சாகத் தயார் (4)

நாற்பது வருடம் பட்ட அடியினால் இலக்கியவாதிகள் என்றாலே அலர்ஜியில் இருந்தேன்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம்.  நான் சிறுகதைகள் பற்றிப் பேசினேன்.  மதியம் மூன்று மணி.  லேசாக மது அருந்தியிருந்தேன்.  கலா மோகன், கோபி கிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகளை சிலாகித்துப் பேசினேன்.  (கலாமோகன் பாரிஸில் வசிப்பவர்.)  அப்போது ஒரு நாகர்கோவில் பிரபலம் கோபியிடம் தெரிவது நிஜமான madness, சாருவிடம் தெரிவது போலி என்று விரிவாகப் பேசினார்.  சரி, அவருக்குத் தோன்றுவதை அவர் சொல்கிறார் என வாளாவிருந்தேன்.  அடுத்து, சாரு பாரிஸ் போவதற்காக கலாமோகனுக்கு சொம்படிக்கிறார் என்றார். பாய்ந்து சென்று அவர் சட்டையைப் பிடித்து விட்டேன்.  ஒரே கெட்ட வார்த்தை மயம்.  ஒரு மணி நேரம் அந்த வளாகமே கெட்ட வார்த்தைகளால் நிரம்பியிருந்தது.  வந்திருந்த பெண்கள் அடித்துப் பிடித்து ஓடி விட்டார்கள்.  எனக்கு ரௌடி என்ற பெயர் கிடைத்தது.    அதற்குப் பிறகு எனக்கு ரொம்பவே கெட்ட பெயராகி விட்டது.  நாற்பது ஆண்டுகளாகவே இப்படிப்பட்ட அவமானங்களோடும் கெட்ட பெயரோடும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  ஆனால் இப்போது நான் கெட்டவனாகி விட்டேன்.  யார் கெட்டவன்?  என்னை அடிப்பதற்காக 200 கிலோ கறி படு பயங்கரமான கெட்ட வார்த்தைகளோடு பாய்ந்து ஓடி வந்த போது சற்றும் கலங்காமல் அணுவளவேனும் அசங்காமல் கால் மேல் கால் போட்டபடி “சீ, லூசுப் பையா, உன்ன நான் மகன்றேன்… நீ என்ன அடிக்க வாரே…  போ… போய் உக்கார்” என்றேன் அல்லவா, அதுதான் அயோக்கியத்தனம்.  நான் கெட்டவனாகி விட்டேன்.  அப்போதைய என் எதிர்வினை ஒரு தந்திரம்.  அப்படிப்பட்ட தந்திரசாலி அல்ல நான்.  ஆனால் இப்போது கெட்டவனாகி விட்டேன்.  தண்ணி அடிப்பதை நிறுத்தியவுடன் தந்திரமும் கெட்ட புத்தியும் வந்து விட்டது.  என்னடா சொன்னே, ங்கோத்தா என்று அடிக்கப் பாய்ந்து 200 கிலோ கறியிடமிருந்து மாத்து வாங்கி செத்திருந்தால் நான் நல்லவன்.  ஆனால் கெட்டவனாகி விட்டேனே… அதனால்தான் ரொம்ப சாதுவாக அமர்த்தி அனுப்பினேன்.  ஒருவேளை உண்மையிலேயே ஞானியாகி விட்டேனோ என்னவோ, எனக்கே தெரியவில்லை.   இப்போதெல்லாம் இது போன்ற சந்தர்ப்பங்களில் கோபமே வருவதில்லை.