தேர்தல் களம் – 3

திமுக தலைவர்கள் பலரை ஏன் இந்துக்களுக்குப் பிடிக்கவில்லை என்று என் நண்பர் ஒருவரைக் கேட்டேன்.  ”இந்துக்களைத் திட்டுவதுதான் மதச் சார்பின்மை என்று நினைக்கிறார்கள் அவர்கள்; அதனால்தான் பிடிக்கவில்லை” என்றார் அவர்.  உண்மைதான்.  மதச் சார்பின்மை என்றால் எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும்.  ரம்ஸான் போது குல்லா அணிந்து நோன்புக் கஞ்சி குடித்து புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுக்கும் ஸ்டாலின், கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும் ஏன் ஏதோ நெருப்பைத் தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்?  விபூதி வைத்து விட்டாலே பகுத்தறிவு பறந்து விடுமா?  அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு?

எதிராளியை மதிப்பது ஒரு அற்புதமான மானுடப் பண்பு.  ஒரு சீக்கியரின் எதிரே யாரும் புகைக்க மாட்டார்கள்.  ஏனென்றால் புகைப்பது அந்த மதத்தில் பாவம்.  அதைப் போலவேதான் மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே மாட்டின் மாமிசத்தைப் புசிக்காதிருப்பதும் ஒரு நாகரிகம்தான்.  (அதற்காக மாடு மேய்த்துக் கொண்டிருப்பவர்களைப் பிடித்துக் கொலை செய்வதெல்லாம் உச்சபட்ச வன்முறை!)

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால்தான் உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட மனிதர்களும் வாழத் தகுதியான இடமாக இருக்கும்.  இதை இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல் தெரிகிறது.  முஸ்லீம் வீட்டுத் திருமணத்துக்குப் போனவர் இந்துக்களின் திருமணங்களைத் திட்டுகிறார்.  ஹோமப் புகையில் அங்கே எல்லோரும் அழுகிறார்களாம்.  கட்சித் தொண்டர்களும் சமூக விரோத குண்டர்களும் டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும் ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என நினைத்து விட்டாரா ஸ்டாலின்?  ஹோமப் புகை என்பது அரிய வகை மூலிகைகளைத் தீமூட்டி அதில் நெய் ஊற்றி வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது.  இதனால் சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது.  மதச் சார்பின்மை கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்டாலின் தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன்.  தர்காவில் அவர் சாம்பிராணி சட்டியைப் பார்த்திருக்கலாம்.  குங்கிலியம் என்ற மரப்பிசினும் படிகாரமும் சேர்ந்ததுதான் சாம்பிராணி.  அந்தப் புகை உடல் நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.  அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது.  ‘பகுத்தறிவினால்’ காணாமல் போன பல விஷயங்களில் சாம்பிராணியும் ஒன்று.

அடுத்து, இந்துத் திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம்.  இது ஸ்டாலின்.  எப்போது ஸ்டாலின் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார்?  அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது?  வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அதியற்புதமான தத்துவ உண்மைகளும் கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா?  தெரியாமலேயே ஸ்டாலின் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக வெறுப்பு அரசியலில் இறங்குகிறார்.  ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா?

தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமிக்காக  எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்!  உண்மையில் பார்த்தால் ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது கட்சிப் பாகுபாடு இல்லாமல் எல்லோருமே அதிமுகவை வெறுத்தனர்.  ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்குப் போய் வெற்றிலைப் பாக்கு வாங்கினாலே அது சிசிடிவியில் வந்து விடுகிறது.  அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய் எல்லாமே காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.  இப்படிப்பட்ட சூழலில் 75 நாட்கள் ஒரு பிரபலமான மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த தமிழ்நாட்டின் முதல்வரை இந்நாட்டின் ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ, மாநில கவர்னரோ யாருமே பார்க்க முடியவில்லை.  அவருக்கு என்ன வியாதி என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.  ஒரு காணொளிப் பதிவு இல்லை.  75 நாட்கள் கழித்து ஜெ.வின் உடல் மட்டுமே மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது.  காலை வெட்டி விட்டார்கள் என்றார்கள்.  Embalm பண்ணின உடம்பு என்றார்கள்.  எல்லாமே யூகங்கள்.  எல்லாமே மர்மம்.  இது அத்தனையும் மாயாஜாலக் கதைகளில் வரும் ராஜா ராணி கதைகளில் வருவது போல்தான் நடந்தது.  மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போனார்கள்.  ஜெ.வின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தையும் ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  (டொமினிகன் ரிபப்ளிக் தளபதியை நினைவு கூருங்கள்!)

திமுகவைப் போல் அல்ல அதிமுக.  திமுகவுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது.  தலைமையில் யார் இருந்தாலும் சரி, திமுககாரன் திமுககாரன் தான்.  குடும்பபே திமுகவில் இருக்கும்.  அப்பன் மகன் பேரன் என்று தலைமுறை தலைமுறையாக திமுகவில் இருப்பார்கள்.  ஆனால் அதிமுகவுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.  எம்ஜியார் ரசிகர்களாக இருந்தவர்களே அதிமுகவில் இணைந்தார்கள்.  அங்கே எம்ஜியார்தான் எல்லாம்.  அவருக்குப் பின் அதிமுகவே இருக்காது என்று நம்பினார்கள் திமுகவினர்.  நான் கூட அப்படித்தான் நினைத்தேன்.  ஆனால் அதற்குப் பிறகு ஜெ. வந்தார்.  ஒரே தலைவர்.  அவர் வைத்ததுதான் சட்டம்.  அவரே கட்சி.  அவரே எல்லாம்.  பின்னர், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்று நினைத்தார்கள் திமுகவினர்.  நானும் அப்படித்தான் நினைத்தேன்.  ஆனால் ஜெ. இருக்கும் போது யாருக்குமே தெரியாத எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக நிலைத்து விட்டார்.  மக்களும் அவரை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.  மூன்று காரணங்கள்.  மக்களின் மறதி.  ஸ்டாலினின் வாய்.  மூன்றாவது, எடப்பாடியும் ’எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவம் இல்லாமல் அதிகாரிகளை வைத்து காரியம் சாதிக்கிறார்.  மக்களுக்குத் தொந்தரவு இல்லை.

இருந்தாலும் என்னால் முந்தைய தேர்தல்களைப் போல் இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.  காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கிறார்கள்.  யாருக்கு ஓட்டுப் போட்டாலும் மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமலேயேதான் இருக்கின்றன.

நன்றி: தினமலர்

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai