இவர் என்ன மனிதனா அல்லது அரக்கனா என்று தெரியவில்லை. நானும் எத்தனையோ பேருடைய அசாத்தியமான நினைவாற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன். அப்படியே புகைப்படம் எடுப்பது போல் முழுப் புத்தகத்தையும் மனதில் கிரஹிக்கக் கூடியவர் திலகவதி. இப்போது டாக்டர் ஸ்ரீராம் இறந்த காலத்துக்குள் ஏதோ ராக்கெட்டைப் போல் புகுந்து புறப்பட்டு வருகிறார். ஹவுளேபெக் கதை வெளிவந்து ஐந்து நிமிடத்தில் அவரிடமிருந்து ஒரு கடிதம். நீங்களே படித்துப் பாருங்கள். இப்படியெல்லாம் நண்பர்கள் கிடைக்கக் கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன்.
குறுங்கதை
டிசம்பர் 7, 2004
(தலைப்பு வைக்க வேண்டும்)
இப்போதெல்லாம் கணினி மூலம் உரையாடுவதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும் எப்போதாவது, நான் அறிந்த வாசக நண்பர் யாரேனும் ஹாய் சொன்னால் பதில் சொல்வது உண்டு. அதன்படியே அவருக்கும் சொன்னேன். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அவர், “நான் இப்போது ஜப்பானிய இயக்குனர் அகிராவின் சுயசரிதத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்,” என்றார்.
எனக்கு நன்றாகவே தெரியும், நம் இணையதளத்தின் வாசகர்கள் சராசரிகள் அல்ல என்பது. எனவே, எனக்கு அது ஆச்சரியமாக இல்லை. “நல்லது,” என்று பதில் சொன்னேன். உடனே அவர் அகிரா குரஸவா என்று தட்டினார். எனக்கு செவுளில் அடித்தது போல் இருந்தது. உடனே சட்டென்று எந்த பதிலும் கூறாமல் உரையாடலைத் துண்டித்தேன்.
***
சிறு பத்திரிகையைச் சேர்ந்த நண்பர் அவர். பின் நவீனத்துவம் சார்ந்த கோட்பாடு நுால்களை (ஃப்ரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை) வாசிப்பவர் என்பதால் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. அவருடைய வயது முப்பது இருக்கும். ஒரு நாள் உரையாடலினிடையே அவர் என்னிடம் கூறினார். “சாரு, தென்னமெரிக்காவில் எல் ஸால்வடார் என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கே…”
அங்கே என்பதற்கு மேல் நான் அவரை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்கவில்லை.
“நிறுத்துங்கள். உங்களோடு நான் பேசவிரும்பவில்லை,” என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று நடையைக் கட்டினேன். அதற்குப் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை.