நேற்று நடந்த சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுது விடாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே போனேன். நல்லவேளை. அந்த அசம்பாவிதம் நடக்கவில்லை. கூட்டத்தில் பேசும் போது பாரவி சொன்னார், ஒரு மாதம் பழகியதற்கே சாரு இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாரே, நான் நாற்பது ஆண்டுகள் சார்வாகனோடு பழகினேன், என் நிலை எப்படி இருக்கும் என்று. அவரது இழப்பைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் நான் அழுதது, அழுவது எல்லாமே எனக்காகத்தான். இப்படி ஒரு புதையல் என் வீட்டருகே இருந்தும் பார்க்காமல் போய் விட்டோமே என்ற கழிவிரக்கம்தான். சார்வாகன் ஒரு மகாத்மா. மகாத்மா என்ற வார்த்தைக்கு என்னென்ன அர்த்தங்கள் உண்டோ அத்தனையும் சார்வாகனுக்குப் பொருந்தும். அவர் இறந்த பிறகு சொல்லவில்லை. அவர் உயிரோடு இருக்கும் போதே சொன்னேன். நான் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் சார்வாகனைப் பார்த்து விட்டேன். இப்படி ஒரு மகாத்மாவை என் வாழ்நாளில் இனியொருமுறை காணக் கிடைக்குமா என்று ஏங்குகிறேன். இப்படி ஒரு மகாத்மாவை ஏன் இத்தனை நாள் பார்க்காமல் போனோம் என்ற கழிவிரக்கம் தான் என் அழுகையாய்ப் பொங்குகிறது. கூட்டம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை கலங்கிய கண்களுடனே இருந்த சார்வாகனின் மகள் பாரதியைப் போல் தான் நானும் இருந்தேன். பொதுவாக தந்தையர் தங்கள் அன்பை வெளிப்படையாகக் காண்பிப்பதில்லை. ஆனால் சார்வாகன் அன்பின் மொத்த உருவம். தன் சகோதரர்கள் மீதும் புதல்விகள் மீதும் எப்பேர்ப்பட்ட அளப்பரிய அன்பை வைத்திருந்தார் என்று அவர் பேசும் போது புரிந்து கொண்டேன். காலையில் நடந்த சுபசுவீகாரத்தின் போது தைரியமாக இருந்த பாரதி மாலையில் எங்கள் அனைவரின் பேச்சைக் கேட்டுக் கலங்கி விட்டார். என் பேச்சைப் பதிவு செய்த ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு என் அன்பு.