மழை பற்றிய என் மூன்று கவிதைகளைப் படித்திருப்பீர்கள். சென்ற மாதம் மனுஷ்ய புத்திரன் உயிர்மைக்காக மழை, வெள்ளம் பற்றி ஒரு கட்டுரை கேட்டார். நான் ஒரு கதையை அனுப்பி வைத்தேன். கட்டுரை கிடைத்தது என்றார். ஐயோ அது கதை ஆயிற்றே என்றேன். என்னங்க இது, உங்களைத் திட்டுபவர்கள் சொல்வதையே நீங்களும் சொல்கிறீர்கள் என ஆச்சரியப்பட்டார். என்னைத் திட்டுபவர்களுக்கும் எப்படித் திட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பவனே நான் தானே? அவரிடம் நான் சொன்னேன், அவந்திகா என்று இருந்தால் கட்டுரை. பெருந்தேவி என்று இருந்தால் கதை. அவ்வளவுதான் வித்தியாசம். சரி, பகடி போதும். சற்று பின்னால் போனால் நான் பல ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட Testimony literature பற்றி நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். சாட்சி இலக்கியம் தமிழில் அதிகம் இல்லை. ஏன், இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். ஈழப் போர் பற்றிய சாட்சி இலக்கியங்கள் வந்திருக்கலாம்; ஆனால் வரவில்லை. (பாக்ஸ் கதைப் புத்தகம் இன்னும் படிக்கவில்லை; மன்னிக்கவும்.) ஆஸ்கார் லூயிஸ் எழுதிய லா வீதா சாட்சி இலக்கியத்துக்கு ஒரு மகத்தான உதாரணம். சென்னையின் மழை, வெள்ளம் குறித்துப் பல சாட்சி இலக்கியங்கள் வந்திருக்கலாம். ஆனால் எல்லோரும் கட்டுரையும் கவிதையுமாக எழுதித் தள்ளி விட்டார்கள். விநாயக முருகன் கூட இந்துவில் கட்டுரை தான் எழுதியிருந்தார். ஒரு நல்ல சாட்சி இலக்கிய நாவலுக்கான களம் அது. நான் உயிர்மையில் எழுதியிருக்கும் கதை சாட்சி இலக்கியத்துக்கு ஒரு உதாரணம். கதையின் கடைசி வார்த்தையை மனுஷ்ய புத்திரன் நீக்கி விட்டார். கட்டுரைக்கு அது தேவையில்லை என நினைத்திருக்கலாம். அல்லது, சிம்பு விவகாரம் காரணமாகவும் இருக்கலாம். அது ஒரு பீப் வார்த்தை. அந்த வார்த்தை இருந்தால்தான் அது கதை. இல்லாவிட்டால் அது கட்டுரை. அந்த வார்த்தை மாதர்சோத். அந்த வார்த்தை அந்தக் கதையின் கடைசியில் இருக்க வேண்டும். கதையைப் படித்தால் அதன் அவசியத்தை நீங்கள் உணர்வீர்கள். இந்த மாத உயிர்மை இதழில் அந்தக் ’கதை’யை நீங்கள் வாசிக்கலாம். உயிர்மைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் நன்றி.