அவந்திகாவுக்கு ஒரு பரிசு

செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் என் வீட்டில் ஆன்மீக வகுப்பு நடக்கும்.  இருபது பேர் வருவார்கள்.  மனிதர்கள் மாறி மாறி வருவார்கள்.  சினிமா தயாரிப்பாளரிலிருந்து ஆட்டோ ஓட்டுநர் வரை.  சமயங்களில் கல்லூரி மாணவ மாணவிகளும் வந்து என்னை ஆச்சரியப்படுத்துவார்கள்.  இன்றுதான் அவந்திகாவின் பிறந்த நாள் என்றாலும் நேற்றைய ஆன்மீக வகுப்பை முன்னிட்டி நேற்றே கேக் வாங்கிக் கொடுத்து விட்டேன்.  பத்மஸ்ரீ என்ற கடையில் கேக் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.  அது போன்ற கேக் ஐரோப்பாவில்தான் கிடைக்கும்.  சிஐடி நகரில் திமுக தலைவர் திரு கருணாநிதி அவர்களின் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளது.  வீட்டில் செய்வதால் விலையும் அதிகம் இல்லை.  வகுப்புக்கு வந்தவர்களும் கேக் வாங்கி வந்தனர்.

ஒன்பதரை மணி அளவில் வகுப்பு முடிந்ததும் மீதி கேக் நிறைய இருந்தது.  எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தெருவுக்குப் போனாள் அவந்திகா.  தெருவில் நடைபாதை வேலை செய்யும் தொழிலாளிகள் தெருவேலை முடிந்து தெருவிலேயே வேட்டியையும் புடவையையும் போர்த்திக் கொண்டு தெரு ஓரத்திலேயே படுத்துக் கிடப்பார்கள்.  தெருவிலேயேதான் சாப்பாடும்.  அவர்களுக்கு ஊறுகாய், தண்ணீர் சப்ளையெல்லாம் நம் வீட்டிலிருந்துதான்.  அவர்களிடம் கொண்டு போய் கேக் துண்டுகளைக் கொடுத்து விட்டு வந்தாள்.  ஒரு துண்டு கூட அவள் சாப்பிடவில்லை.   இடரோ பேரிடரோ வந்தால் மற்றவர்களுக்கு உதவுவது வணங்கத்தக்க மனிதாபிமானம்.  அதை விட உயர்ந்தது எந்த இடரும் பேரிடரும் வராமலேயே மற்றவர்களுக்கு உதவுவதாகும்.

அடடா, ஒரு துண்டு கூட சாப்பிடவில்லையே என்று நினைத்து இன்று அவளுக்கு என்ன பரிசளிக்கலாம் என நினைத்தேன்.  அவளுக்கு ஆபரணங்கள் பிடிக்காது.  எதிலும் ஆசை அற்றவள்.  பூ கூட வைத்துக் கொள்ள மாட்டாள்.  மலர்க் கொத்துக் கடைகள் திறந்திருக்கவில்லை.  என்ன செய்யலாம்?  அவளுக்கு இசை பிடிக்காது.  இருந்தாலும் அவளுக்குப் பிடித்ததாக ஒரு பாடகி இருக்கக் கூடாதா என யோசித்த போது மைலன் ஃபார்மரின் ஞாபகம் வந்தது.  மைலனை ரசிக்காத மனித செவிகளே இருக்க முடியாது.   இணைப்பைத் தேடி நான் மைலனைக் கேட்டுக் கொண்டிருந்த போது அடடா என்ன ஒரு குரல் என்று ஆச்சரியமடைந்தாள் அவந்திகா.  உனக்காகத்தான் தேடிக் கொண்டிருந்தேன் என்றேன்.

உலகிலேயே மிகப் பெரிய கடினமான விஷயம், எழுத்தாளனாக வாழ நேர்வது.  அதை விடக் கடினமான விஷயம் எழுத்தாளனின் மனைவியாகயோ மகளாகவோ வாழ்வது.  தி. ஜானகிராமன் அதிர்ந்தே பேசாதவர். அற்புதமான மனிதர்.  உன்னதமான குணங்களின் உறைவிடம்.  அவர் மகள் உமா சங்கரி எழுதியிருப்பதைப் பாருங்கள்.

”தடைகள் ஏதும் இல்லாவிட்டலும் எங்களுக்கு படிப்பில் பெரிய ஊக்குவித்தலோ வழிகாட்டுதலோ இருந்ததில்லை. ஒரு போதும் ஹோம் வொர்க்குக்கு உதவி செய்ததில்லை. நாங்கள் எந்த வகுப்பில் படிக்கிறோம் என்று யாராவது கேட்டால், “ஏம்மா, என்ன க்ளாஸ் நீ?” என்றுதான் எதிர்பார்க்க முடியும். பள்ளிக்கோ கல்லூரிக்கோ ஒரு முறைகூட வந்ததில்லை. மதராஸில் வருடா வருடம் புயல் வரும்போது அம்மா அப்பாக்கள் ஸ்கூலுக்கு வந்து குழந்தைகளை அழைத்துப் போவார்கள். என் அப்பா அம்மா வந்ததேயில்லை. எனக்கு அதைப்பற்றி கொஞ்சம் வருத்தம் கூட இருந்தது.

வருஷா வருஷம் தீபாவளி வரும்போது எல்லார் வீட்டிலும் ஒரு மாதம் முன்பே ஸம்பரம் ஆரம்பித்து விடும். என் தோழிகள் பலர் வீடுகளில் தீபாவளிக்கு பட்டுப்பாவாடை வாங்குவது வழக்கம். அப்பா தீபாவளி மலர்களுக்கு நாலு கதைகள் எழுதி தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு வரும் ஊதியத்தில் எங்களுக்கு உடைகள் பட்டாசுகள் வாங்கப் போவார். அம்மாவுக்கு நூல் புடவை, எங்களுக்குக் கதர் உடுப்புகள், அவருக்கு கதர் வேஷ்டி, ஜிப்பா; இவற்றோடு பாட்டு வாத்தியார், குடும்ப வைத்தியர், நண்பர், வேலைக்காரி எல்லோருக்கும் கதர் / நூல் உடைகள். ”

என்னைப் பொறுத்தவரை தி.ஜா. ஒரு மகாத்மாவாக வாழ்ந்தவர்.  அப்படிப்பட்டவரே தன் மகளிடம் ”ஏம்மா என்ன க்ளாஸ் நீ?” தான்.  இன்னும் தஞ்சை ப்ரகாஷின் மனைவி மங்கையர்க்கரசியின் இரங்கல் கட்டுரையைப் படித்தால் நொந்து விடுவீர்கள்.  ஊருக்கு அழைத்துப் போவாராம்.  அங்கே ப்ரகாஷைப் பார்க்க எழுத்தாளர் கூட்டம் வரும்.  இதோ வந்துடறேம்மா என்று சொல்லி விட்டுப் போனால் நள்ளிரவில் தான் அறைக்குத் திரும்புவாராம். இதற்குப் பெயர் குடும்பத்தோடு வெளியூர்ப் பயணம்!  எனக்குத் திருமணமான புதிதில் குற்றாலம் இலக்கியச் சந்திப்புக்கு வா என்று அவந்திகாவை அழைத்துப் போனேன்.  நாள் பூராவும் இலக்கிய விவாதம் சர்ச்சை. மாலை ஏழு மணிக்கு நீ ரூமில் இரு, இதோ வந்துர்றேன் என்று சொல்லி விட்டு கலாப்ரியாவைப் பார்த்துப் பேசி விட்டு காலை எட்டு மணிக்கு ரூமுக்குத் திரும்பினேன்.  ஒரு கோபம் இல்லை.  ஒரு வருத்தம் இல்லை.  ஆனால் அதற்குப் பிறகு என்னோடு வெளியூர் வருவதை நிறுத்தி விட்டாள்.  அதுதான் முதலும் கடைசியும்.  இப்போது கை கூப்பி அழைக்கிறேன்.  தயவு செய்து வா, 24 மணி நேரமும் உன்னோடே இருக்கிறேன்.  ம்ஹும்.  வெளியூர்ப் பயணத்தில் ஈடுபாடே போய் விட்டது.  அண்ட சராசரமும் இந்தப் பிண்டத்துக்குள்ளே இருக்கும் போது  ஏன் வெளியூர் என்கிறாள்.

என்னைப் போன்ற ஒரு ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளனின் மனைவியாக இருப்பதில் உனக்கு வருத்தமே இல்லையா, எல்லோரையும் விமர்சிக்கிறேன், எல்லோரும் என்னைத் திட்டுகிறார்கள்.  இதையெல்லாம் நீ எப்படி எதிர்கொள்கிறாய் என்று கேட்பேன்.  சமயங்களில் மன வருத்தத்தில் ஆழ்ந்து கிடப்பேன்.  ஒரே ஒருமுறை – அதுவும் சமீபத்தில்தான் – நீ பாரதியைப் போன்றவன் சாரு, உனக்கு இம்மாதிரி யோசனைகளே வரக் கூடாது என்றாள்.  எழுத்தாளனைக் கொண்டாடாத சமூகத்தில், எழுத்தாளனுக்கு மரியாதையே இல்லாத சமூகத்தில் அவனுடைய குடும்பத்தில் என்ன மரியாதை கிடைக்கும்? இதற்கு விதிவிலக்காக இருக்கும் ஓன்றிரண்டு பேரில் அடியேனும் உண்டு.  என் எழுத்துக்கு மிகப் பெரிய பக்கபலம் அவந்திகா.  வீட்டில் அமைதி இருந்தால்தானே எழுத முடியும்?  எப்போதும் குத்திக் கொண்டே இருந்தால் எழுத்து வருமா?  சுமார் 15 ஆண்டுகளாக ரேஷன் கார்டு எப்படி இருக்கும், கரண்ட் பில் எப்படி இருக்கும் என்றெல்லாம் நான் பார்த்தது கூட இல்லை.  இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.  இன்று வரை நான் லௌகீக காரியங்கள் ஒன்று கூட செய்ததில்லை.  இதுவரை 60 புத்தகங்கள் எழுதியிருப்பேன்.  இதற்கெல்லாம் நேரம்?  அவந்திகா கொடுத்ததுதான். அவளுக்கு என் அன்பான பிறந்த நாள் பரிசு மைலன் ஃபார்மர்.