மரணம் பற்றி
மனுஷ்ய புத்திரனின் கவிதை ஒன்று
மரணம் பற்றி நினைக்க வைத்தது
மரணம் குறித்து எனக்கு அச்சமில்லை
ஆனால் ஒரே ஒரு புகார் உண்டு
அவர் எனக்காக எழுதும்
இரங்கல் கவிதையை
வாசிக்க முடியாமல் போகும்
என் மரணத்தின் போது
எத்தனை பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள்
எத்தனை பெண்கள் மயங்கி விழுகிறார்கள்
அல்லது
அப்படி எதுவுமே நடக்கவில்லையா
யார் யார் என்னைப் பற்றி
என்னென்ன எழுதுகிறார்கள்
அது பொய்யாக இருந்தாலும்
அந்த வார்த்தைகளைப் படிக்க வேண்டும்
மனுஷ் ஒரு குறிப்பு அனுப்பினார்
சாவின் துயரம்,
நம் சாவுக்குக் காத்திருந்தவர்களும்
ஒரு மலர் வளையத்தோடு
வந்து நிற்பார்கள்
உண்மைதான்
ஆனால்
நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை
எனக்கு எதிரிகள் இல்லை
என்னை வெறுக்கும் அளவுக்கு
யாரும் என்னை அறிந்திருக்கவில்லை
நான் வாழும் சமூகம்
எழுத்தாளன் என்றால் என்னவென்றே
தெரியாத கூட்டம்
எழுத்தாளனை ஏன் வெறுக்க வேண்டும்
தெருநாய் கடித்தால் கொல்கிறார்கள்
நான் மண்புழு
மண்புழுவை யார் வெறுப்பார்
மரணத்திடம் ஒரே ஒரு கோரிக்கை
என்னைக் கொன்ற பிறகு
கொஞ்ச நேரம் உயிரைத்
திருப்பிக் கொடு
எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்
என் பெயரைச் சொல்லி யார் அழுகிறார்கள்
யார் என்னை மறந்து சிரிக்கிறார்கள்
பிறகு கொடுத்த நேரத்தில்
என்னைத் திருப்பி எடுத்துக்கொள்
முக்கியமாக,
இரங்கல் கவிதைகளைப் படிக்க வேண்டும்
வேறு எந்த ஆசையுமில்லை