ச்சோர் மச்சாயே ஷோர்!- 1

நம் குறியியல் தம்பி மீண்டும் என் மீது சேற்றை வாரி அடித்திருக்கிறார். ஒரே வார்த்தை. வன்மம் கொண்டு தாக்குகிறேனாம்.

டேய் தம்பி. நீ சாட் ஜிபிடி, கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் போன்றவற்றால் மொழிபெயர்த்து உன் பெயரைப் போட்டுக் கொண்ட மோசடி வேலை பற்றிப் பலரும் சான்றுகளோடு எழுதி விட்டார்கள். அதற்கு பதில் சொல்லாமல் நீ நாங்களெல்லாம் உன் மீது வன்மம் கொண்டு தாக்குகிறோம் என்கிறாய்.

தம்பி, நீ இரண்டாயிரம் ஆண்டுகளாய் வளர்த்த வனத்தைத் தீயிட்டுக் கொளுத்த முனைந்தாய். ஊர்க் கேணியில் விஷம் வைத்திருக்கிறாய். இதைத் தட்டிக் கேட்டால் என்னவோ வன்மம் வன்மம் என்று பிதற்றுகிறாயே, என்ன நியாயம் இது? ஒருத்தன் ஊர்க் கேணியில் விஷம் வைத்தான். அவனை சிலர் கேள்வி கேட்கிறார்கள். நீயோ வன்மம் வன்மம் என்கிறாய். என்னடா தம்பி நியாயம்? நீ செய்தது கிரிமினல் வேலை. நீ உண்மையில் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். உன்னை வெளியிட்ட பதிப்பகம் எல்லா புத்தகங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டு பணத்தைத் திரும்பக் கொடுத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை என்றால் அப்படித்தான். நான் ஒரு சட்டை ஆர்டர் செய்தேன். வந்ததோ சாணிப் பொட்டலம். அதை அனுப்பிய நிறுவனம் எனக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டுமா, இல்லையா? அமேஸானில் அப்படித்தானே செய்கிறார்கள்? நீங்கள் யாராவது சொன்னீர்களா, இது செயற்கை நுண்ணறிவைக் கொண்டும், கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் கொண்டும் செய்த மொழிபெயர்ப்பு என்று?

உம்மாலும் பதிப்பகத்தாலும் கடுமையாக ஏமாற்றப்பட்ட நாங்கள் இந்தக் கதறு கதறுகிறோமே, பதிப்பகத்திடமிருந்து இதுவரை ஒரு வார்த்தை வருத்தம் வந்ததா? எதிர் பதிப்பகம் என்ன அச்சாஃபீஸா? பதிப்பகம்தானே நடத்துகிறீர்கள்? எம்டிஎம்மின் இந்த ஏமாற்றுவேலைக்கு நீங்களும் ஏமாந்தீர்கள், சரி, ஆனால் அதைப் பதிப்பித்தவர் என்ற முறையில் உங்களுக்கான பொறுப்பு எங்கே போயிற்று?

இன்னொரு பதிவில் மொழிபெயர்ப்பாளர் கேட்கிறார். அவர்களுக்கு என்னை விட ஆங்கில நன்றாகத் தெரியும். நல்லது. அவர்களுக்கு என்னை விடத் தமிழ் நன்றாகத் தெரியும். நல்லது. அவர்களுக்கு என்னை விட ஃப்ரெஞ்ச் நன்றாகத் தெரியும். நல்லது. அவர்களுக்கு ஜெர்மன் மொழி என்னை விட நன்றாகத் தெரியும். நல்லது. அவர்களுக்கு என்னை விட சமஸ்கிருதம் நன்றாகத் தெரியும். நல்லது. அவர்கள் என்னை விடச் சிறந்த படிப்பாளிகள். நல்லது. அவர்கள் என்னை விடச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள். நல்லது. அவர்கள் என்னை விடச் சிறந்த படைப்பாளிகள். நல்லது. அவர்கள் என்னை விட அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் வாழ்க்கையில் இழப்புகள் ஏதுமில்லை. நல்லது. ஆனால் என்னை விடச் சிறந்த அக உலகம் ஏன் வன்முறைகளாலும், வக்கிரங்களாலும், வசவுச் சொற்களாலும், ஆபாசங்களாலும், அருவருக்கத்தக்க அசிங்கங்களாலும் நிறைந்திருக்கிறது?

டேய் படுபாவித் தம்பி, என்ன அழகான தமிழ்? என்ன அருமையான, கவித்துவமான மொழி? இதை வைத்துக் கொண்டா நீ கூகிள் ட்ரான்ஸ்லேட்டரை நம்பி மொழிபெயர்த்துக் கொடுத்தாய்? என்னைத் திட்டும் போது மட்டும் கவித்துவம் பொத்துக் கொண்டு வருகிறது, பார்த்தாயா? இந்த மொழியில் நீ ரோஜாவின் பெயரை மொழிபெயர்த்திருந்தால் உன்னை ஆகாசத்தில் உயர்த்திப் பேசியிருப்பேனே?

சரி, உனக்கு நான் பதில் சொல்கிறேன்.

நான் எந்த விதத்திலும் உன்னை விட மேம்பட்டவன் இல்லை. என் அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சேரியில் குடியானவர்களுக்கு இட்லி சுட்டு விற்றுப் பிழைத்தவர். என் நைனா ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார். உன் தந்தையோ எண்டவ்மண்ட் போர்டில் ஐஏஎஸ் அதிகாரி. நீயோ சர்வதேசமெங்கும் போய் விரிவுரை ஆற்றும் பேராசிரியர். ரெண்டு மூணு டாக்டர் பட்டம் பெற்றவன். நானோ பியுசி ஃபெயில். பியுசி என்றால் பன்னண்டாம் கிளாஸ். மேத்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஆங்கிலம், ஏன், தமிழ் உட்பட ஃபெயில் ஆனவன். உன்னைப் போல் பேராசிரியன் அல்ல. ஸ்டெனோ வேலை பார்த்தவன். போன வருஷம் கூட துபாய் விமான நிலையத்தில் ஏதோ உணவுப் பண்டம் வாங்கும் போது டே அவே என்று பணிப்பெண் கேட்ட போது வாட் வாட் என்றேன். டேக் அவே புரியவில்லை. பிறகுதான் அது பார்சலைத்தான் டேக் அவே எனச் சொல்கிறாள் எனப் புரிந்தது. நம் சரவண பவனில் பார்சல் என்று தானே சொல்வார்கள் என்று நினைத்துக்கொண்டேன்?

நான் அடிப்படையில் ஒரு முட்டாள். உன்னைப் போல் அறிவாளி அல்ல. அதனால்தான் கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு முட்டாள் சொன்ன கதை என்று கதை எழுதினேன். அதை நீ எம்.ஏ. மாணவனாக இருந்தபோது நீ நடத்திய பத்திரிகையில்தான் பிரசுரித்தாய். நீதான் புத்திஜீவி. நான் முட்டாள்.

எனக்கு தமிழைத் தவிர எந்த மொழியும் தெரியாது. ஆங்கிலத்தில் நான் திக்கித் திணறித்தான் எழுதுகிறேன். நான் முட்டாள் என்பதால் ஒரு எடிட்டரிடம் கொடுக்கிறேன். நீ அறிவாளிப் புடுங்கி என்பதால் கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் செய்து கொடுத்ததை அப்படியே பதிப்பாளரிடம் கொடுத்து விட்டாய். அவரும் உன்னை ஸ்காலர் என நினைத்து அப்படியே போட்டு விட்டார். நீ ஸ்காலர்தான். சந்தேகமே இல்லை. ஆனால் ஃப்ராடு வேலை செய்கிறாய். அதனால்தான் தட்டிக் கேட்கிறோம். தட்டிக் கேட்டால் வன்முறை, வக்கிரம், வசவு, ஆபாசம், அருவருக்கத் தக்க அசிங்கம்?

டேய் தம்பி, நீ ஊர்க் கேணியில் நஞ்சைப் பாய்ச்சினாய்? கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் மூலம் தமிழை வன்கலவி செய்தாய். உன்னைத் தட்டிக் கேட்டால், திட்டினால் அது அருவருக்கத் தக்க அசிங்கமா? வன்முறையா? அப்படியானால் நீ செய்த காரியத்தை என்னவென்று சொல்வாய்? நீயே சொல்? நீ செய்தது ஃப்ராடு வேலை. மோசடி வேலை. ஏமாற்று வேலை. சமூகத்தின் மீதும், எங்கள் மொழியின் மீதும் வைத்த அருவருக்கத் தக்க அசிங்கம். இதற்கு நீ ஒழுங்காக பதில் சொல்ல வேண்டும். அல்லது, கை கூப்பி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இதற்கிடையில் ராம்ஜி நரசிம்மனையும் வம்புக்கு இழுத்திருக்கிறாய். அவர் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் பார்ட்னர். இதோ உன் வார்த்தைகளை ஸ்கிரீன் ஷாட்டாகத் தருகிறேன்.

இதில் நீ சொல்லியிருக்கிறபடி பார்த்தால், உன் திருட்டுத்தனம் அம்பலமான பிறகு ராம்ஜி உன்னை அழைத்து உன் நூல்களை வெளியிடுவதாகச் சொன்னதாக அர்த்தம் வருகிறது. ஆனால் அவர் உன்னைக் கேட்டதோ ரோஜாவின் பெயர் மோசடி நூல் வெளிவருவதற்கு முன்பு. ஒரு பதிப்பகம் பல எழுத்தாளர்களை அழைத்து அவ்வப்போது புத்தகம் கேட்பது மரபு. அவர் ஒன்றும் உன்னிடம் உன் திருட்டுத்தனம் வெளிவந்த பிறகு அதைக் கேட்கவில்லை. நீ உன் புத்திசாலித்தனத்தை அந்த நல்ல மனிதர் மீது ஏற்றி அவரையும் உன் ஃப்ராடு வேலைக்குத் துணைக்கு அழைக்கிறாய். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. இதோடு பல நண்பர்கள் எனக்கு ஃபோன் செய்து கேட்டு விட்டார்கள். என்னது ராம்ஜியா, என்னது ராம்ஜியா என்று. ஆனால் நீ அவர் கேட்டதில் தேதிக் குழப்பம் செய்து விட்டாய். இதைத்தான் கிரிமினல் வேலை என்கிறேன்.

தம்பி, என் வாழ்க்கை ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை. என் வாசகர்களிடம் என் சுய மரியாதையை விட்டுப் பிச்சை எடுத்துத்தான் வாழ்கிறேன். நீ முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஃபோர்ட் ஃபவுண்டேஷனில் லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கியவன். இப்போது கோடிகளில் இருக்கும். என் பென்ஷன் பணம் உனக்குக் கர்ச்சீஃப் வாங்கக் கூட காணாது. இன்னமும் ஒரு வீடு கூட இல்லாமல் என் பத்து பூனைகளையும் இருபதாயிரம் புத்தகங்களையும் இட்டுக் கொண்டு தெருத் தெருவாக வாடகை வீடு தேடி அலைகிறேன். பூனைகள் இருப்பதால் வீடும் கிடைப்பதில்லை. என் நேரத்தில் முக்கால்வாசி நேரம் சமையலறையில் செலவாகிறது. இந்த எழுபத்து மூன்று வயதிலும் நான் தான் சமையல் பாத்திரங்களைத் தேய்க்கிறேன்.

நாளை வீட்டு வாடகைக்கு என்ன செய்வது என்ற கவலையில்தான் தினமும் உறங்க முயல்கிறேன்.

என்னைக் காப்பாற்ற எனக்கென்று குழந்தைகளும் கிடையாது. அறிவாவது உண்டா என்றால் அதுவும் கிடையாது. அறிவழகன் என்ற என் பெயரில்தான் அறிவு ஒட்டிக்கொண்டிருக்கிறதே தவிர ஒரு துளி அறிவு எனக்கு இல்லை. அது உனக்கே தெரியும். எனவே அம்பானி ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து, “நீ அதிர்ஷ்டசாலி, என்னை விட மகிழ்ச்சியாக வாழ்கிறாய்” என்று சொன்னால் அது பெரும் பாவம். அதை நீ என்னிடம் செய்யாதே.

என் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே அதிர்ஷ்டம் என் நண்பர்கள். ஐம்பது நண்பர்கள். இவர்கள் எனக்கு உயிரைத் தருகிறார்கள். எல்லாவற்றையும் தருகிறார்கள். ஸ்ரீராம், ஸ்ரீ, சீனி, குமரேசன் ஒன்று, குமரேசன் இரண்டு, சதீஷ், செகந்தர், ராஜா ஒன்று, ராஜா இரண்டு, கற்பகம், சுரேஷ் ஒன்று, சுரேஷ் இரண்டு, அன்னபூரணி, மற்றும் பெயர் சொல்ல விரும்பாத ஏராளமான பேர். மொத்தம் நூறு கூட இருக்கும். இவர்களுக்காகவே எழுதுகிறேன். நீ என்னவாவது செய்து கொள், என்னை ஆளை விடு.