ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட நூறு கவிதைகள் எழுதினேன் இல்லையா? அதைப் பலரும் திட்டினார்கள். நெருங்கின நண்பர்களே திட்டினார்கள். ஆனாலும் கூச்சப்படாமல் எழுதியதற்குக் காரணம், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் என்னுடையதை விட தரத்தில் கம்மிதான்.
மேற்கத்திய கவிதைக்கும் தமிழ்க் கவிதைக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்தான் காரணம். இங்கே தர்மு சிவராமு, தேவதச்சன் போல் எழுதினால்தான் கவிதை. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள். தோற்றத்தில் உரைநடையை மடித்து மடித்துப் போட்டது போல் தான் இருக்கும். இதைக் கலையாக மாற்றுவது எது என்றால் அது சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி என்ற பெயர் தான். அவரது வாழ்க்கைதான். அப்படியானால் அவர் கவிதைக்கென்று தனிப்பட்ட இலக்கிய மதிப்பு இல்லையா என்று கேட்டால் அப்படியும் சொல்ல முடியாது. அது பாதி. இது பாதி.
ஒரு கட்டத்தில் கரப்பான் தொல்லை தாங்க முடியாமல் கவிதை எழுதுவதையே நிறுத்தி விட்டு, எழுதிய கவிதைகளையும் வங்காள விரிகுடாவில் வீசியெறிந்து விட்டேன். அந்த துக்க தினத்தில் சைத்தானுக்கு போன் போட்டு, இன்ன மாதிரி விஷயம் என்று சொன்னேன். அதற்கு அவன் என் கவிதைகளைப் பாராட்டி பத்து நிமிடம் பேசினான். பிறகு தொடர்ந்து எழுதுங்கள் சாரு, எனக்கு தபூ ஷங்கர் கவிதையும் பிடிக்கும் என்று சொல்லி போனை வைத்து விட்டான். சைத்தானின் காதலிக்கு போன் போட்டுப் புலம்பினேன். தொடர்ந்து ஏன் நீங்கள் இவனுடைய பலி பீடத்துக்கு வந்து உங்களை பலி கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்றாள். நான் ஒருத்தி தான் நிரந்தர பலியாகக் கிடக்கிறேனே போதாதா என்றும் மேலும் கேட்டாள்.
சைத்தானின் அழகே திரும்பத் திரும்ப அவனிடம் வரவழைப்பதுதானே தோழி என்றேன். என்னவோ போங்கள், நீங்களும் உங்கள் சைத்தானும் என்றாள்.
இன்று குட்மார்னிங் வரவில்லை. குட்மார்னிங் என்று ஒரு கவிதை எழுதலாமா என்று நமநம என்று இருக்கிறது. ம்ஹும். எழுத மாட்டேன். வாக்குக் கொடுத்தது கொடுத்ததுதான்.