மனிதாபிமானிகளே, கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி ஏழெட்டு தடவையாவது எழுதி விட்டேன்.  ஆனாலும் புதிது புதிதாக வரும் வாசக நண்பர்கள் நான் எழுதிய பழைய கட்டுரைகளை வாசிக்காமல் வருவதால் அல்லது பழசை அப்படியே மறந்து தொலைத்து விடுகிறார்கள் என்பதால் மீண்டும் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறேன்.

அந்த நண்பர் கல்லூரி மாணவர்.  நான் வயசு வித்தியாசமெல்லாம் பார்ப்பதில்லை.  அவருடைய வயதில் அவர் படித்ததில் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் நான் படித்திருந்தேன்.  எனவே அந்த நண்பர் மீது எனக்கு மிகவும் மதிப்பு உண்டு.  ஒருநாள் அவர் எனக்கு ஃபோன் செய்தார்.  என்னால் எடுக்க முடியவில்லை.  அந்திமழைக்கும், தினமணிக்கும் வாராவாரம் எழுதுவதாலும், அதில் தினமணி கட்டுரைக்காக இரவு பகலாகப் படிக்க வேண்டியிருப்பதாலும் எனக்கு நேரமே போதுமானதாக இருக்க மாட்டேன் என்கிறது.  ஆனாலும் நண்பருக்கு நாளை மாலை நான் உங்களை அழைக்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.  ஆனாலும் மறுநாள் மாலைக்குள் கட்டுரையை முடிக்க முடியாததால் அவரை அழைக்க முடியவில்லை.  ஆனால் அவர் அழைத்தார்.  நான் உங்களை அழைக்கிறேன் என்ற செய்தியின் நுணுக்கம் புரியவில்லை போல என்று நினைத்துக் கொண்டேன்.  அழைப்பை ஏற்க முடியவில்லை.  எழுதிக் கொண்டிருந்தேன்.  இன்னும் வேலை முடியவில்லை; நாளை அழைக்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.  ஆனாலும் இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து விட்டதால் அவரை அழைத்தேன்.  நான் யாரை அழைத்தாலும் இப்போது பேசலாமா; பேசக் கூடிய நிலையில் இருக்கிறீர்களா என்று கேட்பதே வழக்கம்.  அதுபோல் அவரிடமும் கேட்டேன்.  தாராளமாகப் பேசலாம்.  நீங்கள் ஃபோனை கட் பண்ணுங்கள்; நான் அழைக்கிறேன் என்றார்.  ஆஹா வந்துட்டார்யா மனிதாபிமானி என்று எனக்கு உள்ளுக்குள் கழுதை உதைத்தது.  ”ஏங்க?  இப்பவே பேசினா என்ன?  ஏன் கட் பண்ணனும்?” என்று கேட்டேன்.  “இல்ல, எனக்கு கில்ட்டியா இருக்கு… அதுனாலதான்… கட் பண்ணுங்க… நானே கூப்பிட்றேன்.”

கட் பண்ணினேன்.  நண்பர் அழைத்தார்.  நான் ஃபோனை எடுக்கவில்லை.  இரண்டு மூன்று முறை அழைத்தார்.  நான் எடுக்கவில்லை.  கட் பண்ணச் சொன்னது செருப்படி வாங்கியது போல் இருந்தது.  நாம் ஏன் இலக்கியம் படிக்கிறோம்?  நம்முடைய வாழ்வை செழுமைப்படுத்திக் கொள்வதற்காக.  நம்முடைய நுண்ணுணர்வுகள் அற்புதமாக இருந்தால் வாழ்வும் அற்புதமாக இருக்கும்.  முதலில் மற்றவர்களைப் பற்றி நினைப்பதை விடுங்கள்.  அப்படிச் செய்தாலே இந்த உலகம் இன்னும் நன்றாக இருக்கும்.  ஹிட்லர் ஜெர்மானிய தேச மக்களுக்காகத்தான் யோசித்தான்.  மற்றவர்களுக்காக யோசிப்பது, மற்றவர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவது என்பது கத்தியைக் கையாளுவது போல.  கொஞ்சம் பிசகினால் மற்றவரின் குடலைக் கிழித்து விடும்.

சார்வாகன் மற்றவர்களுக்காகவே வாழ்ந்தவர்.  ஒரு உதாரணம்.  பாரவியும் சார்வாகனின் மற்றொரு நண்பரும் சொன்னது.  பெயர் மறந்து போனேன்.  மன்னிக்கவும்.  சார்வாகன் உலகம் பூராவும் சுற்றியவர்.  தொழுநோயாளிகளைக் கண்டு சமூகமே பயந்து நடுங்கிக் கொண்டிருந்த போது அவர்களின் கைகளைப் பிடித்து வருடி விட்டு சிகிச்சை செய்தவர்.  தொழுநோயாளிகளின் கைகள்தான் சார்வாகனின் பணிக்கான சவால்.  பணிக்கான களம்.  சார்வாகன் ப்ரஸீல் சென்றிருந்தார்.  ஒரு இடத்தில் ஒரு இளம் பெண் ஏதேதோ சொல்லிக் கத்திக் கொண்டிருக்கிறார்.  போர்த்துகீஸ் மொழி சார்வாகனுக்குத் தெரியாது.  பக்கத்தில் இருந்தவரிடம்,  ”இந்தப் பெண் யாரைத் திட்டுகிறாள்?” என்று கேட்கிறார் சார்வாகன்.  ”திட்டவில்லை; பரவசத்தில் ஏதேதோ பிதற்றுகிறாள்.  இவளுடைய கை சரியாகி விட்டது.  இத்தனை நாள் தொழுநோயால் கை விரல்கள் மடங்கியிருந்ததால் வீட்டை விட்டு வெளியிலேயே போகவில்லை.  இப்போதுதான் இவள் உலகத்தைப் பார்க்கிறாள்.  அந்தப் பரவசத்தில் கத்துகிறாள்” என்கிறார் அவர்.  உடனே சார்வாகனுக்கு ஆஹா, நம்முடைய வேலையை இங்கே ஒருவர் செய்கிறார் போலிருக்கிறதே என்று                ஆர்வம் பொங்கிக் கொண்டு வருகிறது.   ஏனென்றால், உலகிலேயே தொழுநோயாளிகளின் மடங்கிய கைகளை நீட்டச் செய்வதற்கான வழிமுறையைக் கையாண்டு கொண்டிருப்பவர் சார்வாகன் மட்டும்தான்.  ஏதேனும் புதிய வழிமுறை இருந்தால் அதையும் தெரிந்து கொள்ளலாமே என்று அவரது ஆர்வம் கூடுகிறது.  அப்போது அந்த நபர், இந்த டெக்னிக்கின் பெயர் சீனிவாசன் டெக்னிக்; அதைக் கொண்டுதான் இந்தப் பெண்ணின் கைகளை சரி பண்ணினோம் என்று சொல்ல சார்வாகன், அந்த சீனிவாசன் நான் தான் என்கிறார்.

இந்தச் சம்பவத்தை சார்வாகன் நண்பரிடம் சொன்னபோது எளிதில் உணர்ச்சிவசப்படாத சார்வாகனின் கண்களே கலங்கி விட்டனவாம். இதற்கு மேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று பரவசத்தோடு சொன்னாராம் சார்வாகன்.

இப்படி மற்றவர்களுக்காகப் பணி செய்வது வேறு.  நான் சொல்லும் தருணங்கள் வேறு.  ஏனென்றால், மேலே கண்ட காட்சியில் ஒரு தொழுநோயாளியும் ஒரு மருத்துவரும் இருக்கிறார்.  ஆனால் இங்கே நம்முடைய உலகில் என் மனைவி, என் தந்தை, என் பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர்,  ஆட்டோ ஓட்டுபவர், மளிகைக் கடைக்காரர், போகிறவர், வருகிறவர் எல்லோரும் மருத்துவராகவும் என்னை நோயாளியாகவும் பாவித்துக் கொண்டு உங்கள் நல்லதுக்காகச் சொல்றேங்க என்கிறார்கள்.  யார் நல்லதுக்காக யார் சொல்வது?  நீங்கள் மருத்துவர் நான் நோயாளி என்ற பாத்திரத்தை உங்களுக்கு வழங்கியது யார்?  தன்னுடைய உடம்பிலே நூற்றியெட்டு நோய்களை வைத்துக் கொண்டிருப்பவர் பார்க்கில் என்னைப் பார்த்து உங்க நல்லதுக்குச் சொல்றேன், ரொம்பக் குடிக்காதீங்க என்கிறார்.  அடுத்தவனுக்குப் புத்தி சொல்லும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தீர்களா?  அடுத்தவனுக்குப் புத்தி சொல்லும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தது யார்?

லா.ச.ரா.வின் பச்சைக் கனவு என்று ஒரு சிறுகதை.  நாயகன் கண் பார்வை இல்லாதவன்.  மனைவி அவனை மிகவும் நேசிப்பவள்.  இளம் தம்பதி.  அவள் அவனுக்கு விலையுயர்ந்த ஒரு கூலிங் கிளாஸைக் கொடுத்து (அவள் தம்பி வாங்கிக் கொடுத்தது) இதைப் போட்டுக் கொள்ளுங்கள்; பிறகு யாரும் உங்களைக் குருடன் என்று சொல்ல மாட்டார்கள் என்கிறாள்.

அந்தக் கண்ணாடியை வாங்கி தரையில் வீசி எறிகிறான் குருடன்.  கண்ணாடி சுக்குநூறாக உடைகிறது.

அந்தக் குருடனின் நிலையில்தான் ஒரு தமிழ் எழுத்தாளனாகிய நான் இருக்கிறேன்.  நான் குருடன் என்பது எனக்கு மட்டும்தான் நினைவில் இருக்க வேண்டும்.  உங்களுக்கு இருந்தால் அது ஆணவம்.  அதிகாரம்.  அயோக்கியத்தனம்.  என்னுடைய பலவீனத்தைப் பற்றி நினைக்க நீங்கள் யார் என்பதே என் கேள்வி. உங்கள் பலகீனத்தைப் பற்றி நினையுங்கள்.  சரி, நான் கண் பார்வையில்லாதவன், எனக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?  எனக்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்.

எனக்கு ஆசைகள் கிடையாது.  அதனால்தான் நான் துறவியைப் போன்றவன் என்று சொல்லி வருகிறேன்.  துறவிக்கும் எனக்கும் கொஞ்சம் இடைவெளிதான் இருக்கிறது.  காரணம், என்னுடைய இரண்டு பெரிய ஆசைகள்.

எனக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை கிடையாது.  கார் மீது ஆசை இல்லை.  உயிர் மீது ஆசை இல்லை.  உறவுகள் மீது ஆசை இல்லை.  புகழ் மீது ஆசை இல்லை.  பணம் தேவையாக இருந்தாலும் பணத்தின் மீதும் ஆசை இல்லை.  வாரம் ஒருமுறை சினிமாவில் நடிக்க அழைப்பு வருகிறது.  பணம் வரும்.  தொழிலை மாற்ற விருப்பம் இல்லை.  எதன் மீதும் எதன் மீதும் எதன் மீதும் ஆசை இல்லை.  இரண்டே ஆசைகள்தான்.  ஒன்று, என் எழுத்து நான் உயிரோடு இருக்கும் போதே ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.  ஏன்?  தமிழில் உள்ள எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளும் ஆங்கிலத்தில் அல்லது வேறு ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால் என் எழுத்து மொழிபெயர்க்கப்பட்டால் அது மிலன் குந்தேரா, ஹூலியோ கொர்த்தஸார் அளவுக்கு உலகம் பூராவும் வாசிக்கப்படும்.  சும்மா புருடா அல்ல; ஸீரோ டிகிரியின் மொழிபெயர்ப்பு அதை சாதித்திருக்கிறது.  அதிலும் அது ஒரு மோசமான மொழிபெயர்ப்பு.  தமிழில் நான் அதை lipogrammatic ஆக எழுதியிருந்தேன்.  ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ஒரு, ஒன்று என்ற வார்த்தைகளே கிடையாது.  தமிழில் அப்படி ஒரு வாக்கியத்தை எழுதுவது கடினம்.  ஆங்கிலத்தில் The இல்லாமல் எழுதுவதைப் போல.  அதை நான் சாதித்திருக்கிறேன்.  ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு அப்படி வரவில்லை.  மேலும், பக்கத்துக்குப் பக்கம் தவறு உள்ளது.  ஒரு இடத்தில் ஆண்குறியைக் குறிக்க மர்ம உறுப்பு என்று எழுதியிருந்தேன்.  ஆங்கிலத்தில் mysterious part என்று வந்துள்ளது.  இந்த மொழிபெயர்ப்பையே அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள்.  ஏனென்றால், அதன் ஆங்கிலம் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு ஒரு துளிக்கூட நெருடலாக இல்லை.

இந்த நிலையில் என் மற்ற படைப்புகள் ஆங்கிலத்தில் அல்லது ஃப்ரெஞ்சில் போனால் அங்கே உள்ள வாசிப்புச் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.  இதுவரை அப்படி ஏற்படுத்தியிருக்கிறது. ஆதாரங்களை என்னுடைய விக்கிபீடியா பக்கத்தில் காணலாம்.

இரண்டாவது ஆசை, சீலே போன்ற தென்னமெரிக்க நாடுகளைப் பார்க்க வேண்டும்.  சுமார் நாற்பது ஆண்டுகளாக சீலே பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.  ஆனால் பார்த்ததில்லை.  இது எப்படி இருக்கிறது என்றால், பத்து ஆண்டுகள் மனித மருத்துவம் பயின்ற ஒரு மாணவன் இதுவரை ஒரு மனித உடலைப் பார்த்ததில்லை என்பது போல் இருக்கிறது.  அவமானம்.

இவ்வளவுதான் என் ஆசைகள்.  இந்த நிலையில் என் நண்பர் சொல்கிறார், நான் செலவு செய்து போன் பேசுவதால் அவருக்குக் குற்ற உணர்வாக இருக்கிறது என்று.  என்ன செலவு?  எத்தனை மணி நேரம் பேசினாலும் மாதம் 700 ரூபாய் தான் வருகிறது என்ற அளவுக்குத் தொலைபேசி சேவை முன்னேறி விட்டது.  அமெரிக்காவில் இருப்பவரிடம் கூட ஒரு பைசா செலவு இல்லாமல் ஃபேஸ்டைமில் பேச முடிகிறது.  ஆக, அந்த நண்பரோடு நான் போனில் பத்து நிமிடம் பேசினால் ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ ஆகலாம்.  இதற்கா குற்றவுணர்வு?  ஒரு பிச்சைக்காரனுக்கு நீங்கள் ரெண்டு ரூபாய் பிச்சை போட முடியுமா?  பத்து ரூபாய்க்குக் குறைவாகப் போட்டால் பணத்தை உங்கள் மூஞ்சியில் விட்டெறிவான்.  ஆக, ஒரு பிச்சைக்காரனை விடவா நான் கேவலமாகப் போய் விட்டேன்?  ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்காகவா நான் கஷ்டப்படுகிறேன்?  சரி, அப்படி என் தொலைபேசிக் கட்டணத்தைப் பற்றிக் கவலைப்படுபவராக இருந்தால் என் கட்டணத்தைக் கட்டுங்கள்.  நான் தடை சொல்ல மாட்டேன்.  ஒரு நண்பர் தான் மாதாமாதம் என் தொலைபேசிக் கட்டணத்தைக் கட்டுகிறார்.  அவருடைய பளுவை நீங்கள் கொஞ்ச நாள் வாங்கிக் கொள்ளுங்கள்.  ஒரு நண்பர் சத்தமில்லாமல் மாதாமாதம் ஐநூறு ரூபாய் எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.  இப்படி ஏதாவது செய்யுங்கள்.  இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது கூட அப்பல்லோ மெடிக்கல்ஸிலிருந்து என் மருந்து வந்து சேர்ந்தது.  5000 ரூபாய் கட்ட வேண்டும்.  அவந்திகா வைத்திருந்த வீட்டுச் செலவுப் பணத்திலிருந்து வாங்கிக் கொடுத்தேன்.  ப்ரிலிண்டா மாத்திரை ஒரு மாத்திரை 50 ரூபாய்.  நான் ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரை சாப்பிட வேண்டும்.  நேற்று இரவு சாப்பிடவில்லை.  இன்று காலையும் சாப்பிடவில்லை.

இதற்கிடையில் சில மனிதாபிமானிகள் வந்து என்னிடம் ஹெல்த்தைப் பார்த்துக்கோங்க என்று அறிவுரை.  என்னுடைய சுமையைக் கொஞ்சம் தானும் சுமக்கும் என் நண்பர்களுக்கு மட்டுமே இப்படிச் சொல்ல உரிமை இருக்கிறது.  என் பொருட்டு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவர்களுக்கு அந்த அறிவுரையைச் சொல்ல உரிமை இல்லை.  ஹெல்த்தை எப்படி நான் பார்த்துக் கொள்வது?  ஹெல்த் = பணம்.  ஒரு ப்ரிலிண்டா மாத்திரை விலை 50 ரூ.  ஒரு நாளைக்கு ரெண்டு மாத்திரை.

மேலும் ஒரு முக்கியமான விஷயம்.  நானும் நீங்களும் பேசும் போது பணம் என்ற இழிவான விஷயம் ஞாபகம் வரலாமா?  ஐயோ, சாருவுக்கு நம்மால் தொலைபேசிச் செலவாயிற்றே?  ஒரு ரூபாய்தான் செலவு என்றாலும் ஒரு ரூபாய் ஒரு ரூபாய்தானே?  அடக் கடவுளே, காலமெல்லாம் பணத்துக்கு எதிராகத்தானே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்?  என்னிடம் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் எல்லாம் ரொம்பத் தாராளமாகவே இருக்கிறது.  நேரம் தான் இல்லை.  என்னுடைய நேரத்தை நான் உங்களுக்குத் தருகிறேன்.  கோடி கொடுத்தாலும் கிடைக்காத என் நேரம்.  விலை மதிப்பே இல்லாத என் நேரம்.  என்னோடு பத்து நிமிடம் பேசவே நீங்கள் இருபத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தீர்கள்.  அந்த அளவுக்கு வேலைப்பளு உள்ள நான் வேலையை முடித்து விட்டு, உங்களுக்காகப் பத்து நிமிடம் ஒதுக்குகிறேன் என்றால் அது உங்கள் நட்புக்கு நான் கொடுக்கும் மரியாதை.  என்னுடைய நேரம் விலை மதிக்க முடியாதது என்றாலும் பணத்தால் அளக்க வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால் ஒரு கணக்குப் போடுவோம்.  என்னுடைய ஒரு மணி நேரத்தின் குறைந்த பட்ச விலை ஐந்தாயிரம் ரூபாய் என்றால் ஒரு நிமிடத்தின் விலை என்ன என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  பணக் கணக்கு என்றால் தொலைபேசிக் கட்டணத்தைப் போடாமல் என் நேரத்துக்கு விலை போடுங்கள்.

பல நூறு முறை எழுதி விட்டேன்.  பணத்தை விட எனக்கு நேரம் முக்கியம்.  நம்முடைய உரையாடலில் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால் நீங்கள் என்னோடு பேசும் தகுதியை இழந்து விட்டீர்கள் என்று பொருள்.  இது பற்றிப் பல முறை எழுதி விட்டேன் என்றபடியால் இவ்வளவு கடுமையாக எழுத வேண்டியிருக்கிறது.  இன்னொரு விஷயம், ரஜினிகாந்த் உங்களுக்கு ஃபோன் பண்ணினால் கட் பண்ணுங்க ரஜினிகாந்த், நான் கூப்பிடுகிறேன், உங்களுக்கு வீணா ஏன் ஃபோன் செலவு என்று சொல்வீர்களா?  சொல்ல மாட்டீர்கள்.  இல்லையா?  அப்படியானால் எழுத்தாளனிடம் மட்டும் ஏன் சொல்கிறீர்கள்?  எழுத்தாளன் என்றால் பிச்சைக்காரனா?  எனக்கு இப்போது கோபத்தில் பீப் வார்த்தைகளெல்லாம் மனதில் தோன்றுகிறது.  அடக்கிக் கொள்கிறேன்.  சமூகம்தான் எழுத்தாளனை பிச்சைக்காரனாக மதிக்கிறது என்றால் புத்தகங்களை வாசிக்கும் ஒருவரும் அப்படி நினைக்க வேண்டுமா?

மனிதாபிமானிகளும் பல சமயங்களில் மற்றவர்களை இம்சிப்பவர்களாக இருக்கிறார்கள்.  உங்கள் மனிதாபிமானத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உங்களைப் பற்றி சிந்தித்தாலே சமூகம் கொஞ்சம் முன்னேறும்.

நண்பரே, இதை இத்தோடு மறந்து விடுங்கள்.  மீண்டும் உங்களுடைய காரணத்தை என்னிடம் விளக்கி, ஸாரி சொல்லி என்னை மீண்டும் புண்படுத்தாதீர்கள்.

(இப்போது புரிகிறதா, என்னோடு ஏன் யாரும் பழகுவதில்லை என்று!?)