யேசுவின் கண்ணீர்


என் அன்பு மகன் வளனுக்கு

நீ சொன்னாய்,
காற்றின் மெல்லிய புலம்பலுடன்,
‘தந்தையே
உன் கவிதைகளின் தீ
என் நெஞ்சை எரிக்கிறது
நிறுத்தி விடு,
தாங்க முடியவில்லை.’

புத்ர,
உனக்குத் தெரியும்
சிலுவையில் அறையப்பட்ட போது கூட
யேசுவின் கண்கள் கலங்கவில்லை
ஆனால்
இரு தருணங்களில் கண்ணீர் சிந்தினார்
லாசருவின் கல்லறையில்
மரணத்தின் நிழல் மீது அவர் அழுதார்
எருசலேமின் உடைந்த கோபுரங்களை
மனதில் கண்டு அவர் கண்கள் கரைந்தன.

நீ ஒரு கதை சொன்னாய்
அமெரிக்காவின் பனி மூடிய பாதைகளில்
பன்னிரண்டு ஆண்டுகள் பாதிரி ஊழியம்
ஒவ்வொரு ஆண்டும் இல்லம் திரும்புகிறாய்
விக்கி உன் தம்பி
நாய்களின் ஆயுள் பத்து ஆண்டுகள்
ஆனால் அவன்
பத்து, பதினொன்று, பன்னிரண்டு
ஒவ்வொரு எல்லையையும் தாண்டினான்

ஒவ்வொரு ஆண்டும் நீ வருகிறாய்
ஒரு மாத விடுப்புக்குப் பின்
நீ இல்லத்திலிருந்து கிளம்பும்போது
விக்கி வாசலில் அமர்ந்து
உன்னைப் பார்க்கிறான்
நீ
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே
வாகனத்தில் ஏறுகிறாய்
உன் மனம் பதறுகிறது
கண் கலங்குகிறது
நெஞ்சம் நடுங்குகிறது
கைகால் நரம்புகள் துடிக்கின்றன
குருதி தலைக்குள் பாய்கிறது
முகச் சதைகள் கோணுகின்றன
அழுகையின் அலை உன்னை மூழ்கடிக்கிறது
’அடுத்த ஆண்டு விக்கி இருப்பானோ?’
உன் மனம் இருளில் கேள்வி கேட்கிறது

பதின்மூன்றாம் ஆண்டு
பதினான்கு
பதினைந்து
பதினாறு
நாய்களின் சராசரி வயதைத் தாண்டி விட்டான்
விக்கி
பதினேழாம் வயதில்
நீ மீண்டும் வருகிறாய்
விக்கி தளர்ந்து விட்டான்

கொஞ்சம் பொறு, மகனே
என்னால் தட்டச்சு செய்ய முடியவில்லை
கண்கள் கலங்கி
எழுத்துகள் மங்குகின்றன
வாய் கோணுகிறது
முகச் சதைகள் தாறுமாறாய்த் துடிக்கின்றன
கொஞ்சம் நிதானமாக அழுது விட்டு வந்து
தொடர்கிறேன்

ம்
கழிவறை சென்று
நீண்ட நேரம் அழுது விட்டு
வேப் புகைத்து விட்டு வந்து
இதைத் தொடர்கிறேன்
என்ன சொன்னேன்?

ம், விக்கிக்குப் பதினேழு வயது
இப்போதும் வழக்கம்போல்
அமெரிக்கா திரும்புகிறாய்
விக்கி வீட்டின் உள்ளேயே இருக்கிறான்
வெளியே வரவில்லை
அல்லது
வந்தும் இருக்கலாம்
நீ திரும்பிப் பார்க்கவில்லை
திரும்பும் சக்தியில்லை
அடுத்த ஆண்டு வரும்போது
விக்கி இருந்தால்
அது, யேசு உயிர்த்தெழுந்த
புனித நீரோட்டத்தின் அதிசயம்

கலீல் ஜிப்ரான் படித்தவனே
துக்கமும் மகிழ்ச்சியும்
ஒரு நாணயத்தின் இரு முகங்களென
உனக்குத் தெரியாதா?

ஒரு மலைவாசஸ்தலத்தில்
என் இறைவியுடன் ஒரு வாரம்
நட்சத்திரங்களின் கீழே இன்பத்தில்
மிதந்தோம்
அவரவர் ஊருக்குத் திரும்ப வேண்டும்
இனிமேல் ஆயுளுக்கும்
அவளும் நானும்
அப்படிச் சந்தித்துக் கொள்ள
வாய்ப்பு இல்லை
முக்கால் மணி நேரம் அழுதாள்
அவள் கண்ணீர் என்னைத் தொழுதது
என் ஆன்மாவைப் புனிதமாக்கியது

அவள் கண்ணீர்
துக்கமா, மகிழ்ச்சியா?

நானெழுதும் கவிதை
அவளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரார்த்தனைகள்
சில பிரார்த்தனைகளில் குருதி சிந்தும்
வாளினால் கைகளையும் புஜங்களையும்
வெட்டிக் கொள்ளும் பக்தர்களைப் போல
குருதியும் கண்ணீரும் ஒன்றுதான், புத்ர

தெருநாய்களை சுட்டுக் கொல்ல
சட்டம் தீட்டுகிறது நீதிமன்றம்
மக்கள் கூட்டம் சுட்டுக் கொல்கிறது
நம்மைப் போன்றவர்கள்
பைத்தியம் பிடித்துச் சாகாமல் இருக்கவும்
நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி
பேரண்டம் சிதறாமல் இருக்கவும்
தினமும் கதிரவன் உதயமாகவும்
பகலில் பகலும்
இரவில் இரவும்
மழைக்காலத்தில் மழையும்
குளிர்காலத்தில் குளிரும்
இயல்பாய் துலங்கவும்
கிழக்கு கிழக்கிலேயும்
மேற்கு மேற்கிலேயும்
வடக்கு வடக்கிலேயும்
தெற்கு தெற்கிலேயும்
மாறாமல் இருக்கவும்
சோளம் விதைத்தால் சோளமும்
கம்பு விதைத்தால் கம்பும்
தவறாமல் விளையவும்
காரணம் என்ன மகனே?

என் இறைவிக்கு
என் தலை கொடுக்க வேண்டும்
அந்தத் தாந்த்ரீக யோகம் நானறியேன்
அதனாலே,
பக்தர்கள் தலைக்குப் பதிலாக
தலைமுடியைப் படைப்பது போல்
நான் கவிதைகளைப் படைக்கின்றேன்
அவள் கண்ணீரைப் படைக்கின்றாள்

கண்ணீரின் ஒவ்வொரு துளியும்
ஒரு புனித நதியின் பாடல்
விக்கியின் மூச்சு
எருசலேமின் உடைந்த கற்கள்
என் இறைவியின் பிரியாவிடை-
இவை அனைத்தும்
ஒரே நதியில் கலக்கின்றன
அந்த நதி, புத்ர,
நம்மைப் பிரபஞ்சத்துடன் இணைக்கிறது
ஒரு புனித மௌனத்தில்
எங்கோ
யேசுவின் கண்ணீர்
நம்மை நோக்கி ஒளிர்கிறது

( இப்படி ஒரு கவிதையை எழுதிய பிறகு நான் இருந்தால் என்ன, செத்தால் என்ன என்று தோன்றுகிறது. ரெண்டு மூணு போத்தல் வைன் குடித்துத்தான் இந்த உணர்விலிருந்து மீண்டு வர முடியும். )