ராஸ லீலா – ஒரு வாசகனாக…

தான் எழுதிய பழி நாவல் வெளிவந்து பத்து ஆண்டுகள் கழித்து இப்போது அது பற்றிப் பரபரப்பாக விவாதங்கள் வந்து கொண்டிருப்பதன் அபத்தம் மற்றும் அவலம் பற்றி எழுதியிருந்தார் அய்யனார் விஸ்வநாத்.  தமிழ் எழுத்துச் சூழலின் எத்தனையோ அபத்தங்களில் ஒன்று அது.  தற்சமயம் ராஸ லீலா மறுபதிப்புக்காக பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  அந்த வேலை ராணுவக் கொட்டடி சித்ரவதை மாதிரி என்றும் எழுதியிருந்தேன்.   அப்போது ராஸ லீலா பற்றிய ஞாபகச் சிதறல்களிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை.  என் எழுத்தோடு பரிச்சயம் கொண்ட பெரும்பாலோர் என் எழுத்திலேயே ஆக முக்கியமானது ராஸ லீலா என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.  ராஸ லீலாவை வெறும் நாவலாக மட்டுமே அணுகிவிட முடியாது.  அது ஒரு கலைப் பொக்கிஷம்.

இங்கே இடைச்செருகலாக அய்யனாருக்கு தமிழ் எழுத்துச் சூழலின் வேறுபல அபத்தங்களையும் அவலங்களையும் சுட்ட விரும்புகிறேன்.  ராஸ லீலா முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு 2006.  அது கலா கௌமுதி என்ற மலையாள வாரப் பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் தொடராக வெளிவந்த நாவல்.  ட்டி.டி. ராமகிருஷ்ணன் தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்தார்.  ஒரு வாரம் கூட இடைவெளி இல்லாமல் வெளிவந்தது.  2003-இலிருந்து 2005 வரை வந்திருக்கலாம்.  இடையில் எனக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது.  அப்போதும் படுக்கையிலிருந்தே டிக்டேட் செய்து ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன்.  அந்தக் காலகட்டத்தில் என்னிடம் கணினி இல்லாததால் காகிதத்தில் கையாலேயே எழுதி, நெட் செண்டருக்குக் கொண்டு போய் தட்டச்சு செய்து அதை மின்னஞ்சலாக ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி வைப்பேன்.  தட்டச்சு செய்த பெண் தமிழ்ப் பெண் தான் என்றாலும் என் தமிழ் புரியவில்லை என்பதால் அவருக்கு நான் அதை டிக்டேட் செய்ய வேண்டியிருக்கும்.  வாராவாரம்.  இரண்டரை ஆண்டுகள்.  ஒரு வாரம் கூட விடாமல்.  தமிழில் எழுதப்பட்ட நாவல் தமிழ்நாட்டில் வெளிவர முடியாமல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு பிரபலமான வார இதழில் இரண்டரை ஆண்டுகள் வந்தது.  அப்போது நான் அரசு வேலையிலிருந்து விலகி விட்ட நேரம்.  காகிதம் வாங்குவதற்குக் கூட காசு இருக்காது.  திருவனந்தபுரத்தில் வருமான வரித் துறையில் கமிஷனராக இருந்த என் நண்பர் அம்பா ஷங்கர் தேவ் அங்கேயிருந்து ரீம் ரீமாக எனக்குக் காகிதங்களும் எழுதுகோலும் கொரியரில் அனுப்பி வைப்பார். பிறகு அவரும் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.  அது வேறு விஷயம்.

ராஸ லீலாவை ஏன் கலைப் பொக்கிஷம் என்று சொன்னேன்? அதற்கு முன்னால் அய்யனார் குறிப்பிட்ட அவலத்துக்கு வருவோம்.  2006-இல் வெளிவந்த அந்த நாவலுக்கு இன்று வரை எந்த விமர்சனமும் மதிப்புரையும் வந்ததாகத் தெரியவில்லை.  அதனால் இப்போது அதற்கு நானே ஒரு வாசகனாக சில அபிப்பிராயங்களைத் தெரிவிக்க முற்படுகிறேன்.

அந்த நாவலை ஒருவர் எந்த ஒரு அத்தியாயத்திலிருந்தும் படிக்க ஆரம்பிக்கலாம்.  தொடர் வரிசை என்பது கிடையாது.  அதில் பதிறாவது அத்தியாயத்தில் பதினாறாவது அடிக்குறிப்பில் கூபாவின் தாமஸ் அலேயாவின் கடைசி விருந்து (The Last Supper)  என்ற திரைப்படம் பற்றிய ஒரு பத்தி வருகிறது.  இயேசு கிறிஸ்து மீது மிகுந்த விசுவாசம் கொண்ட ஒரு நிலப்பிரபு அடிமைகளை வைத்து வேலை வாங்குவதனால் ஏற்படும் குற்ற உணர்வின் காரணமாக புனித வியாழன் அன்று தன் அடிமைகளில் 12 பேரைத் தேர்ந்தெடுத்து விருந்து கொடுக்கிறார்.  விருந்து முன்னதாக அடிமைகளின் கால்களைத் தன் கரங்களால் சுத்தப்படுத்துகிறார்.  விருந்தில் மதுவும் வெள்ளமாய் ஓடுகிறது.   எல்லோரும் நிறைபோதை.  ஒரு அடிமை ஈஸ்டர் நாள் அன்று விடுமுறை கிடைக்குமா என்று கேட்கிறான்.  அந்தக் காலத்தில் அடிமைகளுக்கு 365 நாட்களும் வேலைநாட்கள்தான்.  விடுமுறையே கிடையாது.   பிரபு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் போதையினால் ஏற்படும் போலி அன்பின் காரணமாக விடுப்பு கொடுக்கிறார்.  ஆனால் ஈஸ்டர் தினத்தில் மேற்பார்வையாளன் விடுமுறையை ரத்து செய்கிறான்.  உற்பத்தி பாதிக்கப்படும் என்கிறான்.  பிரபுவும் ஒப்புக் கொள்கிறார்.   ஏமாந்து போன அடிமைகள் மேற்பார்வையாளனைக் கொன்று விடுகிறார்கள்.  பிரபு தன் அடியாட்களைக் கொண்டு தான் கால் கழுவி விட்ட பனிரண்டு அடிமைகளையும் பிடித்து வரச் சொல்கிறார்.  11 பேர் அகப்படுகிறார்கள்.  அவர்களைக் கழுமரத்தில் ஏற்றுகிறார் பிரபு.  ஒரே ஒருவன் தப்பிச் செல்கிறான்.   சில நூற்றாண்டுகள் சென்று அவன் காஸ்ட்ரோ என்ற புரட்சியாளனாகத் திரும்பி வருகிறான்.

இந்தியாவில் அப்படி யாரும் தப்பிச் செல்ல முடியாது.  இங்கே இப்போதைய சூழலில் காஸ்ட்ரோக்களும் கிடையாது.   நாம் எல்லோருமே கழுமரத்தில் ஏற்றப்படுவதைத் தவிர இங்கே இந்திய அரசியலில் எனக்கு எந்த ஒளியும் தெரியவில்லை.

இதுதான் மோடி துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கால் கழுவி விட்டதன் செய்தி.  இப்படிப்பட்ட ஓராயிரம் செய்திகளைத் தன்னுள்ளே அடக்கியிருக்கிறது ராஸ லீலா.

ராஸ லீலாவின் அதே பதினாறாவது அத்தியாயத்தில் மாலி தேசத்துப் பாடகனான Ibrahim Hama Dicko பற்றிய குறிப்புகளும் வருகின்றன.  தன் திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குத் தரும் சீர்வரிசையாக (ஆஃப்ரிக்க நாடுகளில் மணமகன் தான் பெண்ணுக்கு சீர் செய்ய வேண்டும்) தான் உயிருக்குயிராய் வளர்த்த ஆட்டைக் கொடுக்கப் போகும் தருணத்தில் அந்த ஆட்டைப் பற்றி பமானா மொழியில் கசிந்துருகிப் பாடுகிறான்.  இந்தப் பாடகனையும் பாடலையும் நீங்கள் ஒரு நொடியில் இப்போது உங்கள் கைபேசியில் பார்த்து விடலாம்.  ஆனால் நான் இந்தப் பாடலைக் கேட்டது டிசம்பர் 25 இரவு 2000-ஆம் ஆண்டு.  பாரிஸில்.  கலாமோகன் வீட்டில்.  கலாமோகனின் மனைவி மாலி தேசத்தைச் சேர்ந்தவர்.  இது பற்றி எழுதியது 2003-இல்.   கணினி வசதியெல்லாம் கிடையாது.  இது பற்றி ராஸ லீலா தரும் அனுபவம் என்று ஒரு வாசகர் எழுதியிருக்க வேண்டும்.  அவலத்தைப் பாருங்கள், நாவலை எழுதிய நானே இன்று 16 ஆண்டுகள் கழித்து ஒரு வாசகனாக அதே நாவலின் நுணுக்கங்கள் பற்றி எழுதுகிறேன்.  தமிழ் வாழ்க்கை தரும் வினோத அனுபவம் இது.

***

இனி சாருஆன்லைன் இணைய தளத்தில் வாரம் இரண்டு கட்டுரைகள் எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணைய தளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006