இப்போதெல்லாம் புத்தக வெளியீட்டு விழா என்றாலே அலர்ஜியாக இருக்கிறது. ஆனால் நண்பர்களின் விழாக்கள் அப்படி அல்ல. ஒத்த கருத்து உடையவர்களுக்குள் பிரச்சினை இல்லை. வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அமேதிஸ்ட் உணவகத்தில் உள்ள அரங்கில் கார்ல் மார்க்ஸின் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அ. மார்க்ஸ் பேசுகிறார். அடியேனும் பேசுகிறேன். அவசியம் வாருங்கள். அமேதிஸ்ட் என்று யாரிடம் கேட்டாலும் தெரியாது என்றே சொல்வார்கள். பூர்ஷ்வாக்கள் மட்டுமே செல்லும் இடம். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், ஒயிட்ஸ் ரோடு ஒருவழிப் பாதை. அமேதிஸ்டைத் தாண்டினீர்கள் என்றால் நாலு கிலோமீட்டர் மவுண்ட் ரோட்டை மீண்டும் சுற்ற வேண்டியிருக்கும். ஆனால் என்னால் மிகச் சரியாக வழி சொல்ல முடியும். ஒயிட்ஸ் ரோட்டில் இடது பக்கத்தில் சத்யம் தியேட்டரின் கார் பார்க்கிங் ஏரியா இருக்கும். அதற்கு எதிரே உள்ளதுதான் அமேதிஸ்ட். எனவே ஒயிட்ஸ் ரோட்டில் வரும் போதே வாகனத்தை வலது ஓரமாக ஓட்டிக் கொண்டு போக வேண்டும். அமேதிஸ்டைத் தாண்டினால் தினமலர் அலுவலகம் வரும். தினமலர் அலுவலகத்தை நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்றால் வேறு வழியில்லை; வண்டியிலிருந்து உடனே இறங்கி விடுங்கள். அமேதிஸ்ட்டுக்கு அடுத்துதான் தினமலர் அலுவலகம். அமேதிஸ்டுக்கு வேறு எந்த அடையாளமும் சொல்ல முடியாது.