என் தோழி ஒருவர் அறுபது பூனைகளும் அறுபது நாய்களும் வளர்க்கிறாள். அவள் சொன்ன ஒரு சம்பவம் இது. பார்ப்பதற்கு மேட்டுக்குடி பெண்ணைப் போல் இருப்பாள். மேட்டுக்குடியும்தான். ஆனாலும் குடும்பத்தைச் சாராமல் தனித்து வாழ்பவள். காரணம் மேலே உள்ளது. நாய்களோடு காலை ஐந்து மணிக்கு வாக்கிங் போகும்போது துப்புரவுத் தொழிலாளிகள் அவளிடம் “டீ குடிக்க பத்து ரூபா குடுங்க மேடம்” என்று கேட்பார்களாம். இவள் சிரித்து விட்டுக் கடந்து விடுவாள். ஆனால் மனதில் நினைத்துக் கொள்வாளாம். “உங்களிடம் இருந்தால் பத்து ரூபாய் கொடுங்கள், அந்தக் காசில் என் நாய்க்கு பிஸ்கட் வாங்கிக் கொடுப்பேன்” என்று.
என்னுடைய நிலைமையும் அதுதான். பத்து ரூபாய் கொடுத்தால் பிஸ்கட். நூறு ரூபாய் என்றால், பூனை உணவு. ஆயிரம் பத்தாயிரம் லட்சம் என்றால், பல செலவுகள் உண்டு. முக்கியமாக, மொழிபெயர்ப்பு மற்றும் பயணம்.
மேலும், பல நூறு முறை எழுதியதுதான். வாழ்நாள் பூராவும் கூலி இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறோம். ஏன் ‘றோம்’ போட்டேன் என்றால், எல்லா தமிழ் எழுத்தாளர்களும்தான்.
அதனால்தான் நான் முதல் முதலில் ஆரம்பித்தேன். ஏதாவது நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தால் பணம் கொடுங்கள் என்று. அது புத்தக வெளியீட்டு விழாவாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி. உங்கள் பணத்தை வைத்து நான் என்ன வீடா கட்டப் போகிறேன்? மொழிபெயர்ப்புக்கும் பயணத்துக்கும்தான் அந்தப் பணம் உதவப் போகிறது. இப்போது எட்டாம் தேதி நிகழ்ச்சியைப் பதிவு செய்யும் நண்பருக்கு இன்னொரு பதினைந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். நண்பர்களைத்தான் கேட்க வேண்டும். உங்களிடம்தான் வேண்டுகோள் வைக்க வேண்டும்.
நான் ஒருநாளும் முகச்சவரம் செய்யாமல் இருந்தது இல்லை. அதேபோல் வாக்கிங்கும் போகாமல் இருந்தது இல்லை. மழை புயல் என்றால் கூட வீட்டுக்குள்ளேயே நடந்து விடுவேன். ஆனால் நாளை வாக்கிங் செல்வதாக இல்லை. அந்த அளவுக்கு ராப்பகலாக படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட சூழலில் இதை ஏன் எழுதுகிறேன் என்றால், இது என் மண்டைக்குள் புகுந்து கொண்டு விட்டது. மூளையில் தேரை புகுந்த கதைதான். தேரையர் கதை. தேரையை வெளியே எடுத்தால்தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும்.
அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் தன் வீட்டு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார். இன்னும் இரண்டு எழுத்தாளர்களையும் அழைத்திருக்கிறார். அதில் ஒரு எழுத்தாளர் என் மிக நெருங்கிய நண்பர். இன்னொரு எழுத்தாளரோடு நான் ஹலோ கூட சொல்வதில்லை. அவரும் அப்படியே. இது பற்றி நான் ப்ளாகில் நூறு முறை எழுதி விட்டேன். அது எதுவும் அமெரிக்க நண்பருக்குத் தெரியாது போல் இருக்கிறது.
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். என் நைனாவின் மரணத்துக்குக் கூட நான் வர முடியாது என்று சொல்லி விட்டேன். தலைச்சன் பிள்ளையாக இருந்தும் எனக்கு எழுத வேண்டிய வேலை இருக்கிறது என்று தெரிவித்தேன். என் கடைசித் தம்பிதான் ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்தான்.
ஏன் அப்படிச் சொன்னேன்? உங்களுக்காகத்தான். நான் உங்களுக்கு மட்டுமே கடமைப்பட்டிருக்கிறேன். நான் எப்படி நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுத முடிந்தது? கல்யாணத்துக்குச் செல்வதில்லை. வேறு எந்த விசேஷத்துக்கும் செல்வதில்லை. டிவி பார்ப்பதில்லை. யாரோடும் அரட்டை அடிப்பதில்லை. உங்களுக்கு இருபத்து நான்கு மணி நேரம் என்றால் எனக்கு அது நாற்பத்தெட்டு மணி நேரம். ஒரு நிமிடம் கூட நான் வீண் அடிப்பதில்லை. என் மனைவியிடம் கூடப் பேசுவதில்லை. என் மகன் திருமணத்துக்கே – மும்பையில் நடந்தது – காலையில் போய் மாலையில் திரும்பி விட்டேன். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளனை உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கிறீர்கள் என்றால் அதற்கு உரிய சன்மானம் தர வேண்டாமா? ஐயா, இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், அந்த நேரத்தை உங்கள் ஒருவருக்காக செலவு செய்யத் துணிகிறேன் என்றால், அது ஒரு க்ரைம். அந்த க்ரைமைக்கூட நான் செய்யத் தயார் என்றால், அதற்கு ஒரு விலை வேண்டாமா? அதற்கான விலை, அதற்கான கட்டணம் என்று என் ப்ளாகின் தலையிலேயே எழுதியிருக்கிறேன். எதையுமே படிக்காமல் என் வீட்டு நிகழ்ச்சிக்கு வா, நான் டிக்கட் போட்டு விடுகிறேன், ரூம் போட்டு விடுகிறேன் என்றால் என்ன அர்த்தம்? டிக்கட் போடுவதும், ரூம் போடுவதுமா விஷயம்? என் நேரத்துக்கு மதிப்பு என்ன?
சாருவுடன் சில தினங்கள் என்ற அந்தக் கட்டுரையின் லிங்க் இங்கே:
சாருவுடன் சில தினங்கள்… – Charu Nivedita
இதையெல்லாம் மீண்டும் மீண்டும் எழுத மிகவும் அலுப்பாக இருக்கிறது. இதை மண்டையில் போட்டுக் கொண்டு நான் எப்படித் தூங்க? அதனால்தான் எழுதத் துணிந்தேன்.
இதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? இப்படி ரூம் போடுகிறேன், டிக்கட் போடுகிறேன் என்று சொல்லி அழைக்கும் நண்பர்கள் இல்லை. கூப்பிட்டவுடன் புடுக்கை ஆட்டிக் கொண்டு ”இதோ, இதோ” என்று ஓடுகிறார்கள் பாருங்கள் எழுத்தாளர்கள், அவர்களை உதைக்க வேண்டும்.
நான் கூட்டத்தில் பேசுவதாக இருந்தாலே அதற்கு ஒரு நபரிடமிருந்து 500 ரூ. கட்டணம் வசூலிக்கிறேன், நூறு பேர் சேர்ந்தால் அம்பதாயிரம். ஏன் நண்பர்களே, ஒரு மணி நேரம் தெரபிஸ்டிடம் பேசுகிறீர்கள், அதற்குக் கட்டணம் 3000 ரூபாய். அப்படியிருக்கும்போது எழுத்தாளன் என்றால் மட்டும் ஓசி ஓளா? என்னய்யா இது, உலக மகா அக்கிரமமாக இருக்கிறது?
இன்னொரு விஷயம். நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தாலும் என்னால் நவம்பர் பதினேழிலிருந்து டிசம்பர் பதினேழு வரை சென்னையை விட்டு எங்கேயும் நகர முடியாது. அவந்திகா மும்பை செல்கிறாள். நான் பத்து பூனைகளையும் காபந்து செய்ய வேண்டும். வீட்டுக் காவல். வெளியே போகலாம். ஒரு எட்டு மணி நேரம் எல்லாம் தாங்கும். தூங்கும். அதற்கு மேல் தேட ஆரம்பித்து விடும்.
ஒரு நண்பரைக் கேட்டேன். சினிமா நிகழ்ச்சிக்கு வருகிறீர்களா என்று. வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்துகிறேன் என்றார். ஐயோ சாமி, அதெல்லாம் எந்த உறுதிப்படுத்தலும் வேண்டாம். நான் ஒன்றும் என் வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிடவில்லை. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வைரச் சுரங்கத்திலிருந்து அள்ளி அள்ளித் தரப் போகிறேன். வந்து வாங்கினால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் வேண்டவே வேண்டாம். எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.
புத்தக வெளியீட்டு விழா என்றாலும் சரி, வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, என்னை அழைத்தால் அதற்கான கட்டணம் ஒரு லட்சம் ரூபாய். அதுவும் நவம்பர் பதினேழிலிருந்து டிசம்பர் பதினேழு வரை இயலாது.