5000 ரூ?

அப்பா,
5000 வாங்கும் முடிவை தளர்த்தியிருப்பதால் உயிர்மை இதழில் உங்கள்
படைப்புகளை எதிர்பார்க்கலாமா?

ராஜு.

ஏம்ப்பா தம்பி, நீ என்னை என்ன நக்கல் அடிக்கிறாயா?  உனக்குத் தமிழ் புரியுமா?  அல்லது புரியாதா?  இவ்வளவு சிறிய, எளிய விஷயத்தைக் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளும் நீ என்னுடைய எழுத்தை எப்படி வாசிக்கிறாய்?

நான் ஒரு இளைஞனின் முகம் வாடியதைப் பார்த்தே இனிமேல் கையெழுத்துக்குக் காசு வாங்கக் கூடாது, அது ஹராம் என்று முடிவு செய்தேன்.  ஆனால் உயிர்மையிலும் அப்படி எழுதுவேன் என்று நீ எப்படி முடிவு செய்தாய்?  நான் என்ன வீடு கட்டுவதற்கோ கார் வாங்குவதற்கோவா காசு கேட்கிறேன்?  எனக்கு இசையும், வாசிப்பும், எழுத்தும் தான் வாழ்க்கை.  ஆனால் இந்த மூன்றையும் விட எனக்கு முக்கியமானது பயணம்.  அந்தப் பயணத்தை மேற்கொள்ள கையில் ஒரு தம்பிடி இல்லாததால்தான் இந்த முடிவுக்கு வந்தேன்.  அதாவது, கையெழுத்துக்கு 5000 ரூ வாங்குவது என்று.  அதையும் அந்தப் பையனின் முகவாட்டத்தைப் பார்த்து விட்டு விட்டு விட்டேன்.  உயிர்மையிலோ மற்ற பத்திரிகைகளிலோ எழுதும் போதும் கூட அதையே செய்ய முடியுமா?

இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது.  பல கோடீஸ்வரர்கள், பஸ் அதிபர்கள், ஆலை அதிபர்கள் என் புத்தகத்தில் என் கையெழுத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு புத்தகத்தின் விலையான ரூ. 150/- ஐ என் பாக்கெட்டில் வைத்து விட்டுப் போகிறார்கள். அந்தக் கொடுமையை நான் எங்கே போய் சொல்ல?  அப்படியானால் என் கையெழுத்து ஓசியா?  இதை எப்படித் தவிர்ப்பது என்றுதான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாரு

Comments are closed.