இன்று மைலாப்பூர் அஞ்சல் நிலையத்தில்
ஒரு வேலை
வேலை முடிய மூன்று மணி நேரம்
அத்தனை நேரமும்
நான் ஒரு பைத்தியக்காரனைப் போல்
உணர்ந்தேன்
கோணினேன்
நெளிந்தேன்
வளைந்தேன்
முறுக்கினேன்
கொட்டாவியாய் விட்டுத் தள்ளினேன்
மோட்டுவளையைப் பார்த்தேன்
வேண்டாம்
அதை விவரிக்க இயலாது
அப்போது ஒருத்தன் வந்தான்
அகவை அறுபது இருக்கலாம்
நெற்றியில் பட்டை
குமாஸ்தா இங்லீஷில் அஞ்சல் நிலைய
அதிகாரியுடன் பேசினான்
பார்த்தாலே தெரிந்தது
பேச்சிலும் புரிந்தது
குறிப்பிட்ட உயர்சாதிக்காரன்
அவனுடைய தகப்பனும் தாத்தனும்
ஹிண்டு நாளிதழுக்குக் கடிதங்கள்
எழுதியிருப்பார்கள்
இவன் அவர்களின் வாரிசாக
நின்றான்
சொன்னான்,
’அஞ்சல் நிலைய வாசலில்
ஒரு நாய் படுத்துக் கிடக்கிறது
அதை அப்புறப்படுத்துங்கள்
தில்லி உச்சநீதி மன்றமே
நாய்களை அப்புறப்படுத்த
உத்தரவு போட்டு விட்டது
நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?
அது யாரையும் கடித்து விட்டால்
கடிபட்டவருக்கும் ஆபத்து
உங்கள் வேலைக்கும் ஆபத்து
உடனடியாய் அப்புறப்படுத்துங்கள்’
அஞ்சல் நிலைய அதிகாரி சொன்னார்:
‘அந்த நாய் கடிக்காது
யாரையும் கடித்ததில்லை
எட்டு ஆண்டுகளாய் அஞ்சல் நிலைய
வாசலில் வாசம் பண்ணுகிறது
வருவோர் போவோர்
உணவிடுகிறார்கள்’
திரும்பவும் அந்தப் பட்டைப் பேர்வழி
உச்சநீதிமன்றத் தீர்ப்பையே இழுத்து
சொன்னதையே சொன்னான்
எறும்பைக் கூட கொல்லாமல்
காகிதத்தில் எடுத்துப் போடும்
சாத்வீகப் பேர்வழியான
எனக்கே அவன் குரல்வளையைக்
குதற வேண்டும் போலிருந்தது
கல்லும் புல்லும் பிரம்மம்
நீயும் நானும் பிரம்மம்
எனச் சொன்ன
ஆதி சங்கரனின் வழித்தோன்றல்
இன்று நாயைக் கொல்லும்
புரட்சிக்காரனாகிறான்
அண்டை மாநிலத்தில் ஒருவன்
ஈராயிரத்து எண்ணூறு நாய்களை
விஷம் கொடுத்துக் கொன்றதாகக்
கொக்கரிக்கிறான்
இந்த உலகிலேயே அதிக மனிதர்களைக்
காவு வாங்கிய நகரம் தில்லி
அதன் ஒவ்வொரு பிடி மண்ணிலும்
ஓராயிரம் மனித ரத்தத்தின் வாடை
படிந்திருக்கிறது
அந்த நகரம்
கண்ணகியின் சீற்றத்தில் கருகிய
மதுரையைப் போல் எரிந்து கருகட்டும்
நாய்களைக் கொல்லும்
இந்த தேசம்
அழிந்து சாம்பலாகட்டும்