தற்கொலைக்கு நாள் குறித்து
ஏற்பாடுகளை முடித்த அன்று
இறைவியின் இரு வார்த்தை
என்னுயிரை மீட்டது
‘நான் செத்தால் என்ன செய்வாய்?’
’செத்து விடுவேன்’
மறுநாள் அது பற்றிப் பேசும்போது
’நான் சொன்னது ஞாபகமில்லை
நானுமே அப்போது நிம்மதி கெட்டிருந்தேன்’
என்றாள்
ஆச்சரியமில்லை
அவள் சொல்லாமலிருந்திருந்தாலும்
பெரிய விஷயமில்லை
தற்கொலையெல்லாம் அவளுக்கு
ஜுஜுபி
மரணத்தையே விழுங்கி
வாந்தியால் தப்பியவள்
என் தற்கொலைக் கவிதையைப் படித்து விட்டு
ஏதோ சினிமாவைப் பற்றிக் கேட்பது போல்
’நீ தற்கொலை செய்து கொண்டால்
உன் மனைவி என்ன செய்வாள்? பூனைகள் என்ன செய்யும்?’
என்றாள்
’ஒரு பிரச்சினையுமில்லை; பூனைகளை
அழைத்துக்கொண்டு மகன் வீடு
சென்று விடுவாள்’
பிறகு
சென்னையின் வெயிலையும் மழையையும்
விசாரிப்பது போல்
என்ன மாத்திரை என்றாள்
சொன்னேன்
அவள் போட்ட மாத்திரைதானாம்
’தற்கொலைக்கு உகந்த
மாத்திரையில்லை,
விரைவில் வாந்து வந்து விடும்’
என அனுபவம் பகிர்ந்தாள்
அதோடு பேச்சு மாறியது
தற்கொலைக் கவிதை படித்துவிட்டு
யாரேனும் அழைப்பார்களா எனப் பார்த்தேன்
அனைவருக்கும் அச்சமென
இன்று தெரிந்தது
கொக்கரக்கோ உணர்வுகளால் ஆளப்படாதவன்
ஆனாலும் அவன் ஒரு ஆள்தான்
நாலு பேரை அழைத்து என்னை
விசாரிக்கச் சொல்லியிருக்கிறான்
நாலு பேரும் கை விரித்து விட்டார்களென
இன்று சொன்னான்
அவனே அழைத்திருப்பான்
இறைவியை முன்வைத்து
எனக்கும் அவனுக்கும் கொஞ்சம்
மனத்தாங்கல்
தற்கொலை முயற்சியால் ஆன பயனென்ன?
தற்கொலை செய்பவர்களின் மீதிருந்த
அசூயை நீங்கியது
வலி தாங்காமல்தான்
அந்த முடிவை எடுக்கிறார்கள்
அது ஒரு கருணைக் கொலை
தன் மீதான கருணை
அவர்களை இன்று நான் ஆசீர்வதிக்கிறேன்
ஆனால்,
என் மனையாளின் தேள்கடி இல்லாமல்
ஒரு நாளாவது வாழ வேண்டுமென்ற
ஆசை நிறைவேறாமல் கிளம்புகிறோமே
என்று மட்டும் வருந்தினேன்
இறைவிக்கென்ன?
சாவுறியா
சாவு
நானும் சாகிறேன்
மரணம் ஒரு பொருட்டே இல்லை
அவளையொத்த மனமுடைய
மூன்று பெண்களைப் பார்த்திருக்கிறேன்
அத்தை
அத்தை மகள்
அத்தை மகளின் மகள்
மூவருமே தற்கொலையில் மடிந்தவர்கள்
எல்லா ஆண்களுக்கும் ஒரு கனவு
தான் செத்தால் தன் காதலியும்
செத்து விடுவாள்
எனக்கு அந்த ஆசையில்லை
என்னை விட இறைவி
நாற்பத்தைந்து வயது இளையவள்
அவள் சாகக் கூடாது
என் மரணத்துக்குப் பிறகு
வேலைகள் சிலவற்றை
அவளுக்கு ஒதுக்கியிருந்தேன்
முடிக்கப்படாத என் நாவல்களை
அவள் முடிக்க வேண்டும்
இறைவியை ஞானியென்றும்
சமயங்களில் ரொபாட்டென்றும்
நான் அழைப்பதுண்டு
யார் ஞானி, யார் ரொபாட்?
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம்
சென்னையில்
டெண்டூல்கர் பேட்ஸ்மேன்
இறுதிப் பந்து
நாலு ரன் – வெற்றி
மூணு – டை
இரண்டு – தோல்வி
மைதானமே மூச்சு விட மறந்து விட்டது
ஒருவன் மட்டும்
எதுவுமே நடக்காதது போல் அமர்ந்திருக்கிறான்
டெண்டூல்கர் அடித்தது சிக்ஸர்
மைதானம் வெடித்தது
உற்சாக வெள்ளம்
அந்த ஒருவன் மட்டும் அப்போதும்
எதுவுமே நடக்காதது போல் அமர்ந்திருக்கிறான்
இறைவியும் அப்படித்தான்
ப்ளூ டிக்கை மறைப்பேன்
ஏனென்று கேட்க மாட்டாள்
ப்ளூ டிக்கை மீண்டும் கொண்டு வருவேன்
ஏனென்று கேட்க மாட்டாள்
மீண்டும் ப்ளூ டிக்கை மறைப்பேன்
ஏனென்று கேட்க மாட்டாள்
அவள் ப்ளூ டிக்கை மறைத்தது பற்றி
இருபத்தைந்து கவிதை எழுதுவேன்
ஏனென்று கேட்க மாட்டாள்
ஒருநாள் சொன்னாள்
’நானும் மற்ற பெண்களைப் போலிருந்தால்
நீ செய்யும் அக்குறும்புக்கு ஒரே நாளில்
உன்னை விட்டு ஓடியிருப்பேன்
ரொபாட்டாக இருப்பதால்தான்
உன்னை சகிக்கிறேன்’
அப்படியே இரு அன்பே
என நினைத்துக்கொண்டேன்
இல்லாவிட்டால்
அவளுக்கு வருத்தம் வந்தால்
உலகம் தாங்காது
ஒரு வாரம் கூட்டுக்குள் சுருங்கி விடுவாள்
அது ஒரு மாதமாகவும் நீளும்
தேவையா?
கொக்கரக்கோ சொன்னான்
’நெருப்பில்லாமல் புகையாது
நீ கற்பனையாய் எழுத மாட்டாய்
ஏதோ இருக்கிறது
அதனால்தான் விசாரிக்கச் சொன்னேன்’
மௌனியே தவிர
இறைவி செயல்களில் குறைச்சலில்லை
இதுவரை யாரும் செய்யாத
செய்யத் துணியாத அனைத்தையும்
எனக்காகச் செய்தவள்
ஒன்றைச் சொல்லலாம்
ஆனால் சத்தியம் தடுக்கிறது
’உன் அந்தரங்கத்தில் என் அந்தரங்கமும்
இருக்கிறது
அதை மட்டும் நினைவில் கொள்’
என்றாள்
அதனால்
அவள் எனக்கு என்ன செய்தாள்
என்று மட்டும் கேட்காதீர்