இந்தியாவில் வாழ்பவர்களுக்கு இங்கே நிலவும் பெண்ணடிமைத்தனம் கண்டு நெஞ்சு கொதிக்கும். எனக்கு தினமும் கொதிக்கிறது. ஆனாலும் காதலர்கள் உலகில் காதலன் தான் காதலியின் காலில் விழுந்து கிடக்க வேண்டியிருக்கிறது என்பதும் எதார்த்தம்தான்.
பூனைகளின் உலகில் பெண்ணடிமைத்தனம் இல்லை போல் இருக்கிறது. நம் ச்சிண்டூ இளைஞனாகி விட்டது. அவ்வப்போது அடுத்த தெருவுக்குப் போய் ஒரு வாரம் பட்டினி கிடந்து காதல் செய்து விட்டு வரும். பட்டினி என்று எப்படித் தெரியும் என்றால் அது கானாங்கெளுத்தி மீனைத் தவிர வேறு எதையும் தின்னாது. அது மட்டும் அல்ல; ச்சிண்ட்டூ ஈடுபடுவது கள்ளக் காதல் என்பதால் – அதாவது அடுத்தவனின் காதலியோடு காதல் புரிவது – அந்த அடுத்தவனிடம் கடியெல்லாம் பட்டு ரத்தக் காயத்தோடுதான் வரும். வந்ததும் நீண்ட நேரம் சிறுநீர் அடிக்கும். விலங்குகள் எப்படி இருக்கின்றன பாருங்கள். அது எங்கள் வீட்டுக் கொல்லையில் மட்டுமே மலஜலம் கழிக்கும். வேறு எங்குமே செய்யாது. அது அடுத்த தெருவுக்குப் போன ஒரு வார இடைவெளியில் கூட ஒருநாள் நம் வீட்டுத் தோட்டத்துக்கு வந்து சிறுநீர் அடித்து விட்டு ஓடி விட்டது.
ஒரு வாரம் கழித்து பெரும் விழுப்புண்களோடு வந்த ச்சிண்ட்டூ ஒன்றரை டம்ளர் தண்ணீர் குடித்தது. வழக்கமாக ரெண்டு மூன்று ஸ்பூன் அளவுக்குத்தான் குடிக்கும். ஒரு வாரப் பட்டினி.
பிறகு ஸ்னீக்கி என்ற பேரழகியை – ம்ஹும். பூனைகளில் எல்லா பெண் பூனைகளுமே பேரழகிகள்தான் – நம் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தது. ஸ்னீக்கியின் குரல் வேறு மாதிரி இருந்தது. ச்சிண்ட்டூ நம்மைத் தூக்க அனுமதிக்கும். ஆனால் ஸ்னீக்கியோ தொடக் கூட அனுமதிக்க மறுக்கிறது. சீறுகிறது.
சோகம் என்னவென்றால், ச்சிண்ட்டூ ஸ்னீக்கியின் காலில் விழுந்துதான் கதறவில்லை. அப்படிக் கெஞ்சுகிறது. தவிக்கிறது. தான் சாப்பிடாமல் ஸ்னீக்கி சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்படியெப்படியெல்லாமோ குழைந்து குழைந்து குரல் கொடுத்துப் பார்க்கிறது. ஸ்னீக்கி ச்சிண்டூவின் காதலை ஏற்க மறுத்து சீறிக் கொண்டே இருக்கிறது. அதனால் ச்சிண்ட்டூ இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடமால் வருத்தத்துடன் வீட்டிலேயே கிடக்கிறது. ஸ்னீக்கி வரும் போது மட்டும் உற்சாகத்துடன் அதனிடம் போய் செருப்படி வாங்குகிறது.
இந்தக் காதல் கதை எனக்கு மானுடத்தின் ஆண் ஜென்மங்களை ஞாபகப்படுத்துகிறது. காதல் என்று வந்தால் பூனையும் மனிதனும் ஒன்றுதான் போலிருக்கிறது.