உன்னிடம் ஒரு ரகசியம்
இருக்கிறதென்பதை
ஊர் அறிந்து விட்டால்
அது என்ன ரகசியம்
என்பது தெரியாவிட்டாலும்
ரகசியம்
புனிதம் இழந்து போகிறது
ஒரு ஞானி நிரூபணம் தருவதற்காக
அதிசயங்கள் நிகழ்த்துவது போல
ஒரு நட்சத்திரம் ஆயுளை முடித்துக்கொண்டு
தூசியாய் விழுவதைப் போல
மரம் பட்டுப் போவதைப் போல
சிங்கம் முதுமையடைவதைப் போல
பேரரசன் பிச்சைக்காரனாவதைப் போல
காதலில் விழுந்தவர்கள் துரோகத்தை
எதிர்கொள்வதைப் போல
குயில் தன் குரலை இழந்து விடுவதைப் போல
வீட்டுப் பிராணிகள் அனாதையாவதைப் போல
சிசு தன் தாயை இழப்பது போல
ஆண் தன் ஆண்மையையும்
பெண் தன் இளமையையும் இழப்பது போல
மலை நீரற்றுப் போவதைப் போல
நதி வற்றி விடுவதைப் போல
ஒரு மொழி காணாமல் போவதைப் போல
ஒரு தேசம் தன் ஆன்மாவை இழப்பது போல
ஒரு மகாத்மா சுட்டுக் கொல்லப்படுவதைப் போல
மழை பொய்த்து விடுவதைப் போல
ஒரு மேதை ஒரு முட்டாளிடம் மண்டியிடுவதைப் போல
ஒரு மலர் தன் மணத்தை இழப்பது போல
பறவையின் றெக்கை முறிந்து விடுவது போல
ஒரு கவிதை வாசகியை இழப்பது போல
ஒரு நண்பன் நம் நம்பிக்கையை உடைப்பது போல
காலம் தன் கதையை மறந்து விடுவதைப் போல
ஒரு பயணி தன் பாதையைத் தொலைப்பது போல
நெருப்பு தன் வெப்பத்தை இழப்பது போல
கடல் தன் அலைகளை மறப்பது போல
அமிர்தம் நஞ்சாவதைப் போல
உயிருக்குயிராய் பழகிய காதலி நம்மை
நிரந்தரமாய்ப் பிரிந்து போவதைப் போல
ஒரு கனவு தன் மாயத்தை இழப்பது போல…