ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி பற்றி எழுதியிருந்தேன். சுமார் 20 பேர் 10,000 ரூபாய் பணம் அனுப்பி முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதியும் தனித்தனியாகத் தயாரிக்கப்படுவதால் ஒவ்வொரு பிரதியையும் தனித்தனி நண்பர்களுக்கு டெடிகேட் செய்ய முடியும். அப்படி டெடிகேட் செய்யும் போது யாருக்கு டெடிகேட் செய்கிறேனோ அவர்களைப் பற்றி சில வார்த்தைகள் எழுதலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். இதுவரை மூன்று பேருக்கு எழுதியிருக்கிறேன். அதை உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்களைப் பற்றியும் எழுதுவேன். பதற்றம் கொள்ள வேண்டாம்.
சீனி
ஒரு தேசத்தின், ஒரு கலாச்சாரத்தின், ஒரு மொழியின் அடையாளமாக விளங்குவது எழுத்தாளர்கள்தான் என்று சொல்கிறார் மகாப்பெரியவர் என்று அழைக்கப்படுகின்ற சந்திரசேகரேந்திர சுவாமிகள். அவரே ஒரு துறவி. ஆனால் ஒரு தேசத்தின் அடையாளம் என்று துறவியைச் சொல்லவில்லை; அதிலும் இந்தியா துறவிகளின் தேசம். இருந்தும் எழுத்தாளர் என்கிறார். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ஒரு சமூகம் மிக அதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு எழுத்தாளனிடமிருந்துதான். இசைக் கலைஞர், நடிகர் போன்றோரெல்லாம் நம்மை மகிழ்விப்பவர்கள் (entertainers). ஆனால் எழுத்தாளனிடமிருந்துதான் நாம் நம் வாழ்வியலைக் கற்றுக் கொள்கிறோம். என்னோடு இருபது ஆண்டு பழகியவர்களெல்லா மோடியின் தீவிர ஆதரவாளர்களாய் இருப்பதைப் பார்க்கிறேன். இதை வெறும் கருத்து முரண்பாடு என்று எடுக்கலாகாது. ஸ்ரீராமானுஜரின் சீடர் நாத்திகராக இருப்பது சாத்தியமா என்ன? காந்தியின் மாணாக்கர் ஆயுதப் புரட்சியாளராக இருப்பது சாத்தியமா என்ன? அப்படியெல்லாம் இருந்தால் அதைக் கருத்து முரண்பாடு என்றா சொல்வீர்?
என்னிடமிருந்து எதைக் கற்றுக் கொள்ளலாம்? என்னுடைய அணுகுமுறை (perception). அதுதான் என் எழுத்தைப் புரிந்து கொள்வதற்கு ஆதாரமாக இருக்கும் கருவி. ஒரு ஜென் குருவிடம் ஏழு வருட காலம் தங்கியிருந்து கற்றுக் கொள்வதைப் போன்றது அது. அதற்கு உங்கள் சாளரம் திறந்து கிடக்க வேண்டும்; அதற்கு உங்கள் பாத்திரம் காலியாக இருக்க வேண்டும். என்னோடு முப்பது ஆண்டுக் காலம் பழகி என்னிடமிருந்து எதுவுமே பெற்றுக் கொள்ளாத நண்பர்கள் அநேகம் பேர் உண்டு. அப்படியில்லாமல் என் சிந்தனாமுறையின் அடிப்படையை என் எழுத்திலிருந்தும், வாழ்விலிருந்தும் கற்றுக் கொண்ட முதன்மை மாணாக்கர் அன்புக்குரிய சீனி. அவருக்கு இந்தப் பிரதியை என் அன்புப் பரிசாக அளிக்கிறேன்.
3.10.2019.
***
சாம்
சாமிநாதனோடு நீங்கள் பேசுவதே இல்லை; நேரிலும் அடிக்கடி பார்ப்பதில்லை. இருந்தாலும் சாமுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தீவிரமான பிடிப்பும் நேசமும் பற்றுதலும் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன என்று என்னை ஒருமுறை கேட்டாள் காயத்ரி. உண்மைதான். இந்தப் பத்து ஆண்டுப் பழக்கத்தில் ஓரிரு முறைதான் ஃபோனில் பேசியிருப்பேன். வாசகர் வட்ட சந்திப்புகளில் பல மணி நேரங்கள் பேசியதுண்டு. பல மணி நேரம் என்றால் ஒரு இரவு முழுக்க என்று பொருள். அப்படி இரண்டு மூன்று இரவுகள் போகும். இமயமலைக்குப் போன போது பனிரண்டு இரவுகள் கண் விழித்துப் பேசியிருக்கிறோம். என் எழுத்தை விட என் வாழ்க்கையிலிருந்து ஒருவன் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் அது சாம்தான். சாமுக்கு ஈகோவே கிடையாது. முழுக்க முழுக்க ஒரு ஹெடோனிஸ்ட். இதெல்லாம் என்னிடமிருந்து அவன் பெற்றுக் கொண்டது. பணம் மட்டுமே கொடுக்கக் கொடுக்க சிறுக்கும். ஞானம் கொடுக்கக் கொடுக்கப் பெருகும் இல்லையா? அவனுக்குக் கொடுத்ததன் மூலம் எனக்கு அதெல்லாம் இரட்டிப்பாகப் பெருகியது.
முழுக்க முழுக்க அன்பே உருவானவன் சாம். ஒரு உண்மையான கிறிஸ்தவன். அந்த வகையில் சாமைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோபி கிருஷ்ணனின் ஞாபகமே வரும். கோபி கிறிஸ்து நாதரைப் போல் வாழ்ந்தவர். எனக்கு ரத்த உறவுகள் கிடையாது. ஆனால் நான் பெறாத பிள்ளையாக என்னோடு எப்போதும் இருப்பவன் சாம். நான் ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் இருந்த போது இரவு பகலாக என் உடன் இருந்து சிசுருக்ஷை செய்தவர்களில் முக்கியமானவன் சாம். சாம் என் ரத்தம். அவனுக்கு இந்தப் பிரதியை அன்புடன் அளிக்கிறேன்.
3.5.2019.
***
ராஜேஷ் சந்தர்
இதை எழுதும் இந்தக் கணத்தில் ராஜேஷை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். தஸ்தயேவ்ஸ்கியின் நாவலிலிருந்து நிஜ உலகில் குதித்து வந்த மனிதரைப் போல் இருக்கிறார். இப்படி ஒரு மனிதரை என் வயதில் நான் பார்த்ததில்லை. முதல் சந்திப்பிலேயே இந்த அளவுக்கு என்னை ஈர்த்த ஒரு ஆண் வேறு யாரும் இல்லை.
ஈகோவே இல்லாத மனிதர்களை நான் மகான்களாகவே கருதுவேன். ராஜேஷ் அப்படிப்பட்டவர். ஒரு சம்பவம் சொல்லலாம். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்குப் பணம் தேவைப்படுகிறது என்று என் தளத்தில் எழுதியிருந்தேன். ராஜேஷ் ஒரு பெரும் தொகையை அனுப்பி வைத்தார். மறுநாளே ராஜேஷை என் வாசகர் வட்டத்திலிருந்து வாசகர் வட்ட அட்மின் நீக்கி விட்டார். யாரெல்லாம் வாசகர் வட்டத்தில் செயலற்று இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் நீக்கி விடலாம் என்பது அட்மின் நண்பரின் எண்ணம். ராஜேஷ் பெரும் அமைதி விரும்பி. இருக்கும் இடம் தெரியாதவர். அட்மின் நீக்கி விட்டார். ராஜேஷ் பணம் அனுப்பியது அட்மினுக்குத் தெரியாது. எனக்கோ வாசகர் வட்டம் பற்றியே எதுவும் தெரியாது. ராஜேஷையும் தெரியாது. இப்போதுதான் நாலைந்து மாதங்களாகத் தெரியும். அதிலும் நேற்றுதான் முதல்முறையாகப் பார்த்தேன். வேறு ஆட்களாக இருந்தால் கோபம் வந்திருக்கும். என்னிடமிருந்து விலகியிருப்பார். ஆனால் ராஜேஷ் வட்டத்திலிருந்து நீக்கப்பட்டது பற்றிக் கவலையே படவில்லை. நேற்று இதைச் சொல்லும் போது கூட “நான் பெசண்ட் நகரில் வசிக்கிறேன்” என்பதை ஒருவர் எந்த தொனியில் சொல்வாரோ அதே தொனியில்தான் சொன்னார்.
கடவுள் என் முன் தோன்றி உனக்கு ஒரு வரம் தருகிறேன், கேள் என்று சொன்னால், நான் கேட்கும் வரம் ராஜேஷுக்கு உரியதாகத்தான் இருக்கும். அவருக்கு ராஸ லீலாவின் இந்தப் பிரதியை அன்புடன் அளிக்கிறேன்.
மைலாப்பூர்
9.5.2019. சாரு நிவேதிதா
ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி பற்றி எழுதியிருக்கிறேன். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai