பலமுறை எழுதியதுதான். மீண்டும் எழுதும் சூழ்நிலை. மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், அவர்கள் இந்தச் சூழலில் திருப்தி அடைகிறார்கள். நானோ இந்தச் சூழலையே அந்நியமாகப் பார்க்கிறேன். ஏன்? உலக இலக்கியமும் உலக சினிமாவும் நன்கு அறிந்த கமல்ஹாசன் போன்ற ஒருவரே தான் எழுதும் கிறுக்கல்களை கவிதை என்று நினைத்துத் தன்னை கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறார். ஞானக்கூத்தனே என் கவிதைகளைப் பாராட்டியிருக்கிறார் என்றால், அதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். அவந்திகா என்னிடம் பலமுறை, ஜெயலலிதா போன்ற ஒரு அற்புதமான பெண், அற்புதமான அரசியல்வாதி உலகத்திலேயே கிடையாது என்று சொல்வாள். நானும் ஆஹா ஆஹா ஆமாம் ஆமாம் என்பேன். ஏனென்றால், இந்த இடத்தில் விவாதமே சாத்தியமில்லை. இல்லம்மா, சே குவேராவும் ஜெயப்பிரகாஷ் நாராயணும்தான் நல்ல அரசியல்வாதிகள் என்று விவாதித்தால் போப்பா, உளறாதே, இனிமே உன்னிடம் பேசவே மாட்டேன் என்று போய் விடுவாள். இல்லாவிட்டால், நீங்கள்ளாம் பெரிய அறிவாளிங்க, நான் முட்டாள், உன்னிடம் வந்து பேச வந்தேனே என்று சிணுங்கிக் கொண்டு போவாள். இதெல்லாம் எதுக்கு? ஆஹா ஆஹா தான் சரியான பதில். ஞானக்கூத்தனும் அப்படித்தான் கமலின் ’கவிதைகளைப்’ பாராட்டி இருப்பார். நீங்களே உங்கள் கவிதைகளை ஞானக்கூத்தனிடம் காண்பித்து, இதோ என் கவிதைகளைப் பாருங்கள் என்று சொன்னால் அவர் என்ன பதில் சொல்வார்? இதெல்லாம் குப்பை கமல் என்று சொல்லும் உரிமையை அவருக்கு வழங்கியிருக்கிறீர்களா?
போகட்டும், ஒருவர் தன் உளறல்களைக் கவிதை என்று நினைத்துக் கொள்வதைக் கூட மன்னிக்கலாம். ஆனால் இயக்குனர் ஷங்கரை எழுத்தாளர் என்று குறிப்பிடுவதை மன்னிக்கவே முடியாது. இது எல்லோருக்கும் தெரியும். எ-ல்-லோ-ரு-க்-கு-ம் தெரியும். ஆனால் யாருமே கமலிடம் சொல்ல முடியாது. நானும் உளறி இருக்கிறேன். ஜெயமோகனும் உளறி இருக்கிறார். ஆனால் நாங்கள் உளறினால் அதைச் சுட்டிக்காட்ட எங்களைச் சுற்றி நூறு பேர் இருக்கிறார்கள். கமலிடம் அது போல் ஒருத்தர் கூட கிடையாது. எல்லோருமே அவர் சொல்வதற்கு ஆமாஞ்சாமி போட வேண்டும். சாரு ஹாசன் மட்டுமே விதிவிலக்கு. ஆனால் கமல் சாரு ஹாசனைப் பொருட்படுத்த மாட்டார் என்று நினைக்கிறேன். நான் எழுதுவதை எல்லாம் அவர் மீது நான் கொண்டுள்ள விரோதத்தால் எழுதுவதாக நினைப்பார். நல்லது.
இப்படிப்பட்ட சூழலில் வாழும் நான் என் சக எழுத்தாளர்களைப் போல் எப்படி திருப்தியுற முடியும். ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்புக்கு ஒரு லட்சம். ஸ்பானிஷ் மொழிபெயர்ப்புக்கு அம்பதாயிரம். மார்ஜினல் மேன் மொழிபெயர்ப்புக்கு ரெண்டரை லட்சம். இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்சம். இதில் ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் மொழிபெயர்ப்புக்குக் கொடுத்தது வீண். இத்தனையும் என் நண்பர்களிடம் பிச்சை எடுத்துக் கொடுத்தது. ஏன் நான் இதைச் செய்ய வேண்டும்? என் புத்தகங்கள் எவ்வளவு விற்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அறம் பொருள் இன்பம் என்ற நூல் இங்கே பத்து லட்சம் பேரால் படிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவரும் படிக்க வேண்டியது. 300 பிரதிகள் விற்றது. நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டாமா ஐயா? தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க என்னைப் பாதுகாப்பது என் நண்பர்கள் மட்டுமே. ஸ்ரீராம், காயத்ரி, ராம்ஜி, அராத்து, நிர்மல், ஜெகா, கார்ல் மார்க்ஸ், செல்வகுமார், ஸ்ரீதர், ராஜேஷ், புவனேஸ்வரி, மோகனா என்று ஒரு ஐம்பது பேர் இருக்கிறார்கள்.
என்னை விடுங்கள். சி.சு. செல்லப்பா, க.நா.சு.விலிருந்து தொடங்கி தஞ்சை ப்ரகாஷ் வரை விரிவாக அறிமுகம் செய்து நீண்ட கட்டுரைகள் எழுதினேன். தமிழ் தெரிந்த அத்தனை பேரும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம். புனித நூல். நான் எழுதியது என்றே நினைக்கக் கூடாது. முன்னோடிகள். முன்னோடிகள். பத்து லட்சம் பிரதி விற்றிருக்க வேண்டும். வெளிவந்த ஒரே ஆண்டில் ஆங்கிலத்தில் ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். 400 பிரதிகள் விற்றது. மொழிபெயர்ப்பு பற்றிப் பேசாதீர்கள். இப்போதுதான் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கண்டு பிடித்திருக்கிறோம்.
ஓரான் பாமுக்கை விட நான் சிறந்த எழுத்தாளன். நான் மட்டும் அல்ல; தமிழில் எழுதும் என் சகாக்களும்தான். ஆனால் ஓரான் துருக்கி மொழியில் எழுதும் நூல் வெளிவந்த ஒரே ஆண்டில் பத்து மொழிகளில் மொழிபெயர்ப்பு வந்து விடுகிறது. ரெண்டாம் வருடம் 40 மொழிகளில் தயார். இங்கே நக்க வேண்டியிருக்கிறது.
இதை இப்போது எழுதும் முகாந்திரம் என்னவென்றால், நான் கடந்த பத்துப் பதினைந்து தினங்களாக எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எதையும் எடுப்பதில்லை. ஸ்ரீராம், ராம்ஜி, காயத்ரி ஆகிய மூவரிடம் மட்டுமே பேசுகிறேன். பேச்சு, என் நூற்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு விஷயமாக இருப்பதால். நண்பர்கள் வீட்டுக்கும் போவதில்லை; சாப்பிட வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போகாமல் இருந்து விட்டேன். நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. மூன்று தினங்களுக்கு முன்பே மார்ஜினல் மேன் பிரதியை பதிப்பகத்திடம் கொடுத்திருக்க வேண்டும். இன்னும் எடிட்டிங் முடியவில்லை. 75 சதவிகிதம்தான் முடிந்துள்ளது.
காரணம் என்னவென்றால், வார்த்தைக்கு வார்த்தை சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன். உதயா தன் பள்ளிப்பருவத்தைப் பற்றிக் கூறுகிறான். அப்போதெல்லாம் வாத்தியார் கைகளில் எப்போதும் பிரம்பு இருக்கும்; நாங்கள் ரத்தம் சொட்ட சொட்ட அடி வாங்குவோம் என்று இருந்தது மொழிபெயர்ப்பில். ஆனால் அடுத்தடுத்த பக்கங்களில் உதயா முதல் பெஞ்ச் மாணவன், எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண் என்று இருக்கிறது. எப்படி முதல் பெஞ்ச் மாணவன் ரத்தம் சொட்டச் சொட்ட அடி வாங்குவான்? தமிழில் பார்த்தால், “நாங்கள்” என்று இல்லை; “மாணவர்கள்” என்று இருந்தது. அதேபோல் பல இடங்களில் தமிழர்களைக் குறிக்கும் போது we என்று இருந்தது. நான் பொதுவாக அப்படி எந்த இனத்தோடும் என்னைப் பிணைத்துக் கொள்வதில்லை. தமிழில் பார்த்தால் “நாங்கள்’ என்று இல்லை; “தமிழர்கள்” என்று இருந்தது. இப்படித்தான் நுணுக்கமாகச் சரி பார்க்க வேண்டியுள்ளது.
எனவே நான் போனை எடுத்துப் பேசவில்லை என்று யாரும் நண்பர்கள் கோபிக்க வேண்டாம். அதற்காக குட் மார்னிங் அனுப்பாமல் இருக்காதீர்கள், நண்பர்களே, மெஸேஜுக்கு மட்டும் தவறாமல் பதில் அனுப்பி விடுகிறேன். நேற்று நாகூரிலிருந்து என் நண்பர் பேசினார். பேசியே நான்கு ஆண்டுகள் இருக்கும். எடுக்காமல் இருக்க மனம் கேட்கவில்லை. எடுத்தேன். சுகம் விசாரித்து விட்டு, இப்போ என்ன எழுதிக்கிட்டிருக்கீங்க என்றார். இது போன்ற எரிச்சலூட்டும் கேள்வி எதுவும் கிடையாது. ஏதோ பதில் சொன்னேன். இதே ரீதியில் ஐந்து நிமிடம் குசலம் விசாரித்தார். பிறகு, விஷயத்துக்கு வந்தார். என் பையன் சிவில் எஞ்ஜினியரிங் முடிச்சிருக்கான், அவனுக்கு அங்கே ஏதாவது வேலை கிடைக்க சிபாரிசு செய்யுங்களேன் என்றார். ஏன், பிராமணர்கள் மட்டும் உயர உயரப் போய்க் கொண்டிருக்கிறார்கள்; இஸ்லாமியர்களால் அப்படிப் போக முடியவில்லை என்று நேற்று தெரிந்து கொண்டேன்.
இப்படித்தான் போனை எடுத்தால் மண்டைக் குடைச்சல். இந்த விஷயம் என்னை ரொம்பவே பாதித்து விட்டது.
பல நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நாவல் எப்போது வரும், புருடாவா அது என்று கேட்கிறார்கள். ராஸ லீலாவை எழுதி எட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இன்னும் ஆங்கிலத்தில் வரவில்லை. ஏப்ரலுக்கு மேல் அது ஆங்கிலத்தில் வந்தாலும் ஒன்றுதான்; வராவிட்டாலும் ஒன்றுதான். சர்வதேச இலக்கியப் பரிசுகளில் மூல மொழியில் எழுதி ஏழெட்டு ஆண்டுகள் ஆகி விட்டால் அதைப் பழைய புத்தகம் என்று ஒதுக்கி விடுவார்கள். அப்படித்தான் ஸீரோ டிகிரி Jan Michalski விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டும் இறுதிச் சுற்றில் விழுந்து விட்டது. எழுதி பல ஆண்டுகள் ஆகி விட்டன. இதே நிலை ராஸ லீலாவுக்கு ஏற்படக் கூடாது என்ற பெரும் பதற்றத்தில் இருக்கிறேன். ஏப்ரலுக்குள் அதன் மொழிபெயர்ப்பு முடிய வேண்டும். முடிந்தால்தான் ஸ்ரீவில்லிபுத்தூரைத் தொடங்குவேன். குறிப்புகள் எடுத்தாகி விட்டது. எழுத இரண்டு மாதமே எடுக்கும். ராஸ லீலாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு வராமல் என்னால் எதிலும் புதிதாக ஈடுபட முடியாது. நான் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக எழுதியவை சாருஆன்லைன் தளத்தில் குவிந்து கிடக்கிறது. தொகுத்தால் 20 புத்தகங்கள் வரும். தொகுக்கும் மனநிலையில் நான் இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்புகள் வர வேண்டும். அப்படியே தொகுத்தால் பழுப்பு நிறப் பக்கங்களைப் போல், அறம் பொருள் இன்பத்தைப் போல் 300 பிரதி விற்கும். இதற்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்.
எனவே தயவு செய்து என் மீது கோபம் கொள்ளாதீர்கள். மார்ஜினல் மேன் ஆங்கிலத்தில் டிசம்பரில் வந்து விடும். அப்போதே என் மனம் 50 சதவிகிதம் தெளிந்து விடும். மே மாதத்துக்குள் ராஸ லீலா மொழிபெயர்ப்பு முடிந்து விட்டால் முழுக்க சரியாகி விடுவேன்.