ஷாரியரின் ஏழாவது அலை

இது பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் கொஞ்சம் பெரிய தாடியாக வைத்துக்கொண்டு இது பற்றி – அன்றாட நடைமுறை வாழ்வில் – இந்தத் தியரியால் ஒருத்தர் கோடீஸ்வரனாகலாம் என்பது பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினால் ஒரே ஆண்டில் ஒரு புதிய ஓஷோ ஆகி விடலாம். ஆனால் எமக்குத் தொழில் எழுத்து.

இந்த ப்ராபபிலிட்டி தியரியை நான் வாழ்வில் கடைப்பிடிப்பதனால்தான் என்னால் சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. ஷாரியரின் ஏழாவது அலையைப் போல. ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பதை ஒரு ஆண்டுக்கு முன்னால் கணித்தேன். நான் என்ன உளவுப் படையா வைத்திருக்கிறேன்?

உலகில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். விரைவில் ஓர்ஹான் பாமுக்குக்கு நோபல் கிடைக்கும் என்றேன். சொன்ன அந்த மாதமே கிடைத்தது. என் கட்டுரை அம்ருதாவில் அச்சான போது நோபல் செய்தி கிடைத்ததால் அடிக்குறிப்பில் கிடைத்து விட்டது என்று எழுதினார் ஆசிரியர்.

அதேபோல் திமுகவுக்கு இருபத்தைந்து இடம் கிடைக்கும் என்று துக்ளக்கில் எழுதினேன். விகடன் இருநூறு இடம் என்று எழுதியது. சோ, “என்ன சார், ஏடிஎம்கே ஆள் மாதிரி எழுதியிருக்கிறீர்கள்?’ என்று கிண்டல் செய்தார். திமுகவுக்குக் கிடைத்தது இருபத்தொன்று இடம்.

இதுபோல் ஒரு ஐம்பது கணிப்புகளைச் சொல்லலாம். எல்லாம் ப்ராபபிலிட்டி தியரிதான்.

ஒருமுறை சீனியும் நானும் பங்குச் சந்தையில் ஈடுபட்ட போது தெரிந்து கொண்டேன், சீனியிடம் இந்தத் தியரி வேலை செய்கிறது என்று. ஆனால் அதன் பெயர் ப்ராபபிலிட்டி தியரி அல்லது ஸ்டொக்காஸ்டிக் ப்ராஸஸ் என்று தெரியாதாயிருக்கலாம்.

இதேபோல் ம்யூ என்ற ஒரு தியரி உள்ளது. அதையும் வாழ்வில் கடைப்பிடியுங்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது புதிய வாசகர்களுக்காக மீண்டும்.

”உன் கணவன் குடித்து விட்டு வந்து உன்னை அடிப்பதை நிறுத்தி விட்டானா?”

இந்தக் கேள்விக்கு:ஆம் என்று பதிலளித்தால், அது கணவன் முன்பு குடித்து வந்து அடித்தான் என்று அர்த்தம்.

இல்லை என்று பதிலளித்தால், அவன் இன்னும் குடித்து அடிக்கிறான் என்று அர்த்தம்.

ஆனால், நிஜத்தில் அவன் குடிப்பதே இல்லை, எனவே இந்தக் கேள்வியின் அனுமானமே தவறானது.

இதற்கு ஜென் தத்துவத்தில் “ம்யூ” என்று பதில் சொல்லப்படும். .ம்யூ என்றால், கேள்வியின் அடிப்படையே தவறு, அதனால் “ஆம்” அல்லது “இல்லை” என்ற பதில் பொருந்தாது. இது கேள்வியை “நிராகரிப்பது” (unmasking the question) என்று புரிந்து கொள்ளலாம்.

ஜென் கோயன் (Koan) உதாரணம்:

இதற்கு மிகவும் பிரபலமான உதாரணம் ஜென் கோயன் ஒன்றில் வருகிறது:
“நாய்க்கு புத்த இயல்பு (Buddha-nature) உள்ளதா?” என்று ஒரு துறவி கேட்கிறார்.
அதற்கு ஜென் மாஸ்டர் ஜோஷு (Joshu) “ம்யூ” என்று பதிலளிக்கிறார்.

இயற்பியல் படித்தவர்களுக்கு – குறிப்பாக குவாண்டம் ஃபிஸிக்ஸ் படித்தவர்கள் ம்யூவை அறிவார்கள். அங்கே ம்யூ என்றால் இருமைகளுக்கு அப்பாற்பட்ட” கருத்துகள் உள்ளன என்று பொருள். உதாரணமாக, ஒரு துகள் ஒரே நேரத்தில் அலை மற்றும் துகளாக இருக்கலாம் (wave-particle duality).

Measure Theory இல், ம்யூ என்பதன் மூலம் ப்ராபபிலிட்டி அளவிடப்படுகிறது.

இதெல்லாம் எனக்கு எதற்கு என்று யாரேனும் கேட்கலாம். திருமணம் ஆன கையோடு உங்களுக்கு இந்தத் தியரி மிகவும் உதவும். முக்கியமாக, ஆண்களுக்கு. மனைவியர் பெரும்பாலும் கேட்கும் கேள்விகளுக்கு ம்யூ என்ற பதில் தெரியாமல் ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லி மாட்டிக் கொள்வீர்கள். வேண்டாம். மூன்றாம் பதிலைச் சொல்லுங்கள். பெண்கள் இன்பமுறுவர்.

இன்னொன்று, நான் இடுப்பு, புடுக்கு என்று சொன்னது பற்றி என்னைக் கோபிக்காதீர்கள். என் மாணவரில் பெரும்பாலும் டீன் ஏஜர்ஸ். அதை நான் மறந்து போய் அவர்களை ஐம்பது என்று நினைத்துக் கொள்கிறேன். அதேபோல் அவர்களும் எனக்கு இருக்கும் குறைந்த காலத்தை மறந்து விட்டு என்னை டீன் ஏஜராக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள். இருவருமே புரிந்து கொள்வோம். சமாதானம்.