ரத்து செய்யப்பட்ட மெஸேஜுகளின் மர்மம்

எனக்கு ஷூக்கள் மீது பைத்தியம்
பல வண்ணங்களில் ஷூக்கள்
என்னிடம் உண்டு
கறுப்பு வெள்ளையை விடுங்கள்
பச்சை, மஞ்சள், சிவப்பு எல்லாம் உண்டு
பிங்க் மட்டும் இல்லை
எங்கு தேடியதும் கிடைக்கவில்லை
ஆனால்
அமெரிக்காவில் கிடைக்கிறது
வண்ணம் மட்டும் போதாது
இருட்டில் ஜொலிக்க வேண்டும்
நியான் என்கிறார்கள்
ஜப்பான் நகர பப்களில்
நான் நடனமாடும்போது
என் பச்சை நிற நியான் ஷூவுக்காகவே
என்னோடு ஆடிய இளம் பெண்கள் பலருண்டு

பிங்க் மட்டும் கிடைக்கவில்லை
நண்பன் ரவி அடிக்கடி அமெரிக்கா செல்வான்
அவனுக்கு அங்கே நேரமில்லை
இன்னொரு நண்பர் வாங்கி வருவதாகச் சொன்னார்

ஆனால் அவருக்கு வெளியுலகம் தெரியாது
ப்ளாக் ஷு காலத்து மனிதர்
ரவியிடம் விவரம் கேட்டு மெஸேஜ் செய்தேன்
இரவு ஒன்பது
ஒன்பதே காலுக்கு ஃபோனைப் பார்த்தேன்
ஐந்து மெஸேஜ் அனுப்பி
ஐந்தையும் ரத்து செய்திருந்தான்
என்ன அனுப்பியிருப்பான்?
மண்டையில் குடைந்தது
ஃபோனில் அழைக்கலாமா?
அவன் மனையாள் ஒரு ரவுடி

ஃபோனை எடுத்தேன்
1 என்று அனுப்பி
சில நொடியில் அவனுக்கும் சேர்த்து
ரத்து செய்தேன்
அடுத்த நிமிடமே 2 என்று அனுப்பினேன்
அதையும் சில நொடியில்
அவனுக்கும் சேர்த்து ரத்து செய்தேன்
அடுத்த நிமிடமே 3 என அனுப்பி
சில நொடியில் ரத்து செய்தேன்
அடுத்து 4
விஷயம் என்னவென்றால்
அவன் பார்ப்பதற்குள் ரத்து செய்ய வேண்டும்
5 அனுப்பலாமா என யோசித்தேன்
மனதில் கருணை தோன்றியது
நாலோடு விட்டு விட்டேன்

பத்து மணி வாக்கில் அழைத்தான்
என்ன விஷயம், ஏன் இத்தனை மெஸேஜ்
அனுப்பி
எல்லாவற்றையும் ரத்து செய்திருக்கிறாய்
என்றான்

இது நான் கேட்க வேண்டியது என்றேன்
’லிங்கைத் தவறாக அனுப்பி விட்டேன்
அதனால் நீக்கினேன்
நாளை சரியாக அனுப்பலாம் என்று நினைத்தேன்
சரி, நீ என்ன அனுப்பினாய்?
அதுவும் இத்தனை மெஸேஜ்?’
என்றான்.

நான் அனுப்பியதைச் சொன்னேன்
ஏன் என்றான்
’நீ மெஸேஜை ரத்து செய்ததால்
மன உளைச்சல்
ஆனாலும் நட்புக்காக
ஐந்தாவது அனுப்பவில்லை.’

‘சொல்வதைக் கேள்,
நீ ஒரு ஸைக்கியாட்ரிஸ்டைக் காண்பது
நலம்’ என்றான்