நல்ல சகுனம். காலை ஏழரை மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்காவில் ப்ரமோ ஷூட். அதனால் வழக்கமான நடைப்பயிற்சி உடையணிகளை விடுத்து கனவானாக முயற்சிக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு போனேன். ஷ்ருதி டிவி நண்பர் தான் வர முடியாதது பற்றி ஸ்ரீராமுக்கு காலை ஐந்தரை மணிக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். அதை ஸ்ரீராம் பார்த்த போது மணி ஏழரை. வடசென்னையிலிருந்து ஸ்ரீராமும், மேற்கு அண்ணா நகரிலிருந்து முத்துக்குமாரும் நானும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சந்தித்தது வீணாகி விட்டது. ஷ்ருதி டிவி நண்பரையும் குற்றம் சொல்ல முடியாது. வெளியூருக்கெல்லாம் வந்து நான் பேசுவதைப் பதிவு செய்து எல்லோருக்கும் வழங்குகிறார். அவர் உதவி இல்லாவிட்டால் என் பேச்சுக்கள் அனைத்தும் காற்றோடு போயிருக்கும்.
ஷூட்டை மாலை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இடையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்தது. யாரிடம் புலம்புவது என்று யோசித்த போது ஏன், எப்படி என்றெல்லாம் தெரியவில்லை, ஜெயமோகன் ஞாபகம் வந்தது. அழைத்தேன். உடனே கிடைத்தார். அதிர்ச்சியையும் என் கவலையையும் அவர் பகடியாக மாற்றி விட்டார். ஜெ.வுக்கு நன்றி. விழாவுக்கு அவரை இதுவரை அழைக்கவில்லையே என்ற ஞாபகம் வந்து அதையும் சொன்னேன். 27-ஆம் தேதி எங்கோ ஆந்திரப் பிரதேச கிராமத்தில் படப்பிடிப்பில் இருப்பேன் என்றார். அதெல்லாம் தெரியாது, வந்தால்தான் ஆயிற்று என்றேன். அவசியம் வருகிறேன் என்றார். வந்து விடுவார் என்பது மாதிரிதான் இருந்தது குரல். இன்னும் பல நண்பர்களை அழைக்கவில்லை. முதல் அழைப்பு ஜெயமோகனுக்குத்தான். இன்றிலிருந்துதான் எல்லோரையும் அழைக்க வேண்டும். லண்டனில் இருக்கும் சேனனையும் விழாவுக்கு அழைக்கிறேன். அவருடைய லண்டன்காரர் என்ற அருமையான சிறிய நாவலைப் படித்தேன். வீசா கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். அவரோடு கஜன் தெ கெம்ப்ளரும் வர வேண்டும். ஷோபா சக்தி இருக்கும் உயரத்தில் என் அழைப்பின் குரலே எட்டாதோ என்று தோன்றுகிறது. மின்னஞ்சல்தான் போட வேண்டும்.
எல்லோரையும் அழைக்கிறேன். ஃபெப்ருவரி 27 மாலை ஆறரை. சரியாக ஆறரைக்கு ஆரம்பித்து விடும். இடத்தைத் தேட வேண்டாம். எஸ்பிளனேடு, பாரிஸ் கார்னர், டெண்ட்டல் காலேஜ் அருகில் இருக்கிறது ராஜா அண்ணாமலை மன்றம். ஃபோர்ட் ரயில் நிலையம் எதிரில்.