18 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த நேர்காணல்

பதினெட்டு இருபது ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் என் பெயர் புயலைப் போல் சுழன்று வந்தது.  எந்தப் போராட்டம் நடந்தாலும் முதல் ஆளாக நான் தான் நிற்பேன்.  செங்கரா, ப்ளாச்சிமடா என்று பல போராட்டங்கள்.  அப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பத்திரிகையில் என் நேர்காணல் வரும்.  பின்வரும் நேர்காணல் அதில் ஒன்று.  இப்படிப்பட்ட நேர்காணல்கள் தமிழில் வந்ததில்லை.  தீராநதியில் வந்ததும் வெப்துனியாவில் முத்துக்குமார் எடுத்த நேர்காணலும் மட்டுமே விதிவிலக்கு.  கேரளத்தில் என்னிடம் பேட்டி எடுப்பவர்கள் நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசுவதை ஆடியோவில் பதிவு செய்து கொள்வார்கள்.  பிறகு அதை மலையாளத்தில் பிரதி எடுத்து பிரசுரிப்பார்கள்.  ஆக, அந்த நேர்காணல் தமிழில் வந்திராத நேர்காணலாக இருக்கும்.  மலையாளத்தில் வெளிவந்த அந்த நேர்காணல்களை என் நண்பர் உத்திரகுமாரன் தமிழில் மொழிபெயர்ப்பார்.  இந்த நேர்காணலின் மொழியை கவனியுங்கள்.  மலையாள மணம் தெரியும்.  தமிழே வேறு மாதிரி இருக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன் நான் எப்படி இருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.  இந்த சாருவை என் வாசகர் வட்ட நண்பர்கள் அறிய மாட்டார்கள்.  ஜெகாவுக்கோ, ஸாமுக்கோ, அராத்துவுக்கோ இந்த சாருவைத் தெரியாது.   இப்போதைய சாருவை விட 20 ஆண்டுகளுக்கு முந்தைய சாருவை அவர்களுக்கு மிகுதியும் பிடித்திருக்கும்.

ஒழுங்கின்மையின் வெறியாட்டம் என்ற நூல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கிலிருந்து இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் வெளிவரும்.  நேற்று இந்த நூலில் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது 2001-இல் எடுக்கப்பட்ட இந்த நேர்காணலை உங்களுக்கு வாசிக்கத் தரலாம் என்று தோன்றியது.  படித்துப் பாருங்கள்.  முழுப் புத்தகத்தையும் இன்னும் இரண்டு வாரங்களில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கிலிருந்து வாங்கிப் படியுங்கள்.  எத்தனையோ நூல்கள் எழுதியிருக்கிறேன்.  அவை எல்லாவற்றையும் விட இந்த நூலில்தான் நான் உச்சபட்சமாக என்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தோன்றியது.  காரணம் நான் அல்ல.  என்னை நேர்காணல் செய்த மலையாள புத்திஜீவிகள்.  அவர்கள்தான் என்னிடம் இருந்த காத்திரமான அம்சங்களை வெளிக் கொண்டு வந்தார்கள்.  அவர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.  இந்த நேர்காணல் கேரளத்தின் முக்கியமான இலக்கியப் பத்திரிகையான மலையாளம் இதழில் 18 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.

 

எழுத்து, தடை, அரசியல்

 

(ஒரு முன்குறிப்பு: மலையாளத்தில் வெளிவரும் இலக்கியப் பத்திரிகைகளில் ஒன்று மலையாளம். மாத்யமம், கலா கௌமுதி, மாத்ருபூமியைப் போல் மலையாளமும் ஒரு வாராந்திரப் பத்திரிகை. 12.10.2001 தேதியிட்ட மலையாளம் இதழில் வெளிவந்த நேர்காணல் இது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட செப்டம்பர் 11 அன்று நான் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறை மாணவர்களிடையே ஸீரோ டிகிரி பற்றியும் சமகால இலக்கியம் பற்றியும் உரையாற்றிக்கொண்டிருந்தேன். இந்த நேர்காணல் கோழிக்கோட்டிலேயே செப்டம்பர் 12 ஆம் தேதி எல். தோமஸ் குட்டியால் எடுக்கப்பட்டது.

மலையாளத்தில் இதுவரை சுமார் 20 நேர்காணல்கள் வெளிவந்திருக்கும். அவற்றில் இதுதான் முதல் நேர்காணல். இதற்குப் பிறகுதான் மாத்யமம் பத்திரிகைக்காக ட்டி.டி. ராமகிருஷ்ணன் எடுத்து, என் சக மலையாள எழுத்தாளர்களால் சுனாமி பேட்டி என்று சொல்லப்படும் நேர்காணல் வெளிவந்தது.

மலையாளத்தில் எடுக்கப்படும் நேர்காணல்களுக்கும் தமிழில் வரும் நேர்காணல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மலையாளத்தில் திரும்பவும் நாம் படித்துப் பார்க்க முடியாது. அப்படியே டேப் ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டுபோய் பிரதி எடுத்து வெளியிட்டுவிடுவார்கள். தவறுகள் இருந்தால் சரி செய்யும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால், இதில் இன்னொரு சௌகரியம் இருக்கிறது. எழுதிக் கொடுக்கும் நேர்காணலைவிட இதில் ஒரு சௌஜன்யத் தன்மை இருப்பதை உணர முடிகிறது. நேர்காணல் இங்கே ஒரு உரையாடலாக மாறிவிடுகிறது. உடனுக்குடன் எதிர்வினை ஆற்ற முடிகிறது. யோசிக்கிறார், ஆழ்ந்த மௌனம், சிரிக்கிறார் என்று நம்முடைய அபிநய பாவனைகளையும் பதிவு செய்யும் வசதி உண்டாகிறது.

அடுத்து, மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் போது அந்த மொழியே வேறு விதமான கவித்துவத்தோடு வருவதை இப்போதுதான் புதிதாக உணர்ந்தேன். இதை இந்த நேர்காணலிலும் காண முடியும்.

நேர்காணல் கொடுத்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் பல கருத்துக்கள் இப்போது மாறிவிட்டன. குறிப்பாக, கூபா பற்றி.

மலையாளத்தில் வெளியான இந்த நேர்காணலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்: மா. உத்திரகுமாரன்.)

மெல்லிய குரல், சிரிக்கும்போது நேர்க்கோடு போட்டது போன்ற கண்கள், ஜீன்ஸ், டி-ஷர்ட், ஒரு காதில் வளையம். தமிழ் இலக்கியத்தில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா என்னும் படைப்பாளி அவ்வாறுதான். எழுத்தில் தனக்கேயான தனி வழிகளைக் கொண்டுள்ள இந்த 46 வயதுக்காரனின் கூச்சமற்ற எழுத்து அனைவரை யும் முகம் கோண வைக்கிறது. எதிர்க்கலாச்சாரவாதியான இவரது எழுத்து மலையாள வாசகன் இதுவரை அறிந்திராத ஒரு தமிழ் சமூகத்தை அறிமுகப்படுத்துகிறது. இவரது ஸீரோ டிகிரி என்ற நாவலை டாக்டர்.ஜி. பாலசுப்ரமணியமும், டாக்டர். பி.எம். கிரிஷம் சேர்ந்து மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எக்ஸ்டென்ஷி யலிசமும் பேன்சி பனியனும் (நாவல்), நேநோ (சிறுகதைகள்) துவங்கி பல கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும் அவரது படைப்புகளாக இருக்கின்றன. இத்தகைய கௌரவமான இலக்கியச் செயல்பாட்டுடன் கூடவே சிறு பத்திரிகைகளிலும் வெகுஜன பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார்.

Classical, Non-Classical கலைகளில் ஒரே மாதிரி ஈடுபாடு கொண்ட இவர் தனது எழுத்தின் கூர்மையைக் காப்பதிலும் கவனம் கொள்பவர். சமூக வாழ்வில் புறம் தள்ளப்பட்டவர்களின் கதை, நவீனமானதொரு படைப்பு முறையில் ஸீரோ டிகிரியில் காட்டப்படுகிறது. பெண்ணிய வாதிகளால் ஒரே நேரத்தில் ஆக்கிரமிக்கப்படவும், ஆதரிக்கப்படவும் செய்ததொரு படைப்பு அது. வெகு சுலபமாக உள்ளே நுழைந்துவிட முடியும் என்ற மனோபாவம் கொண்ட அசட்டையான வாசகனைத் தடுக்கும் ஸீரோ டிகிரி மேற்தளத்திலுள்ள பாலின விவரணைகளின் பெயரால் மிகுந்த வசைகளுக்கு ஆளானது. மேதிலும் (மேதில் ராதா கிருஷ்ணன்), முகுந்தனும், பஷீரும், விஜயனும் அனுபவித்த கருப்பொருள் ரீதியான வேறுபாடுகளையும் இப்படைப்பு நமக்கு நினைவுறுத்தும். என்றாலும், ஒப்பீட்டு ஆய்வு இங்கே முக்கியமல்ல. ஏனென்றால் உள்ளடக்கத்திலும், சொல்முறையிலும் ஸீரோ டிகிரி வேறுபட்டது.

தங்களது படைப்புகளும், நிலைப்பாடுகளும் பொதுவாக விவாதத்தை உருவாக்குகின்றதே? இது விளம்பரத் தந்திரமல்லவா?

இல்லை. எனது அபிப்பிராயங்கள் மிகவும் இயல்பானவை. விளிம்பு நிலை மனிதர்களுடையவை அவை. அவர்கள்தான் என் உலகம். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன். அதுவும் கலப்பினம். என் அம்மா பர்மா அகதி. அப்பா, ஆந்திராவிலுள்ள காட்டு நாய்க்கன் இனம். அப்பாவின் அம்மாவோ மலையாளி. இந்து என்றாலும் தமிழ்நாட்டில் நாகூர் என்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில்தான் நான் வளர்ந்தேன். இத்தகைய சூழல்களும், கலாச்சார வேறுபாடுகளும் என் படைப்பில் காணப்படும். அது மத்தியத்தர வர்க்கத்திற்கு அதிர்ச்சியாகத் தெரிகிறது. கலாச்சார வேறுபாடுதான் காரணம். உதாரணத்திற்கு, மின்கம்பியை எடுத்துக் கொள்வோம். அது கடந்துசெல்லும் பொருளை ஒட்டி வேறுபடுகிறது. இரும்பிலும் ரப்பரிலும் ஒரே மாதிரி அல்ல. நாம் அதைத் தொட்டால்? இதைப் போன்றுதான் என் எழுத்தும் அதிர்வை ஏற்படுத்துகிறது.

எழுத்தில் மட்டுமல்ல, சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி நான் சொன்னதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலக Classicகளுடன் அப்போது தமிழை ஒப்பிட்டுப் பார்த்தேன். தமிழ் சினிமா எங்கோ அதல பாதாளத்தில் கிடக்கிறது. சிவாஜிக்குத் திறமையிருந்தாலும் அவரைக் கட்டுப்படுத்துவது இந்த சினிமா கலாச்சாரம்தானே? அதன் காரணமாக அவரது நடிப்பு மோசமாகிறது. பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டிற்கும் பிறருக்கும் சிவாஜியைப் பற்றி உயர்வான கருத்து இருப்பது எனக்குத் தெரியும். என்றாலும் எனது அபிப்ராயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

மத்தியத்தர வர்க்கம்தான் கலாச்சாரக் காவலர்கள் என்பது போன்ற த்வனி இருக்கறது அல்லவா?

அப்படி அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதார்த்தம் அதுவல்ல. ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது. இவர்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். எல்லாவித சட்டங்களையும் நியமங் களையும் அனுசரித்து நடப்பவர்கள் மத்தியதர வர்க்கத்தினர். ஹர்ஷத் மேத்தாவை வரவேற்கும் அவர்கள் ஜேப்படித் திருடனை அடித்துக் கொல்லுவார்கள். ‘தெனாலி’ படத்தின் கா ஸட் விற்பனைக்குத் தடைவிதித்த சமயம், சொந்தக் காசு கொடுத்து வாங்கி, தன்னுடைய வீட்டிலிருந்து அதைப் பார்த்த ஒரு அரசு ஊழியரை போலிஸ்காரர்கள் பிடித்து 15 நாட்கள் ரிமாண்ட் செய்தார்கள். அந்த காஸட் தயாரித்த வர்கள் மீது நடவடிக்கை இல்லை. தடை விதிப்பதும் அதை நீக்குவதும் மேலே இருப்பவர்கள். அவர்கள் எப்போதும் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட நிலையைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

எதிர்க் கலாச்சாரவாதியென்றால் சாரு நிவேதிதா என்கிற சமஸ்கிருதப் பெயரை வைத்துக்கொண்டிருப்பது பொருந்தவில்லையே?

சாரு நிவேதிதா சமஸ்கிருதம்தான். தமிழ்மீது பெருமதிப்பு கொண்டவர் எனது தந்தை என்று சொல்லி இருந்தேனல்லவா? அதனால்தான் ‘அறிவழகன்Õ என்ற பெயரை எனக்கு வைத்தார். பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது வைத்த பெயர் அது. ஏழு வயதான பின்னர்தான் அம்மாவுக்கே எனக்கு அப்படி ஒரு பெயர் இருப்பது தெரியவந்தது. மற்றபடி ரவி என்றுதான் எல்லோரும் அழைத்தார்கள்.

தமிழின் சமகால இலக்கியத்தைப் பற்றி…

கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா., எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா., ஆதவன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, தஞ்சை பிரகாஷ், தர்மு சிவராமு, நகுலன், ப. சிங்காரம் என்று ஏராளமான பேர் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதிகளாக வெளியே அடையாளம் காட்டப்படுபவர்கள் சராசரிகளாக இருக் கிறார்கள். சாதாரண mediocre எழுத்தை உருவாக்கும் அவர்களே தமிழிலிருந்து வெளியே அறிமுகமாகிச் செல்கிறார்கள்.

இத்தகைய mediocre படைப்புகள் தவிர, Status Quoஎழுத்துக்களும் தமிழில் நிறைய உண்டு. உதாரணம், ஜெயமோகன். Status Quo எழுத்து என்றால் என்ன ? பள்ளிக்கூடங்களில் காந்தியை மகாத்மா என்றும் தேசத்தந்தை என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அம்பேத்கரைப் பற்றி யாருக்கும் தெரியாது. இப்படியே சகல துறைகளிலும் அதிகார வர்க்கம் சார்ந்த கல்வியே குழந்தைகளுக்குக் கற்பிக்கப் படுகிறது. இதனால் நம்முடைய மாணவர்களுக்கு சமூகம், அரசியல், வரலாறு, கலாச்சாரம் என்று எதைப் பற்றியும் சந்தேகம் வராமல் போகிறது. சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றுக்கு ஒரு மாற்று வரலாறு (Subaltern history) இருப்பதே அவர்களுக்குக் கடைசிவரை தெரிவதில்லை.

எல்லாம் பாதுகாப்பாகவும், முழுமையானதாகவும், நன்றாகவும் இருப்பதாக நம்புகிறார்கள் அவர்கள். இந்த நம்பிக்கையிலிருந்து உருவாக்கப்படுவதுதான் ஜெயமோகனின் படைப்புகள். இது போன்ற எழுத்துக்களால் இலக்கியத்துக்கோ, சமூகத்துக்கோ எந்தப் பயனும் இல்லை. இவை பழமையைப் புகழவும் செய்கின்றன. பண்பாட்டு வாழ்வில் சேகரிக்கப்பட்ட குப்பைக் கூளங்களைப் போற்றிக்கொண்டே இவைகளும் அவற்றில் ஒன்றாகக் கலந்துவிடுகின்றன. முதலில் இந்தக் குப்பைக் கூளங்களைக் களைந்தாக வேண்டும். இந்திய இலக்கியம் முழுவதுமே Gandhian Shit என்று எம். கோவிந்தன் ஒருமுறை கோபமாகச் சொன்னது ஞாபகம் வருகிறது. இந்தியாவின் சமகால இலக்கியம் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.

தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக சிலர் அறியப்படுகிறார் கள். இமயம், பாமா ஆகியோர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இமையத்தின் படைப்பு உலகம் மேற்சாதியினரின் பண்பாட்டைத்தான் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறது. கீழ்ச்சாதியினர்களுக்கிடையில் நிலவும் தீண்டாமையைச் சித்தரிப்பது அதன் வெற்றியாகக் கூறப்படுகிறது. மனுவினைப் பற்றி குறிப்பிடாமலே கீழ்சாதியினரிடமும் ஜாதீய ஆச்சாரங்கள் உண்டென்றும், அது இயல்பான தென்றும் கூறும் சித்தாந்தத்தை உண்டாக்க அது மேல்ஜாதியினருக்கு வாய்ப்பை வழங்குகிறது.

சிவகாமியின் நாவல் ஒன்றில் பகலில் இணை சேரும் தாழ்த்தப்பட்ட ஒருவனைப் பன்றி என்று எழுதுகிறார். அவனது குடிப்பழக்கத்தைப் பற்றியும் கேவலமான சித்தரிப்பு உண்டு. இருளில் மட்டும்தான் இணை சேர வேண்டும், குடிப்பது தீமையானது என்பது போன்ற மேல்வர்க்கத்தைச் சார்ந்த மதிப்பீடுகளைத்தான் இது போன்ற தலித் எழுத்தாளர்கள் முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கலாச்சாரத்தில் மதுவும், செக்ஸும் வாழ்வின் கொண்டாட்டங்களாக இருக்கலாம். திரையிடப்படாத வாழ்வைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். அத்தகைய ஒரு கலாச்சார சாத்தியத்தையே இல்லாமற் செய்வதன் வழியாக நடப்பிலுள்ள பிராமணிய மதிப்பீடுகளையே தூக்கிப் பிடிக்கிறார்கள் இத்தகைய எழுத்தாளர்கள்.

சுருக்கத்தில், ஸ்ரீகோவில் கதைகள் எழுதுகிறார்கள். இமையத்தின் ஆறுமுகம் என்ற நாவலை ‘புனித ஆறுமுகம்’ என்று தலித் விமர்சகரான ராஜ் கௌதமன் குறிப்பிட்டது இதனால்தான். நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாரதியின் ‘ஆறில் ஒரு பங்குÕ என்பது போன்ற கதைகளில் தெரியும் விசாலமான பார்வை இப்போது எழுதுகின்ற இவர்களின் எழுத்தில் இல்லை. சுருக்கதில் இவர்கள் எழுதுவதை ‘தயிர் வடை’ இலக்கியம் என்று சொன்னால் தப்பில்லை.

ப.சிங்காரத்தையும், நகுலனையும் போன்ற மேன்மையான படைப்பாளிகள் இருக்கிறார்கள். நான் அவர்களைத்தான் நெருக்கமானவர்களாக உணர்கிறேன். ஆனால், எங்களை தெம்மாடிகள் என்று அழைத்து எதிர்ப்பதையும் நிராகரிப்பதையும்தான் கலாச்சார காவலர்களாக இருக்கும் Status Quo எழுத்தாளர்கள் செய்து வருகிறார்கள். என்னுடைய படைப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எங்களது மூளையை மேற்கத்தியரிடம் அடமானம் வைத்திருப்பதாக சுந்தர ராமசாமி ஆட்சேபித்துள்ளார்.

அடிப்படையான ஒரு கேள்வி, எதற்காக நீங்கள் எழுதுகிறீர்கள்?

மலையேற்றம், விளையாட்டு, வேட்டை, இசை, பயணம், சினிமா, சமையல் என்று பல விஷயங்கள் என் விருப்பத்துக்குரியதாக இருக்கின்றன. என்றாலும் எழுத்துதான் எல்லாவற்றையும் விட சுலபமான ஊடகமாக இருக்கிறது. வேறு எதுவும் இல்லை. (கூர்மையான முகபாவத்துடன்) அத்துடன் கூடவே, நான் மிகவும் கவலை கொண்ட வன். நம்மைச் சுற்றியுள்ள உலகம் அவ்வளவு குரூரமானது. வன் முறையால் ஆனது. அது என்னை வேதனைப்படுத்துகிறது. Sensitive ஆன ஒரு கலைஞனால் அதைத் தாங்கமுடியாததாக இருக்கிறது. நான் எனது துக்கத்தை எழுதுகிறேன். நீட்ஷேவையும், வான்கோவையம் போன்ற நிஜமான கலைஞர்கள் பித்தர்களாக மாறியது இதைப் போன்ற மனநிலையில்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

அமெரிக்காவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் (செப்டம்பர் 11) அகப்பட்டுக்கொண்ட ஆயிரக்கணக்கானவர்களின் மரணம் போலவே குழல் கிணற்றில் (Boring) அகப்பட்டுக்கொண்ட தமிழ்நாட் டுச் சிறுவனின் மரணமும் என்னை வேதனைப்பட வைக்கிறது. இது போன்ற மரணங்கள் மிகக் கொடூரமானவை. அக்கிரமங்களும், பீதியும்தான் இப்படிப்பட்ட மரணங்களில் தெரிகிறது. அடுத்த வீட்டுக்காரனுக்கு எதிராக ஆயுதம் எடுக்கிறோம், பாகிஸ்தான் நம்முடைய அண்டை வீட்டுக்காரன்தானே? இத்தகைய குரூரம்தான் எழுதுவதற்கான தூண்டுதல் பலன் என்று எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் எழுத்தின் மூலமாகத்தான் இந்த மனித துக்கத்தைத் தாண்டியாக வேண்டியிருக்கிறது.

எழுத்தின் பயன்?

தத்துவார்த்தமாகப் பார்த்தால் அதனால் ஒரு பலனுமில்லை. ரில்கே, Residence on Earth-இல் சொல்கிறார்; ஓரிடத்தில் இல்லாவிட்டால் மற்றொரு இடத்தில் ஒரு வாழ்க்கை இருக்கிறது. பிரபஞ்சம் எவ்வளவோ பெரியது. அங்கே எழுத்து என்பது ஒரு சிறிய செயல்பாடுதான். அதன் பயன்பாடு என்னவென்று கேட்டால் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

வாழ்வைப் பொருள் பொதிந்த தாக்குவதற்கான (சிறிதளவேனும்) முயற்சிதான் எழுத்து என்று சொல்வதைப் பற்றி?

சந்நியாசம் போன்ற ஒன்றுதான் அது.

சந்நியாசம் வாழ்விலிருந்து தப்பிச் செல்வதல்லவா?

அப்படிச் சொல்லமுடியாது. வாழ்வின் பொருத்தப்படாமைக்கு எதிரான செயல் அது. (ஆழ்ந்த மௌனத்துக்குப் பிறகு) ஒருமுறை நான் சந்நியாசியாக விரும்பினேன். அவர்களுடனான தொடர்பு ஆழமான வாசிப்பு அனுபவத்தைத் தேட உதவியது. விரதங்களையும் விதிமுறைகளையும் மேற்கொண்டிருந்தேன். மவுன விரதத்தையும், பிராணாயாமத்தையும், தாந்த்ரீக யோகங்களையும் பயின்றிருக்கிறேன். சந்நியாசம் ஒரு வித நியூரோஸிஸ். நீட்ஷேவும் வான்கோவும் அதை அனுபவித்து இருக்கிறார்கள். எழுத்தின் வழியாக நான் அத்தகைய அனுபவங்களைக் கடந்து செல்கிறேன். அதுதான் என் பயன்.

எழுதத் துவங்குவதற்கான சூழல்களைப் பற்றி?

இளமையில் நான் பலவீனமாக இருந்தேன். அதனால் சிறுமிகளுடன் பல்லாங்குழியும், தாயமும் மட்டுமே விளையாட முடியும். நேரம் இருட்டினாலும் தொடரக் கூடிய விளையாட்டுகள் அவை. வீட்டிற்குள்ளேயே விளையாடலமல்லவா? லாந்தர் விளக்கை வைத்துக்கொண்டு இரவு பூராவும் விழித்திருந்து பெண்களோடு தாயம் விளையாடிய நாட்கள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. ரகசியமான காமம் ததும்பும் இரவுகள் அவை.

இப்போதும் சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. பூமியின் மேற்பரப்பில் பயணம் செய்ய முடியாததன் ஊனம் அனுபவப்படும் (பெருமூச்சு). பெரும்பாலும் உடன் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமிகள் திடீரென காணாமல் போவார்கள். விசாரிக்கும்போது அவர்களுக்குத் திருமணமானது தெரியும். நான் தனிமையை உணர்வேன். அப்போது அந்தப் பிரிவின் துக்கத்திலிருந்து விடுபடவே வாசிப்பைச் சரணடைந் தேன்.

வாசிப்பதில் உள்ள விருப்பம் அதிகமாகிக்கொண்டே போனது. நூலகத்தில் அதிக நேரம் செலவழித்ததால் கல்லூரித் தேர்வு எழுத அட்டென்டென்ஸ் கிடைக்கவில்லை. அறிவியல் மாணவனாக இருந் தேன். தேர்வு எழுத முடியவில்லை . புத்தகப் புழுவாக இருந்தேன். பள்ளி நாட்களிலேயே ஆங்கில, அமெரிக்க இலக்கியம் அறிமுகம் ஆகியிருந்தது. எனது உடலமைப்பு காரணமாக நாடகக்காரர்கள் பெண் வேஷம் கட்டுவதற்கு என்னை அழைத்திருக்கிறார்கள். நிறைய ஹோமோசெக்சுவல்ஸ் அதற்கு நிர்பந்தித்திருக்கிறார்கள். அதனாலேயே நான் ஆண்களை வெறுப்பவனாக மாறியிருந்தேன்.

பெண்களின் மணம்தான் எனக்குப் பிடித்ததாக இருந்தது. அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்கவும், அவர் களுக்கு ஏராளமான கதைகள் சொல்லவும் எனது வாசிப்பை நான் உபயோகித்தேன். மிகவும் இளமையிலேயே நிர்ப்பப் பாலியல் அனுபவம் உண்டானது. இப்போதுகூட உடலை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் எனக்குள்ள ஈடுபாட்டிற்கான காரணம் இதுவாக இருக்கலாம். என்னுடைய நளினமான, பெண்தன்மை நிரம்பிய தோற்றத்தை மாற்றிக்கொள்வதற்காக நான் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றேன். உடல் பயில்வானைப் போல மாறியது.

கல்லூரியில் விளையாட்டுக் குழுவோடு இணைந்துகொள்ள முடிந்தது. ஒருமுறை வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு காதல் ஏற்பட்டது. அவர்களுடைய சமுதாயத்தினர் அதை அறிந்துகொண்ட னர். அவர்கள் எனக்கு நெருக்கடி கொடுக்க முனைந்தபோது ஊரை விட்டே ஓடிவிட்டேன். டெல்லிக்குச் சென்றது அப்படித்தான். டெல்லி மாநில அரசில் சிவில் சப்ளைஸ் துறையில் வேலை கிடைத் தது. அங்கேதான் உலக சினிமாக்களிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் ஈடுபாடு ஏற்பட்டது. ஒரு இடதுசாரியும் நண்பனாகக் கிடைத்தான். அவனிடம் இருந்துதான் சே குவாராவைப் பற்றி அறிந்துகொண்டேன். பொலிவியன் நாட்குறிப்புகள் பற்றி அப்போதுதான் எழுதினேன். ஜான் ஆபிரஹாமையும் டில்லியில்தான் அறிந்து கொண்டேன். இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது பெருமரங்கள் வீழ்வதனுடன் அதனை ஒப்பிட்ட ராஜீவ்காந்தியின் அபிப்பிராயம் என்னை வேதனைப்படுத்தியது. அன்று கொல்லப்பட்ட நிரபராதி களைப் பற்றி எழுதிய கதைதான். பிளாக் நம்பர் 27 திரிலோக்புரி என்பது. இருந்தாலும் எழுதும்போது எழுத்து மட்டும்தான் எனக்கு முக்கியம். பறவை பறப்பதைப் போன்ற இயல்பான ஒன்று எழுத்து. ஒரு புத்தக செயல்பாட்டாளன் என்ற நிலையில் இயன்றவரை தீவிரமாகவும், தீட்சண்யத்துடனும் எழுதுவதுதான் என் இலக்கு.

ஒரு நோக்கமும் இல்லையென்றா சொல்ல வருகிறீர்கள்?

சிரிக்கிறார். எழுதும்முன்பு நான் தியான நிலையை அடைகிறேன். உள்ளே இருக்கும் துக்கத்தை மாற்ற எழுத்து உதவுகிறது. எழுதி முடித்ததும் மீண்டும் துக்கத்தில் வீழ்கிறேன். அதனால் மீண்டும் எழுதுகிறேன். தொடர்ந்து நடக்கும் நிரந்தரமான ஒரு செயல்பாடு இது. உள்ளுணர்வுதான் இதற்கு ஆதாரம்.

முழுமையும் Romantic-கான வாதம்?

அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை . ஈடுபாடும் கவனமும் எழுத்தில் மட்டும்தான். ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடும் அத்தலெட்டைப் பாருங்கள். 10 நொடியில் அவனுக்கு 100 மீட்டர் ஓடவேண்டும். வாழ்க்கை முழுவதும் சேகரித்த சக்தியை அங்கேதான் செலவழித்தாக வேண்டும். 10 Second-உம் 100 meter-உம் இந்த time–க்கும் Space-க்கும் இடையேயுள்ள தொடர்புதான். காலம் மற்றும் வெளி என்ற இரண்டுக்கும் இடையிலான பயணம்தான் அவனைத் தீர்மானிக்கிறது. அந்தப் பயணத்தைத்தான் எழுதும்போது நான் அனுபவிக்கிறேன்.

அங்கே உள்ள இடதுசாரி எழுத்தாளர்களைப் பற்றிய அபிப்பிராயம்?

குறிப்பிடும்படியான வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களையும் வெகுஜன சினிமாவின் நீட்சியாகத்தான் பார்க்கிறேன். மார்க்சீயப் பார்வை, தயிர்வடை சென்ஸிபிலிட்டியோடு இணைகிறது. நடைமுறை யில் உள்ள மதிப்பீடுகளையோ, பண்பாட்டையோ, கலாச்சாரத்தையோ அவைகள் உடைப்பதில்லை. பாரதியைப் பற்றி சினிமா எடுக்கும் போதும் இதுதான் நிலைமை. அவர்களுக்குப் பரிசுகள் கிடைக்கும். அது போதும். (நீண்ட மவுனம்)

சமகால எழுத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். அலெஹோ கார்ப்பெந்தியர், கார்ஸியா மார்க்கேஸ், ஹலியோ கொர்த்தஸார் போன்றவர்களின் படைப்புகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். லத்தீன் அமெரிக்க சினிமா: ஓர் அறிமுகம் என்ற நூலை அந்தச் சமயத்தில்தான் எழுதினேன். லத்தீன் அமெரிக்க நாடுகளில் கூபாவை மிகவும் பிடிக்கும். சே குவாராவைப் பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசாந்ஸாக்கிஸும் எனக்கு மிகவும் பிடித்தமானவர். ‘Zorba the Greek’இல் வரும் ஸோர்பாவைப் போன்ற தீவிரமான கதாபாத்திரங்கள் உலக இலக்கியத்திலேயே மிகவும் அரிது.

லத்தீன் அமெரிக்க சினிமாவைப் போலவே ஐரோப்பிய சினிமாவும் என்னைக் கவர்கிறது. மலையாளத்தில் என்றால் ஜான் ஆபிரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதையும், கோவிந்தனின் சர்ப்பமும்தான் எனக்கு பிடித்தமானவை. அடூரும் அரவிந்தனும் அல்ல.

விளிம்புநிலை மனிதர்கள் மீதுதான் நீங்கள் கவனம் கொள்வதாக முதலில் சொன்னீர்களல்லவா? ஸீரோ டிகிரி போன்ற சிக்கலான அமைப்பு கொண்ட படைப்புகளை அவர்கள் வரவேற்கிறார்களா? அவர்கள் அதை எவ்வாறு ஏற்கிறார்கள்?

இல்லை. அவர்களால் அதை வாசிக்க முடியாது. எதிர்காலத்தில் அவர்களுக்கான படைப்புகள் உருவாக்கப்படலாம். மேலும், விளிம்பு நிலை என்பதன் வழியாக, ஜாதிய, பாலினப் பிரிவுகளை மட்டுமல்ல நான் கூற நினைப்பது. 14ஆம் வயதில் விதவையான ஒரு பிராமணப் பெண்ணை எனக்குத் தெரியும். இப்போது அவருக்கு 95 வயதாகிறது. தலையை மொட்டையடித்து, தனிப்பட்ட ஆடை அணிவித்து, வாழ்வின் அனைத்து அர்த்தங்களிலிருந்தும் அவரை விலக்கி நிறுத்து கிறார்கள். பொது சடங்குகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும், பொது விஷயத்திலும் இருந்து சமூகம் இந்த மொட்டச்சிகளை மாற்றி நிறுத்துகிறது. நீண்ட விதவைப் பாரம் சுமந்து, தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு அறையின் மூலையில் அழுக்குடனும், மலத்துடனும் புரண்டு கிடக்கிறாள் அந்தக் கிழவி. இந்த வாழ்க்கை அவளுக்குக் கொடுத்த தென்ன? எரிச்சலடைய வைக்கும் துர்நாற்றம் அவளுடைய கனவுகளில் கூட பகையை நிறைக்கிறது. மனிதன் எதிர்கொள்ள நேரிடும் இந்தச் சாபம்தான், இந்த இயலாமைதான் எனக்கு முக்கியம். ஒரு கத்தி கிடைத்தால் அனைவரையும் வெட்டித் தள்ள முனையும் அந்தக் கிழவியின் மனோபாவம் இருக்கிறதே, அதுதான் முக்கியம். அவளுடன் ஒப்பிட்டால் கீழ்ஜாதிப் பெண்கள் எவ்வளவோ சுதந்திரமானவர்கள் என்று சொல்லலாம் – குறைந்தபட்சம் அவர்கள் விதவைக் கோலம் சுமக்க வேண்டாம்.

சென்ற சில நாட்களுக்கு முன்னர், நான் ஒரு செக்ஸ் ஒர்க்கரை (விபச்சாரி என்ற சொல்லைத் திருத்திக் கொண்டு செக்ஸ் ஒர்க்கர் என்று சொல்கிறார் சாரு) பார்த்தேன். ஆண்களைப் போலவே புகைப்பிடிக்கவும், குடிக்கவும் செய்யும் ஒரு பெண். உங்கள் மனைவியை விட சுதந்திரமானவள் நான் என்று சொன்னாள். படுக்கைக்கு வருபவனைத் தேர்ந்தெடுக்கவும், இவனுடன் இணை சேர வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்கவும் என்னால் முடியும். உங்கள் மனைவியால் அது முடியாது. கணவனின் விருப்பத்தை ஒட்டியே அவளுக்குச் செயல்பட நேரிடும். அதற்குமேல், உறவினர்களையும் முதியவர்களையும் காலில் விழுந்து வணங்கவேண்டும். அவள் எப்போதும் சுதந்திரமாக இருந்ததில்லை.

அப்போது எது சுதந்திரமென்றும், எதுவரை சுதந்திரமென்றும் கேட்க நேரிடுகிறது. நிபந்தனைகளற்ற கற்பனைகள் ஆதர்சவாதம் மட்டும்தானா?

எளிமையாகச் சொன்னால், மற்றொருவரை மதிப்பதுதான் சுதந்திரம். அவரின் இருப்பை அனுமதிப்பது; அங்கீகரிப்பது. அந்தச் சுதந்திரம் இங்கே இல்லை. உதாரணத்திற்கு, பறை அடிக்கும் தொழில் செய்யும் ஒரு தலித்தை எடுத்துக்கொள்வோம். சவ அடக்கத்திற்கும், கோவில் திருவிழாவுக்கும் அவன் அவசியம் வேண்டும். ஆனால், சமூகத்தில் அது ஒரு கலைச்செயல்பாடாக அங்கீகரிக்கப்பட வில்லை. இழிவான ஒரு ஜாதிய சின்னமாகத்தான் கவனத்தில் கொள்கிறார்கள். ஒரு சுதந்திரமான சமூகத்தில் அவன் ஒரு கலைஞனாக அங்கீகரிக்கப்படுவான். அதன் மூலம் கௌரவமான இடமும் தினசரி வாழ்விற்கான பணமும் அவனுக்குக் கிடைக்கும். இங்கே இந்த இரண்டும் கிடைப்பாதில்லை.

எல்லாவிதமான இசைக்கும் பிறப்பிடம் சமூகத்தின் அடித்தட்டு வர்க்கம்தான். அல்ஜீரியாக்காரனான ஒரு Drummer-ஐ நான் பாரிஸில் ஒரு தெருவில் சந்தித்தேன். வெளிப்படையாக கஞ்சா புகைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். அபாரமான சங்கீத ஞானம் கொண்டவன். அவன் அடிக்கிறான். Drum-ன் சங்கீதத்திற்கு இணையாக ஆட்கள் கூடுகிறார்கள். பார்வையாளர்கள் கைநிறையப் பணம் தருகிறார்கள். ஒருவரை ஒருவர் மதிக்கும் ஜனநாயக சமூகத்திலேயே இத்தகைய சுமுகமான சூழ்நிலை நடப்பில் இருக்கும்.

கட்டுப்பாட்டையும், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் ஒரு அரசுகூட இத்தகைய சுதந்திரமான கருத்தோட் டத்தை அங்கீகரிக்கும் என்று தோன்றவில்லை – அப்போது கூபாவைப் பற்றிய உங்களுடைய பார்வையை மறுபரிசீலனைக்கு உட்படுத்த நேரிடும்.

இருக்கலாம். ஆனால் கூட மக்கள் பூரண சுதந்திரமானவர்கள். அவ் விஷயத்தில் ஃப்ரான்ஸுடன் அவர்களை ஒப்பிடலாம். ஜெர்மனியை எடுத்துக்கொண்டால் அங்கேயுள்ள காற்றில்கூட பீதியும் அச்சமும் நிறைந்து நிற்கிறது. ஃபாஸிஸத்தினுடைய, பழைய கட்டுப்பாட்டினு டைய எச்சம் இன்னமும் அங்கே இருந்து கொண்டிருக்கிறது. கூபா அப்படியல்ல. (மவுனம்) கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை அரசுதான் நிர்வகிக்கிறது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான டாலர்கள் செலவு வரும் இருதய அறுவை சிகிச்சை உட்பட கூபாவில் அனைத்தும் இலவசம். அதை அரசாங்கத்தின் கடமை. அது வேறொரு கலாச்சாரம். காஸ்ட்ரோவை கடுமையாக விமர்சிக்கும் தோமஸ் ஏலியாவின் சினிமாவும் கூபாவிலிருந்துதான் வந்து கொண்டி ருக்கிறது. அம்மாதிரி விமர்சனத்துக்கெல்லாம் அங்கே யாதொரு தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட ஜனநாயகம் அது! மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் மதிக்கும் தன்மை.

நம் நாட்டில் அதுபோன்ற நிலை எப்போதும் இருந்ததில்லை. நினைவு படுத்திக்கொண்டு பால் வர நேரமானால் கியூவில் நிற்கும் மக்கள் திடீரென நடனமாடத் துவங்குவார்கள். கூபாவில் அவர்களது வாழ்க்கை முறையே வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையோடு கொண்டாட்டமும் (Carnival) கலந்திருக்கிறது. கிராமங்களில், தனிப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட இடங்களில் வயது வித்தியாசமின்றி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதைக் காணலாம். ‘குடி’ என்றால் அங்கே நடனம்தான்; வாழ்க்கை அவர் களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. சிரித்து விட்டு அங்கே எழுத்தாளன் பிரச்சினைக்குரியவன் என்றால் அவனைத் தூதுவராக்கி விடுவார்கள். அதுதான் அவர்களுக்குத் தெரிந்த நாடு கடத்தல்.

ஜெர்மனியில் நவஃபாஸிஸ்டுகள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், பிரெக்ட்டைப் போன்ற மேதைகளான மனிதாபிமானம் கொண்டவர் களைப் பொருட்படுத்தாமல் இருக்கலாமா?

கூடாது. அது கலைஞனின் தர்மம். அவன் எங்கேயும் எதிர்வரிசையில் தான் இருப்பான். வியட்நாமில் விழும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிராகத் தன்னுடைய உடம்பில் போதை ஊசியைக் குத்திக்கொண்டு, அதனால் கட்டாய ராணுவ சேவைக்கு பொருத்தமற்றவராக மாறிய அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பர்ரோஸும் அதில் அடங்குவார். பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டபோது அதன் பாவச் சுமையை என் தலையில் ஏற்றிக்கொள்ள விரும்பாமல்தான் நான் இந்துமதத்தை விட்டு புத்த மதத்தை ஏற்றுக்கொண்டேன்.

திராவிட இயக்கத்திற்கு தமிழ் இலக்கியத்தில் எத்தகைய பங்கை வகிக்க முடிந்தது?

குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை.

இறுதியாக ஒரு கேள்வி. ஸீரோ டிகிரி மிகவும் கவனம் கொள்ளப்படுவது அதன் Treatment-ஆல் அல்லவா? கோதாரின் சினிமாவை அது ஒத்திருப்பதாகச் சொன்னால் அது சரியாகுமா ?

நிச்சயமாக… கோதார் எனது குரு. நீட்ஷே எனது கடவுள்.

12.10.2001

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai