அப்படி ஒரு துயரக் கதையை
பாரதத்திலும் படித்திருக்க மாட்டீர்கள்
ஹரிச்சந்திரன் பட்ட துயரமெல்லாம்
இதற்கு முன்னால் வெறும் தூசு
அப்படி ஒரு துயரத்தைக் கடந்து வந்தான்
பழைய நண்பன்
இருபத்தைந்து ஆண்டுகள்
தன் வாழ்வை உயர்த்தினான்
அப்படியென்றால்?
மீண்டுமொரு திருமணம்
புது மனைவி
குழந்தைகள்
சொந்த வீடுகை நிறைய காசு
உடம்பில் செல்வப் பூச்சு
இருபத்தைந்து ஆண்டுகள்
கழித்து
தான் வாழ்ந்த ஊரில்
எட்டிப் பார்த்து
யாரும் பார்க்காத வேளையில்
ஊர்க் கேணியில்
நஞ்சைக் கலந்தான்
ஈராயிரமாண்டு வாழும் கேணி
தேனாய் இனித்த நீர்
நஞ்சாய்க் கசக்கிறது
ஊரில் சில பைத்தியங்கள்
அது அமிர்தம் என்றன
கெட்ட வார்த்தையில் திட்டிய என்னை
ஆபாச மனிதன் என்றான் நண்பன்
நள்ளிரவின் கண்ணாடி முன்
நிழல்கள் நடனமாடும் மௌனத்தில்
அவன் கைகளில் ஒரு விளக்கு
ஒளி இல்லை
புகை மட்டுமே
கிணற்றின் நீர் நினைவுகளின் கறை
ஒவ்வொரு துளியிலும் மறைந்திருக்கும்
அந்தப் பழைய நண்பனின் முகம்
இருளின் கதவு திறந்தே இருக்கிறது