ஹவுளேபெக்! (திருத்தப்பட்டது)

சில பேர் சில விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.  சிலர் கிரிக்கெட் பற்றிய விபரங்கள்.  சிலர் பிரபந்த உரைகள், விளக்கங்கள்.  சிலர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ் சமாச்சாரங்கள்.  எனக்கு தென்னமெரிக்கா பற்றிய விஷயங்கள்.  குறிப்பாக, சீலே.  அந்த நாட்டின் இலக்கியம், கலாச்சாரம், அரசியல், இசை.  அந்த சம்பவம் நடந்த போது என் வயது ஐம்பத்து மூன்று என்றால் சீலே பற்றிய ஆய்வுகளை முப்பது ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தேன்.

குமார் ஒரு இலக்கிய விமர்சகன்.  நல்ல படிப்பாளி.  ஒருநாள் என்னோடு பேசிக் கொண்டிருந்த போது அவன் “தென்னமெரிக்காவில் சிலி என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கே…” என்று ஆரம்பிக்கும் போதே இடைமறித்த நான் “என் ஆயுள் பரியந்தம் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.  பத்து ஆண்டுகள் ஆகிறது.  இன்னும் பார்க்கவில்லை.

என் ஷட்டகரின் மைத்துனர் ஆர். ராஜகோபாலன் ஒரு கவிஞர்.  கசடதபற காலத்துக் கவிஞர்.  திருவல்லிக்கேணிக்காரர்.  என் மனைவி பெருந்தேவி வீட்டு சுக துக்க காரியங்களின் போது அவரை நான் பார்ப்பதுண்டு.   அப்போது ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையில் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்தேன்.  அதில் ஒரு வாரம் ஷேக்ஸ்பியரின் லியர் மன்னனிலிருந்து ஒரு மேற்கோள் காட்டியிருந்தேன்.  அந்தக் குறிப்பிட்ட கட்டுரை வந்த வாரம் பீச்சில் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்த போது ஆர். ராஜகோபாலனைப் பார்த்தேன்.  சிரிப்போர் சங்கத்தினருடன் ஹாஹாஹாஹா என்று பெரும் சத்தத்துடன் சிரித்துக் கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் அருகில் வந்து க்ஷேமம் விசாரித்தார்.  பிறகு ஷேக்ஸ்பியரின் மேற்கோள் கிங் லியரில் அல்ல, ஹேம்லட்டில் என்றார்.  நான் கல்லூரியில் முறையாகப் படித்தவன் அல்ல என்றபடியால் மேற்கோள் காட்டும் போது ஒன்றுக்கு இரண்டு தடவை சரி பார்த்த பிறகே எழுதுவது வழக்கம்.  அதிலும் ஷேக்ஸ்பியர் என்றால் கேட்கவே வேண்டாம்.  பத்து தடவை பார்த்து விட்டுத்தான் எழுதுவது.  எனவே தவறாக இருக்க வாய்ப்பே இல்லை.  அதை மென்மையாக அவரிடம் எடுத்துச் சொன்னேன்.  ஓ, ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்து போனேன்.  ஆர். ராஜகோபாலன் கவிஞர் மட்டும் அல்ல; ஆங்கிலப் பேராசிரியரும் கூட.  ஆங்கிலப் பேராசிரியர் சொன்னால் எப்படித் தவறாக இருக்கும்?  அவசரமாக வீட்டுக்கு வந்து ஷேக்ஸ்பியரைப் புரட்டினால் நான் கொடுத்திருந்த மேற்கோள் லியர் மன்னனிலிருந்துதான்.

இந்தச் சம்பவம் சார்வாகனின் இரங்கல் கூட்டத்தின் போது நடந்தது.  நானும் வேறு சில எழுத்தாளர்களும் பேசினோம்.  என்னுடைய பேச்சில் மிஷல் வெல்பெக் பற்றிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன்.  பேசி முடித்ததும் வேறொரு எழுத்தாளர் பேசினார்.  அப்போது என் பக்கத்தில் அமர்ந்திருந்த கவிஞர் என் காதருகே வந்து – அதற்கு அவசியமில்லை, அவர் ரகசியம் பேசினாலே பத்தடிக்கு அப்பால் கேட்கும் –  நீங்கள் குறிப்பிட்ட ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் பெயரை ஹவுளேபெக் என்று உச்சரிக்க வேண்டும் என்று தீர்மானமான குரலில் சொன்னார்.  நான் ஒன்றும் தெரியாதவன் போல் ஓ அப்படியா என்று சொல்லி பூம்பூம் மாடு போல் தலையாட்டினேன்.  கவிஞரை நான் சந்தித்துப் பத்து ஆண்டுகள் இருக்கும்.  நான் பூம்பூம் மாடு போல் தலையாட்டியதில் என்ன கண்டு பிடித்தாரோ தெரியவில்லை; கவிஞர் மீண்டும் என் காதருகே வந்து, ”நீங்கள் நாளைக்கு இது பற்றி எழுதும் போது நீங்கள் பேசிய உச்சரிப்பிலேயே எழுதி விடப் போகிறீர்கள் என்றுதான் சொன்னேன்.  ஹவுளேபெக் என்று எழுத வேண்டும்.  ஹெச்-ஓ-யூ-ஈ-யெல்-யெல்-ஈ-பீ-ஈ-சீ-க்யூ.  ஹவுளேபெக் என்று உச்சரிக்க வேண்டும்” என்றார்.  இரங்கல் கூட்டம் டிஸ்கவரி புக் பேலஸில் நடநது கொண்டிருந்தது.  அந்த அரங்கில் சுமார் முப்பது பேர்தான் அமர முடியும்.  மேடை என்று எதுவும் கிடையாது.  மைக்கில் பேசுபவருக்குப் பக்கத்திலேயே வரிசையாக மற்ற பேச்சாளர்கள் அமர்ந்திருப்பர்.  கவிஞர் என் காதருகே பேசிய பேச்சால் மேடையில் பேசிக் கொண்டிருந்தவருக்கு நிச்சயம் உபத்திரவம் ஏற்பட்டிருக்கும்.  இவ்வளவு சின்ன அறையில் ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது இப்படிக் குறுக்கே வந்து பேச வேண்டுமா?  இந்தப் பொது நாகரீகம் கூட இல்லாமல் இவர்களெல்லாம் எதைப் படித்துக் கிழிக்கிறார்கள் என்று தோன்றியது.  ஆனால் நானும் அந்தப் படித்தவர் கும்பலைச் சேர்ந்தவன் தானே?  அதனால் கவிஞருக்குப் பதில் சொன்னேன்.

”நான் அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் மூன்று ஆண்டுகள் ஃப்ரெஞ்ச் படித்தேன்.  அவர் பெயரை வெல்பெக் என்றுதான் சொல்ல வேண்டும்.”  கவிஞர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

கவிஞர் அப்படி என் காதருகில் வந்து சொன்னபோது திடீரென்று என் மூஞ்சியில் பலமான ஒரு குத்து விழுந்தது போல் உணர்ந்தேன்.  எப்படி இவர்களுக்கு மற்றவர்களைத் திருத்த வேண்டும் என்று தோன்றுகிறது?  அதுவும் இப்போது உலகமே உள்ளங்கையில் வந்து விட்ட நிலையில்?   கூகிளைத் திறந்து Houellebecq என்று போட்டு, எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கேட்டால் வெல்பெக் என்று பதில் சொல்லி விடுகிறது கணினி.  இவ்வளவு சல்லிசாகக் கிடைக்கக் கூடிய ஒரு விஷயத்தைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் மற்றவர்களைத் திருத்தப் புறப்படுவதற்கெல்லாம் அந்தக் காலத்துத் தாசிகளுக்கு இருந்ததைப் போன்ற ஒரு லஜ்ஜையற்ற மனம் வேண்டும்.

நான் தபால் இலாகாவில் பணி புரிந்த போது நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வருகிறது.  என் நண்பர் லோகநாதன் சொன்னது இது.  ஸர்க்கிள் ஆஃபீஸில் ராமகோபாலன் என்று ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார்.  லோகநாதன் கிளார்க்.  கிளார்க்குக்கும் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு படிதான் வித்தியாசம் என்றாலும் உண்மையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு என்றே சொல்ல வேண்டும்.  அது என்னவென்றால், கிளார்க் ஆயுள் பூராவும் – அதாவது உத்தியோக ஓய்வு பெறும் வரை – கிளார்க்காகவேதான் இருக்க முடியும்.  ஆஃபீஸர் கேடருக்குப் போகவே முடியாது.  அதிக பட்சம் ஹெட்கிளார்க்காக ஆகலாம்.  அவ்வளவுதான்.  ஆனால் இன்ஸ்பெக்டராகி விட்டால் அஸிஸ்டெண்ட் சூப்ரண்ட், சூப்ரண்ட், ஏப்பியெம்ஜி (அஸிஸ்டெண்ட் போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்) என்று மேலே மேலே போய்க் கொண்டிருக்கலாம்.  அதற்கு இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத வேண்டும்.  அதில் பாஸாகி விட்டால் சொர்க்கத்தின் படிக்கட்டில் கால் வைத்து விட்டதாக அர்த்தம்.

ராமகோபாலன் சமீபத்தில் அந்தப் படிக்கட்டில் கால் வைத்திருப்பவர்.  லோகநாதன் இருக்கைக்கு நேர் எதிரே டீப்பியெஸ்ஸின் சேம்பர்.  லோகநாதன் எங்கோ போய் விட்டுத் தன் செக்‌ஷனுக்குள் நுழையப் போனபோது டீப்பியெஸ்ஸின் சேம்பர் வாசலில் ராமகோபாலன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து “வாங்க சார், நம்ம ரூம்ல உக்கார்லாம்” என்று சொன்னார்.  உடனே சட்டென்று ராம்கோபாலன் முகத்தை மிகவும் இறுக்கமாக மாற்றிக் கொண்டு ”யெஸ்ப்பீ உள்ளெ போயிருக்காரு” என்று அதட்டலாகச் சொன்னார்.  ‘முட்டாளே, அறிவு இருக்கா உனக்கு?  எந்த நேரத்தில் எதைப் பேசுவது என்று வரைமுறை இல்லை?’ என்று அர்த்தம்.   வாயை மூடிக் கொண்டு செக்‌ஷனுக்குப் போய் விட்டார் லோகநாதன்.  பிறகு ஏதோ காரியமாக கால் மணி நேரம் கழித்து வெளியே கிளம்பிய போதும் ராமகோபாலன் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கக் கண்டு, ”ஏன் சார் இவ்வளவு நேரம் நிக்கணுமா?  என் செக்‌ஷனுக்கு வாங்க… உக்காந்திருந்திட்டு கூப்பிட்டதும் போகலாம்” என்று சொன்னார் லோகநாதன்.  உடனே ராமகோபாலன் மூக்கை விடைத்துக் கொண்டு ”நோ நோ…  உள்ள யெஸ்ப்பீ போயிருக்காரு… எந்த நிமிஷமும் கூப்ட்ருவாரு.  நாங்கதானே டிபார்ட்மெண்ட்டோட பால்பேரர்ஸ்.  நாங்க பாட்டுக்க உங்கள மாதிரி போயி ஒக்காந்துக்க முடியாது.  We are the pallbearers of the department” என்று சொன்னதும், சரி சார் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார் லோகநாதன்.  பிறகு சிறிது நேரம் கழித்துத் தன் செக்‌ஷனுக்குள் நுழைகிறார்.  அப்போதும் ராமகோபாலன் அதே இடத்தில் நிற்பதைப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல்  தன் இருக்கையில் போய் அமர்கிறார்.   அப்போது அங்கே வந்த ராமகோபாலன் “ஆமா…  Do you know the meaning of pallbearers?” என்று கேட்கிறார்.  லோகநாதன் அதற்கு “பிணத்தைச் சுமப்பவர்கள்” என்று பதில் சொல்கிறார்.  அதற்கு ராமகோபாலன், ”சீசீசீ…  you don’t know correct English…  பால்பேரர் என்றால் தூண்.  நான் சொன்னதற்கு அர்த்தம், நாங்கள்தான் இந்த டிபார்ட்மெண்டின் தூண்களாக இருக்கிறோம்” என்று சொல்கிறார்.  மறுநாள் லோகநாதன் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியிலிருந்து அர்த்தம் பார்த்து அதைப் புகைப்பட நகல் எடுத்து ராமகோபாலனுக்கு அனுப்பினார்.  அதைப் பார்த்து விட்டு ”நீங்கள் சொன்னதுதான் கரெக்ட் போல; ஹீ ஹீ” என்றார் ராமகோபாலன்.

மேற்கண்ட நான்கு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் பிராமண ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருகிறது.