பள்ளிப்படிப்பு முடியும் வரை ஜட்டி அணிந்ததில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்றே தெரியாது. பெரியவர்கள் கோடு போட்ட அட்ராயர் அணிவார்கள். அது கொடியில் காயும்போது பார்வையில் படும். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி அணிந்து பார்த்ததுண்டு. கல்லூரியில் சேர்ந்த பிறகு பேண்ட் அணிய ஆரம்பித்த போது கோமணம் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள் அம்மா. இரண்டு கோமணம். ஒன்று மாற்றி ஒன்று அணிந்து கொள்வது. ஒன்று அணியப்படும்போது ஒன்று கொடியில் காயும். ரொம்ப காலம் கழித்துத்தான் அதன் சரியான பெயர் கோவணம் என்றும் அதை லங்கோடு எனவும் அழைப்பார்கள் என்றும் தெரிய வந்தது. எங்கள் பகுதியில் குடியானவர்கள் வெறும் லங்கோடு அணிந்துதான் வயல் வேலை செய்வார்கள்.
இதற்கிடையில் – ஒரு பதினேழு வயது இருக்கும் போது என்று ஞாபகம் – எங்கள் ஊரில் உள்ள சிங்கப்பூர் கடைகளில் பூப்போட்ட, மெலிதான ஜட்டிகளைப் பார்த்தேன். அது என்ன என்று என் நண்பனைக் கேட்ட போது “அது பெண்கள் அணியும் ஜட்டி” என்று சொன்னான். எனக்கு ஒரே அதிர்ச்சி.
“என்னது, பெண்கள் ஜட்டி அணிவார்களா?”
நானே அப்போது கோமணம்தான். இன்னும் ஜட்டிக்குச் சென்றிருக்கவில்லை.
நண்பன் சொன்னான், “எல்லா பெண்களும் போட மாட்டாங்க, தேவ்டியாளுங்க மட்டும்தான் போடுவாங்க.”
என்னால் நம்ப முடியவில்லை. அந்த வகைப் பெண்களுக்கு ஜட்டியே தேவையில்லையே என்றுதான் தோன்றியது.
இதெல்லாம் 1960கள் என்பதையும் நான் வசித்தது ஒரு சிறிய ஊர் என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.
பிற்பாடு, இருபத்தைந்து வயதில் சென்னையில் உத்தியோகத்தில் சேர்ந்த போதுதான் முதல் முதலாக ஜட்டி அணிய ஆரம்பித்தது.
இன்று வரையிலும் கூட ஜட்டி அணிந்து பேண்ட் போட்டால் அசௌகரியமாக இருக்கிறது. அதற்காக ஜட்டி அணியாமல் பேண்ட் போட்டால் விதைக்கொட்டையில் அடிபட்டு விடுகிறது. அது ஆண்களுக்கு உயிர்த்தளம். பலமாகப் பட்டு விட்டால் உயிர் போய் விடும். அதற்காகவே இந்த அசௌகரியம் பிடித்த ஜட்டியை அணிய வேண்டியிருக்கிறது. எப்போதடா வீட்டுக்குப் போவோம், இந்த சனியன் பிடித்த ஜட்டியைக் கழற்றி வீசி எறிவோம் என்று தோன்றியபடியே இருக்கும்.
கிட்டத்தட்ட நாற்பது வயதில்தான் பெண்களின் ஜட்டிக்கு பேண்டீஸ் என்று பெயர் என்பதே தெரிய வந்தது. மற்றபடி முப்பது வயதிலேயே நகரத்துப் பெண்டிர் ஜட்டி அணிவார்கள் என்பது தெரிய வந்தது. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம், அந்தக் காலத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே அவ்வளவு இடைவெளி இருந்தது. இந்தக் காலத்தைப் போல் இல்லை. அந்த வகையில் நான் சற்று முன்னாலேயே பிறந்து விட்டது என் துரதிர்ஷ்டம்தான். ஆனால் ஒரு வகையில் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். இக்காலத்திய இளைஞனுக்குப் பெண்களின் உள்ளாடை பற்றித் தெரிந்திருக்கும் அளவுக்கு இலக்கியம், கலை எதுவும் தெரியவில்லை. அதுவாவது போகட்டும், கொள்கை, கோட்பாடு, அறவுணர்வு, தார்மீகம் என்று எதுவுமே இல்லை. பணம் மட்டுமே அவர்கள் அறிந்த விஷயமாக உள்ளது. பரிதாபத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள் இக்காலத்திய இளைஞர்கள்.
இதெல்லாம் இன்று அவந்திகா சொன்ன வாசகம் ஒன்றினால் ஞாபகம் வந்தது. “என்னப்பா இது, நீ உள்ளே அணிவதெல்லாம் இப்படி நைந்து போய் கிடக்கிறது, வெளியே ஆடம்பரமாக உடுத்தினால் போதுமா? உள்ளே தரமாக அணிய வேண்டாமா?”
அவமானமாகப் போய் விட்டது. நான் அந்தக் காலத்திலிருந்தே கால்வின் க்ளேன்தான் அணிவது. ஆனால் ரொம்ப நாளாக ஏகபத்தினி விரதனாக ஆனதிலிருந்து உள்ளாடை பற்றி கவனமின்றி இருந்திருக்கிறேன் என்று உறைத்தது. உடனடியாக இந்த அவமானத்தைத் துடைத்தெறிய வேண்டும் என்று நடவடிக்கையில் இறங்கினேன்.