பொதுவாக ஃபேஸ்புக்கில் என் கவிதைக்கு பன்னிரண்டு பேர் விருப்பக்குறி இடுவார்கள். அந்தப் பன்னிரண்டு பேரும் என் நெருங்கிய நண்பர்கள். ஆனால் யேசுவின் கண்ணீர் பலரையும் பதறச் செய்திருக்கிறது.
ஏகப்பட்ட நண்பர்கள் எனக்கு வாட்ஸப் செய்தி அனுப்பினார்கள். ஆச்சரியகரமாக நான் ஏழு மாதங்களுக்கு மேலாக தொடர்பு கொள்ளாத என் தோழிகளில் பலரும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி எழுதியிருக்கிறார்கள்.
ஒரு கடிதம்:
நீங்கள் துக்கத்தில் இல்லை. பரவசத்தில் வாழ்கிறீர்கள். காதல் என்பது உடல் இச்சை, உடல் கவர்ச்சி, மன ரீதியில் இருவர் ஒருவருக்கொருவர் ஈடுபாடு கொள்ளுதல் என்றே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதை ஆன்மீகமாகவும் பெரும் பரவசமாகவும் கொண்டாட்டமாகவும் உடல் இச்சையை மீறிய வேறோர் நிலைக்கு (அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை) கொண்டு சென்று விட்டீர்கள் என்பதை யேசுவின் கண்ணீர் என்ற கவிதையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. பொறாமை ஏற்பட்டாலும் உங்கள் இறைவிக்கு நான் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நீங்கள் என் ஹீரோ. உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. இதை நானும் அடிக்கடி உங்களிடம் சொல்லியிருக்கிறேன் என்பதை இப்போதைய நிலையில் நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் இப்போது உண்மையிலேயே சொல்கிறேன். உங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் அந்தப் பெண்ணை வணங்குகிறேன். மிக முக்கியமாக, இந்தக் கவிதைக்கெல்லாம் அவளே கிரியா ஊக்கியாக இருக்கிறாள் என்பதற்காக அவளுக்கு என் நன்றி. அவள் என்னை விட மிகவும் சிறியவளாக இருக்க வேண்டும் என யூகிப்பதால் அவள் என்றே குறிப்பிடுகிறேன். சாரு, ஒரு வேண்டுகோள். யார் சொன்னாலும் கவிதை எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். இது உங்களின் சமூகக் கடமை. நீங்கள் இங்கே வந்த போது சொன்ன உங்கள் வார்த்தைகளையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இது தமிழுக்கும் இந்த சமூகத்துக்கும் நீங்கள் அளித்துக்கொண்டிருக்கும் கொடை. இதை உங்களைத் தவிர வேறு எவரும் செய்ய இயலாது.
மீண்டும் நாம் சந்தித்தால் நல்ல ஒரு தோழியாகவே உங்களை எதிர்கொள்வேன். உங்களை என் அன்பினால் ஒருபோதும் சங்கடப்படுத்த மாட்டேன். உங்களிடமிருந்தும் உங்கள் எழுத்திடமிருந்தும் கற்றவள். உங்களைப் போல்தான் இருப்பேன்.
தொடர்ந்து உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே பிரதி செய்யாமல்.
என் பெயரை வெளியிட வேண்டாம். இங்கே என்னைப் பிய்த்துத் தின்று விடுவார்கள். அவர்களை சமாளிக்க என் ஒருத்தியால் முடியாது.
with love and hugs, (மன்னியுங்கள், பழக்க தோஷம்!)
….
தோழிகள் எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் என் மாணவிகளாக இருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பது எனக்கு உவகை அளிக்கிறது. அவர்களின் பரந்து பட்ட அன்பு என்னை நெகிழச் செய்கிறது.
தொடர்ந்து எனக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கும் வாசகி செந்தமிழின் கடிதமும் இங்கே பகிர வேண்டிய ஒன்று.
சாரு,
உங்களின் எழுத்தை இரண்டு வருடங்களாக வாசித்து வருகிறேன். புனைவில் எத்தனையோ கதாப்பாத்திரங்கள் துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கும். ஆனால் ஒருமுறைகூட எதற்கும் கண்ணீர் வந்ததில்லை. எல்லாமே வாழ்வதற்கான நம்பிக்கை விதைகளையே விதைத்துச் சென்றன. மூன்று மாதங்களாக கிட்டதட்ட நீங்கள் எழுதும் எல்லா கவிதைகளையும் வாசித்து வருகிறேன். அதிலும் எதற்கும் கண்ணீர் வந்ததில்லை. ஆனால் இன்றைய யேசுவின் கண்ணீரை என்னால் பாதிகூட தாண்ட முடியவில்லை. நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. சில நிமிடங்கள் கழித்து சமநிலைக்கு வந்து மீண்டும் சிரமப்பட்டு படித்து முடித்தேன். கண்ணீருடனே இதனை உங்களுக்கு எழுதுகிறேன். மீண்டும் இப்படியொரு கவிதை உங்களிடமிருந்து பிறக்கக் வேண்டாம் என்றே வேண்டுகிறேன்.
செந்தமிழ்
செந்தமிழ் சொல்வது உண்மைதான். என்னாலேயே கண்ணீரையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பரவசமும் துக்கமும் ஒன்றுதான் என்பதே அக்கவிதையின் சாரம். அதை என்னுடன் பழகிய தோழிகள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். அதற்குத்தான் முந்தைய கடிதம் சாட்சியம் அளிக்கிறது.
2017இல் பிரபு காளிதாஸ் எடுத்த மூன்று புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.



ஸோரோவையும் பப்புவையும் நினைத்தால் ஏன் துக்கம் மேலிடுகிறது என்றால், அந்த இரண்டையும் நான் நேசிக்கவே ஆரம்பித்திருக்கவில்லை என்பதுதான். இத்தனை சீக்கிரம் போகும் என்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னொரு முறை வாழ நேர்ந்தால் இன்னும் அதிகமாக நேசித்திருப்பேன். இதையேதான் என் நண்பர்களுக்கும் சொல்கிறேன். நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். உங்களுக்குப் பிரியமானவர்களிடம் அவர்கள் இந்த பூமியில் இருக்கும்போதே அன்பு செலுத்தி முடித்து விடுங்கள். பாக்கி வைக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் அன்பு செலுத்த நினைக்கும்போது அவர்கள் கிளம்பி விடுவார்கள். சே, இது ஒரு கவிதை. இதை இங்கே வீணடித்து விட்டேன்.
பிச்சைக்காரன் ஃபேஸ்புக்கில்: கவிதை என்ற பெயரில் பாலியல் பகல் கனவுகளை எழுதிக்குவிக்கும் தமிழ்ச்சூழலில் உங்கள் கவிதைகள் கவிதை எனும் மொழியின் உச்சப்பட்ச சாத்தியங்களைத் தொடுகிறது.உங்களது இத்தனை வருடங்களான இலக்கியப்பயணமே இது போன்ற கவிதைகள் எனும் வரம் பெறுவதற்கான தவம் என்றே தோன்றுகிறது
கவிதை என்ற பெயரில் பாலியல் பகல் கனவுகளை எழுதிக்குவிக்கும் தமிழ்ச்சூழலில் உங்கள் கவிதைகள் கவிதை எனும் மொழியின் உச்சப்பட்ச சாத்தியங்களைத் தொடுகிறது.உங்களது இத்தனை வருடங்களான இலக்கியப்பயணமே இது போன்ற கவிதைகள் எனும் வரம் பெறுவதற்கான தவம் என்றே தோன்றுகிறது
Kartigeyan Saundarajanசாரு, உங்கள் அனைத்து கவிதைகளையும் படித்ததில்லை. இருந்தும் அருதியிட்டுக் கூறுவேன், இதுவே நீங்கள் எழுதிய மிகச் சிறந்த கவிதை!!நன்றி சாரு!
இன்னொரு வாட்ஸப் செய்தி: Timeless poem. This poem could have sprung from no hand but yours. It carries sorrow and serenity together, like wisdom born of pain… a staggering heart laid bare, every word a raw nerve on paper. By S.
எல்லோருக்கும் நன்றி. எப்போதும் சொல்வதுதான். நான் எழுதும் ஒவ்வொரு கதையும், நாவலும், கட்டுரையும், கவிதையும் எனக்கு இருபது வயதுப் பையன் எழுதும் முதல் முயற்சி என்றே தோன்றுகிறது. உங்கள் பாராட்டு வார்த்தைகள்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத வைக்கிறது.
முக்கியமாக இறைவி. எனக்காக ஒரு கவிதை எழுது என்றாள். நிற்காமல் கொட்டுகிறது.
இடையில் இன்று ஒரு ட்ராஜிக் காமெடி கவிதை எழுதினேன். படித்தால் வயிறு வலிக்க சிரிப்பீர்கள். அதை நான் இரண்டு நாள் கழித்து வெளியிடுகிறேன். நாளை நிச்சயம் வளனின் நீண்ட சிறுகதை வெளியாகும். அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம். நீண்ட நாட்களாக என்னிடமே இருக்கிறது.