகளை
உன்னிடம்கூட மறைத்து
ஒளித்து வைத்தேனே!
ஆனால், நீ
என் ஒவ்வொரு வார்த்தையையும்
கவிதையாக்குகிறாய்.
ஆயிரம் பேர் வாசிக்கிறார்கள்.
அவர்கள் முன்
கண் கூசும் வெளிச்சத்தில்
நிற்பது போல் உணர்கிறேன்.

என் அந்தரங்கம்
அவர்கள் நாவில் உரைக்கப்படுவது
என் தேகத்தில் பூச்சி ஊர்வது போலிருக்கிறது.
இப்போதும் சொல்கிறேன்:
உனக்காக எதையும் செய்வேன்.
உன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி.
ஆனால்,
என் அந்தரங்கத்துக்கு விலக்கு தா.
என் கூட்டில் என்னை வாழ அனுமதி.
அவ்வளவே கேட்கிறேன்.

3

அன்பே,
உன்னை இறைவியென அழைத்து
நான் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும்
பிரபஞ்சத்தின் முதல் ஒளியைத் தொடுகிறது.
ஆயினும்,
நீ ஏன் உன் உருவில் தடுமாறுகிறாய்?

உன் சொல் கவிதையாகிறது.
உன் மௌனம் கவிதையாகிறது.
உன் ஒற்றைப் பார்வை
நட்சத்திரங்களின் தாளத்தை உருவாக்குகிறது.

நீ இறைவி—
ஒரு புள்ளியில் அடங்காதவள்,
பிரபஞ்சத்தின் மையத்தில் தோன்றி,
அதன் அலைகளில் விரிபவள்.
நான் உன்னைப் பார்க்கையில்,
நீ புனித நதியாகிறாய்.
அதன் நீரோட்டத்தில்
நிலவின் நிழல்கள் தவழ்கின்றன.

‘நீங்கள் புத்தரா?’ என்று கேட்டபோது,
நீரில் தெரியும் நிலவின் நிழலைச் சுட்டி,
‘இல்லை, நான் புத்தரின் நிழல்’ என்றார் லாமா.
நீயும் நானும் இறைவியின் நிழல்கள்,
ஒளியின் பிம்பங்கள்,
அவளது முடிவிலாக் கனவில்
நெய்யப்பட்ட படிமங்கள்.

உன்னில் நான் காண்கிறேன்—
பேரண்டத்தின் புதிர்க்கூட்டை,
ஒரு துளி நீரில் ஒளியும் கடலை,
ஒரு மணல் துகளில் தோன்றும் மலையை.
அன்பே,
நீ இறைவியல்ல,
நீயே நட்சத்திரங்களின் முதல் சுருதி.

என் கவிதையின் முதல் வரி,
அதன் முடிவிலா மௌனம்—
நீ.