காலையில் எழுந்து நடைப்பயிற்சிக்குக் கூட போகாமல் இதை எழுதத் தொடங்கியிருக்கிறேன். இதோ எட்டாம் தேதி அன்று நடக்க இருக்கும் ஐரோப்பிய சினிமாவுக்கு வேறு தயார் செய்ய வேண்டும். அத்தனையையும் விட்டு விட்டு இதை எழுதிக்கொண்டிருக்கும் காரணம், அத்தனை மன உளைச்சல்.
ஏன்?
தெருவில் செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்து, எந்த வன்முறையும் செய்யாமல், “உன்னோடு ஒரே ஒரு முறை படுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டால் அவளுக்கு எப்படி இருக்கும்? அந்த மனநிலையில் இருக்கிறேன் நான். இன்னும் எத்தனை காலத்துக்கு எழுத்தாளனை இப்படி அவமதிப்பீர்கள்?
ஒரு நீயா நானா கோபியை உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரியுமா?
நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று விட்ட ஒரு சாதாரண நடிகரை அழைப்பதென்றால் அஞ்சு லட்சம். என் நண்பர் ஒருவர் தன் கல்லூரி நிகழ்ச்சிக்கு ஒரு ஓய்வு பெற்ற நடிகரை அழைக்கும்படி என்னிடம் கேட்டார். என் மூலம் கேட்டால் நடிகர் ஒப்புக் கொள்வார் என்பது நண்பரின் எண்ணம் போல. இந்த எழவெல்லாம் எனக்குத் தெரியாது. நடிகரைக் கேட்டேன். பொதுவாக அஞ்சு லட்சம், நீங்கள் கேட்பதால் மூணு என்றார். நண்பரிடம் சொன்னேன். துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. பாகவதர். இன்றைய தமிழர்களுக்கு அவர் பெயர் தெரியுமா? எம்ஜியார் முன்னணிக்கு வந்ததுமே பாகவதரின் பெயர் அழிக்கப்பட்டு விட்டது. அம்பதே ஆண்டுகளில் இந்த நிலை. ஆனால் தமிழ் உள்ளளவும் என் பெயர் நிலைத்திருக்கும். ஏனென்றால், இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் தமிழன் என்ற அடையாளம் சினிமா நடிகர்களால் வந்ததல்ல. சங்கப் புலவனால் வந்தது. நாலாயிரம் ஆண்டுகளாக அரசர்களிடம் பிச்சை எடுத்து வளர்த்தார்கள். இன்று நான் உங்களிடம் பிச்சை எடுக்கிறேன்.
உங்களின் தமிழன் அடையாளம் பாரதியாலும் புதுமைப்பித்தனாலும் வந்தது. இருவருமே பட்டினி கிடந்து செத்தவர்கள். இந்த நாலாயிரம் ஆண்டு பிச்சைக்காரப் பாரம்பரியத்தில் சாரு நிவேதிதா என்ற ஒரு ஆள்தான் தன் வாசகரின் பணம் கேட்க ஆரம்பித்தான். இலக்கிய நிகழ்ச்சி என்றால் ஒரு ஆளின் கட்டணம் ஐநூறு என்றான். இன்றைய சினிமா நிகழ்வின் கட்டணம், ஒரு ஆளுக்கு இரண்டாயிரம். பாரதி மாதிரி, புதுமைப்பித்தன் மாதிரி பட்டினி கிடந்து சாகக் கூடாது என்ற வைராக்கியமே காரணம்.
உங்கள் பெயர் அடையாளம் உங்கள் பெற்றோர் கொடுத்தது. உங்களின் இன அடையாளம் எழுத்தாளன் கொடுத்தது. அவனைத்தான் நீங்கள் ஓசியில் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முதல் முதலாக நான் சொல்வதால் உங்களுக்கு என் மீது கோபம் வருகிறது.
உங்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டுமானால் வருவதற்கு ஒரு நாள் பயணம். அடுத்த நாள் நிகழ்ச்சி. மூன்றாம் நாள் திரும்புவதற்கு ஒரு நாள். இப்படி மூன்று நாளை உங்களுக்கு நான் இலவசமாகத் தர வேண்டுமா? இதற்குக் கட்டணம் இல்லையா? இத்தனைக்கும் இந்த மூன்று தினங்களும் என் மனைவி வேறு வீட்டில் தனியாக தேவுடு காக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் அரசியல் கட்சிகளின் மேடைப் பேச்சாளர்களுக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை. ஒரு மாலை போடுவார்கள். அந்த மாலையோடு வீட்டுக்கு வந்திருக்கிறார் தீப்பொறி ஆறுமுகம். பணம் கொடுத்தார்களா என்று கேட்டிருக்கிறார் மனைவி. மாலையைக் காண்பித்திருக்கிறார் தீப்பொறி. இந்த மாலையில் வீட்டில் உலை பொங்குமா என்று கேட்டாராம் தீப்பொறியின் மனைவி.
நீங்கள் எனக்குத் தரும் மரியாதை அந்த மாலை மாதிரிதான். என் வீட்டில் உலை பொங்க என்ன செய்தீர்கள்? என் நேரத்துக்கு என்ன விலை?
***
எட்டாம் தேதி சினிமா நிகழ்ச்சியை உடனுக்குடன் ஒலி பரப்பும் வசதி இல்லை. ஆனால் பணம் செலுத்தினால் நிகழ்ச்சி முடிந்த சில தினங்களில் உங்களுக்குக் காணொலியை அனுப்ப முடியும்.
அமெரிக்காவிலிருந்து காணொலி கேட்டு இதுவரை ஒரே ஒரு நண்பர்தான் பணம் அனுப்பியிருக்கிறார். அந்த அளவுக்கு அமெரிக்க வாசகர்கள் என்னோடு ‘கனெக்ட்’ ஆகியிருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பிரச்சினையெல்லாம்.
***
கட்டணம் அல்லது நன்கொடை செலுத்துவதற்கான விவரம்:
தொலைபேசி எண்: 95975 00949
கட்டணம்: 2000 ரூ. மாணவர்களுக்கு: 1000 ரூ.
இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, பாண்டிச்சேரி
காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு வரை.
charu.nivedita.india@gmail.com
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai