Brilinta 90 mg (சிறிய மாற்றத்துடன்…)

சென்னை வெள்ளம் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.  சென்னை முழுவதும் வெள்ளத்தில் மிதந்த போது – சில இடங்களில் ஐந்து அடி உயரத்தில் தண்ணீர், சில இடங்களில் பத்து அடி, சில இடங்களில் ஐம்பது அடி, அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளம் வரை வெள்ளம் – இப்படியாக இருந்த நாட்களில் மைலாப்பூரில் மக்கள் காலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.  என்னை நம்பவில்லை என்றால் மைலாப்பூர்வாசி யாரையாவது கேளுங்கள்.  காய்கறிக்கார அம்மாள் வந்தார்.  தபால்காரர் வந்தார். பால்கார அம்மாளின் வயது 70 இருக்கும்.  ஒருநாள் தவறாமல் வந்தார்.  மதியம் இரண்டு மணிக்கு பழக்காரர் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார்.  ஒரே வித்தியாசம், மழை நின்றிருக்கும் போது வருவார்கள்.  அதுவரை ஓரத்தில் ஒண்டி நின்று இருப்பார்கள்.  இதேபோல் தான் இருந்தது ஜார்ஜ் டவுன்.  என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம் மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிடுபவர்.  ஒருவேளை கூட அவருக்கு சாப்பாடு கிடைக்காமல் போகவில்லை.  ஓட்டல்கள் இருந்தன.  அதேபோல்தான் திருவல்லிக்கேணி.  வானம் பொத்துக் கொண்டது போல் நீர்த்தூண் போட்டது மழை.  அதில் ஒன்றுமே குறைச்சல் இல்லை.  ஆனால் எல்லா மழை நீரும் சாலையில் கிழக்கே நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.  மின்சாரம் கூட போகவில்லை.  அவ்வப்போது பத்து நிமிடம் நிறுத்தி வைத்தார்கள்.

ஆனாலும் என் வீட்டுக்குள் தண்ணீர் வந்ததற்குக் காரணம், வீட்டைத் தாழ்வாகக் கட்டியதும், சாக்கடை வடிகால்கள் சரியாக இல்லாததும்.  கக்கூஸிலிருந்து நீரூற்று போல் பொங்கிப் பீறிட்டது நீர்.  அவந்திகா கரண்டு மெயின் சுவிட்சை மரக்கட்டை உதவியால் நிறுத்தி விட்டு மாடிக்குப் போய் விட்டாள். நான் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தேன்.  நீர்மட்டம் ஏறினால் ஜலசமாதிக்குத் தயாரான மனநிலையில்தான் படித்துக் கொண்டிருந்தேன்.  எனக்கு நீச்சல் தெரியும்.  பப்பு, ஸோரோவை விட்டு விட்டு நீச்சலடித்துத் தப்பிப்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.  மரணத்தின் விளிம்பிலும் படிப்பு எனக்குக் கொண்டாட்டமாகவே இருந்தது.

ஆக, மற்ற இடங்கள் வெள்ளத்தில் மிதந்தது மழையால் அல்ல; நிர்வாகக் கோளாறால்.  ஏரிகளை வகைதொகை தெரியாமல் திறந்து விட்டதால்.  நான் நாகூரில் வளர்ந்தவன்.  25 வயது வரை மழைதான் வாழ்க்கை.  வீட்டைச் சுற்றி பத்து குளங்கள்.  கார்த்திகை அடைமழையில் பத்தும் ஒன்றாகி விடும்.  ஆனால் வீட்டுக்குள் வெள்ளம் வந்ததில்லை.

நாளை அவந்திகாவின் பிறந்த நாள்.  நாமெல்லாம் என்ன சினிமாக்காரர்களா, அரசியல்வாதிகளா, பிறந்த நாளை ஒத்திப் போடுவதற்கு? அவர்களுக்குத்தான் பிறந்த நாளில் கொண்டாட்டம்.   நமக்கெல்லாம் பிறந்த நாள் என்றால் அன்றைய தினம் வாய்க்கு ருசியாக ஏதாவது ஒரு பண்டம்.  நாலு நண்பர்களைச் சந்திப்பது.  அவ்வளவுதான்.  சென்னையிலேயே சிறந்த கேக் கிடைக்குமிடம் சி.ஐ.டி. காலனியில் உள்ள பத்மஸ்ரீ கேக்ஸ்.  முன்னாள் முதல்வரின் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்கிறது அந்த இடம்.  ஒரு எக்லெஸ் பனானா கேக்குக்கு சொன்னேன்.  டிஸம்பர் பதினெட்டு என் பிறந்த நாள். இப்போதெல்லாம் வாழ்க்கையில் தேவை ஆகக் கம்மியாகி விட்டது.  ஆனாலும் இதயத்தைச் சரி செய்து கொள்வதற்காகக் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலை உயர்ந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  Brilinta 90 mg மாத்திரை தினமும் இரண்டு.  இது போல் விலையுயர்ந்த இன்னொரு மாத்திரை. அதுவும் தினம் இரண்டு.  மாத்திரை மட்டும் தினமும் 300 ரூபாய்க்கு.  ஒரு நண்பரிடம் இந்த ப்ரிலிண்டா என்ற மாத்திரையை வாங்கிக் கொடுத்து விடுங்கள், புண்ணியமாய்ப் போகும் என்றேன்.  சரி என்றார்.  இப்போது கையில் இருந்த பணமெல்லாம் சென்னை, கடலூர் வெள்ளத்தில் கரைந்து விட்டது.  என்னுடைய இன்னொரு நண்பர் ஜெகா கடலூரில் வெள்ளத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்.  இந்த செலவுகளைச் சரி செய்ய அவர் இன்னும் ஒரு வருடம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

எத்தனையோ பேர் மனிதாபிமானிகளாகக் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த வேளையில் என் தெருமுனையில் அண்ணாச்சி பூண்டை கிலோ முன்னூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்.  பால் பாக்கெட் நூறு ரூபாய்.  என் தெருவில் உள்ள ஒரு மருத்துவர் – வயது 70 – எண்ணூறு ரூபாய் வாங்கிக் கொண்டு வயிற்றுவலிக்கு prescription எழுதிக் கொடுத்தார்.   நாடி பிடித்துப் பார்க்க எண்ணூறு வாங்கும் எழுபது வயது மருத்துவர் என் தெருவில் இருக்கிறார் நண்பர்களே!  தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாப்பாடு பாக்கெட்டுகள் எடுத்துப் போக படகுக்கு 3000 ரூபாய்.  இதையெல்லாமும் எழுதுகிறீர்களா நண்பர்களே?  இந்தக் கதைகளும் என்னிடம் நூற்றுக் கணக்காக உள்ளன.

சென்னை சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி விட்டது.  நேற்று சைதாப்பேட்டையில் செயின் பறிப்பு நடந்துள்ளது.  பைக்கில் வந்த இளைஞர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்து விட்டார்கள்.  சென்னை சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி விட்டது.

என் பிறந்த நாளுக்கு நண்பர் ஒருவர் ஜீன்ஸும், டீ ஷர்ட்டும், பெர்முடாஸும் தபாலில் அனுப்பியிருக்கிறார். மிக்க நன்றி.  ஜீன்ஸ் போடுவதில்லை.  டீ ஷர்ட் போடுவதில்லை.  பெர்முடாஸும் போடுவதில்லை. இப்போதைய தேவை brilinta 90 mg.  கூடவே ஒரு இஸ்திரிப் பெட்டியும் தேவை.  என் தெருவில் உள்ள இஸ்திரிக்காரர் எல்லா சட்டையையும் பொசுக்கிப் பொசுக்கிக் கொடுக்கிறார்.  ரொம்ப சூடான ஆள் போல.