ச்சோர் மச்சாயே ஷோர் – 2

டேய் தம்பி,

என்னடா இந்தப் பயல் நம்மை தம்பி தம்பி என்று சொல்கிறானே என மருளாதே. சிந்துபூந்துறையில் உன் வீட்டில் உன் அன்னையின் கையால் உணவருந்தியிருக்கிறேன். அப்போதே நீ என் தம்பியாகி விட்டாய். அது மட்டுமல்ல. உன் பாட்டி உரலில் இடித்துக் கொடுத்த மொளகாப் பொடியைத் தொட்டு சுடச் சுட சாப்பிட்ட இட்லியை ஏழு ஜென்மாவிலும் மறக்க இயலுமா?

ஆனால் தம்பி, உனக்கும் எனக்கும் பொதுவான வேறோர் அன்னை இருக்கிறாள். அவளை க.நா.சு.வும் சி.சு. செல்லப்பாவும் இன்னும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களும் குருதி பெய்து வளர்த்தார்கள். அந்த அன்னையை நீ வன்கலவி செய்து விட்டாய். அதனால்தான் கத்துகிறேன், கதறுகிறேன். நீயோ என் கதறல் புரியாமல் வன்மம் என்கிறாய். வன்முறை என்கிறாய். வசவு என்கிறாய். அருவருப்பு என்கிறாய். அசிங்கம் என்கிறாய். டேய் தம்பி, எதுடா அசிங்கம்? தாயை வன்கலவி செய்தது அசிங்கமா? அதை சுடுசொற்களால் நான் திட்டுவது அசிங்கமா?

இதோ மீண்டும் கேட்கிறேன். எத்தனையோ சான்றுகளைக் கொடுத்து விட்டேன். கூகிள் ட்ரான்ஸ்லேட்டரில் மொழிபெயர்த்துக் கொடுத்து பதிப்பகத்தையும் எங்களைப் போன்ற வாசகர்களையும் ஏன் ஏமாற்றினாய்? இரண்டாயிரம் ஆண்டுகளாய் வளர்த்த தமிழை இப்படி நீ வன்கலவி செய்யலாமா?

அதனால்தான் விடாமல் கத்துகிறேன். கதறுகிறேன்.

மேலும், நீ என்னை இழப்புகள் இல்லாதவன் என்கிறாய். இழப்பு இல்லாத ஒரு மனிதன் உண்டா சொல்? என்னுடைய செல்ல நாய்க்குட்டி ஸோரோவை இழந்து நான் பைத்தியமாகத் திரிந்தேன், அது உனக்குத் தெரியுமா? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் எழுத்தைப் படித்தால் தெரியும். நான் உன்னைப் போன்ற வேடதாரி அல்ல. என் வாழ்க்கையையே எழுதுகிறேன். ஸோரோ பற்றியும் எழுதியிருக்கிறேன். எக்ஸைல் என்ற நாவலில். ஸீரோ டிகிரியில் ஒரு இழப்பு பற்றி எழுதியிருக்கிறேன்.

இழப்பு இல்லாதவன் எவன்? நான் எனது இழப்புகளை அனுபவங்களாக மாற்றி எழுத்தாகத் தருகிறேன்.

லாசராவின் ஜனனி உனக்குத் தெரியும். பார்வதியே மனுஷப் பிறவி எடுத்தாள். அவள் பட்ட கஷ்டத்தை எந்தப் பெண்ணாவது பட்டிருப்பாளா? மனுஷியாகப் பிறந்த அம்மன் பிச்சையெடுக்கிறாள். ஊர் அவளைப் பைத்தியம் என்கிறது. இளமையில் சித்திக் கொடுமை வேறு. அம்மனுக்கே இந்தக் கதி என்றால் நானெல்லாம் எம்மாத்திரமடா தம்பி?

ஆனானப்பட்ட கர்த்தரின் பிள்ளையான யேசுவே தேவனே ஏன் என்னைக் கை விட்டீர் எனக் கதறும்போது நானெல்லாம் யாரடா தம்பி?

இழப்பில் பெரிசு சிறிசெல்லாம் எதுவும் இல்லை. நீ இழந்ததை எழுதவில்லை. அதனால் அதை சுமக்கிறாய். நான் இழந்ததை எழுதினேன். இழப்பு என்னை விட்டு அகன்று வாசகரிடம் போய் விட்டது. இடம் மாறினவுடனேயே அந்த இழப்பு வாசகனின் இன்பமாக மாறி விட்டது. ரொலாந் பார்த்தை உனக்குத் தெரியும். நீ ஸோர்போனிலேயே லெக்சர் கொடுப்பவன், உனக்குத் தெரியாததா?

சாரு