வரும் சனிக்கிழமை மதியம் பன்னிரண்டரை மணியிலிருந்து மூன்றரை வரை வெளியே போய் சாப்பிடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இன்று பிறந்த நாள். வெளியே போக முடியவில்லை. இன்று கூட நான் தனியாகத்தான் இருக்க வேண்டுமா என நினைப்பாள் அவந்திகா. சனிக்கிழமை மதியம் போகலாம் என்று முடிவு செய்தேன். மூன்று மணி நேரத்தை நான்கு மணி நேரமாகக் கூட நீட்டிக்கலாம். அதற்கு மேல் முடியாது. சவேரா ஓட்டலில் உள்ள மால்குடி உணவகம் அதற்கு உகந்த இடம்.
செல்வாவைக் கேட்டேன். வெளியூர்.
சீனி ஏற்கனவே வெளியூர்.
குமரேசனைக் கேட்டேன். வெளியூர்.
சதீஷைக் கேட்டேன். வெளிநாடு.
ஸ்ரீராமைக் கேட்டேன். சனிக்கிழமை மருத்துவமனைப் பணி என்றார்.
சுரேஷ் ஏற்கனவே அமெரிக்கா கிளம்பி விட்டார்.
இன்னொரு நண்பரைக் கேட்டேன். அன்றைய தினம்தான் மகளுக்குப் பள்ளி ஆண்டு விழா. போயே ஆக வேண்டும்.
எனக்குக் கார்த்திக்கின் நினைவு வந்தது. அவன் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை அந்தப் பள்ளிக்கூடம் எந்தப் பக்கம் இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. பெற்றோர் சந்திப்பு என்று அழைப்பான். ரஜினி போவாரா, கமல் போவாரா, நான் அவர்களை விடப் பெரிய ஆள், நான் வர மாட்டேன் என்பேன். ஒரு நாள் கமல் என் வீட்டுக்கு ஃபோன் செய்து, அதை கார்த்திக்தான் எடுத்து, யாரோ கமல்னு ஒருத்தர் ஃபோன் பண்ணினார் என்று சொல்ல, யாரோ கமல் இல்லடா, ஆக்டர் கமல் என்று சொல்லியிருக்கிறேன். அதனால் அவனும் நான் அவர்களை விடப் பெரிய ஆள் என்று சொன்னதை நம்பி விட்டான். ஆச்சரியம் என்னவென்றால், அவந்திகாவும் பள்ளிக்கூடம் பக்கம் போனதே இல்லை.
அநேகமாக சனிக்கிழமை அன்று தனியாகத்தான் போய் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் யாரையும் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை. இதையும் என் தலையில் ஓத்த விதி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.