சென்னையில் உள்ள எனக்குப்
பிடிக்காத இடங்களில் ஒன்று, டாஸ்மாக் பார்.
ஆனால் டாஸ்மாக் பாரை விட அருவருப்பூட்டும் இன்னொரு இடம் அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ். காரணங்களை விவரிக்கிறேன்.
நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஃப்ரெஞ்ச் தெரிந்த என் தமிழ் நண்பரிடம் என் நாவல்களில் ஒன்றை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் சிரத்தை மேற்கொண்டு அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் போய்ப் பார்த்தார். அங்கே உள்ள மொழிபெயர்ப்புத் துறையில் இருந்த நாலைந்து பெண்களும் மிகச் சமீபத்தில் நியூ ஜெர்ஸியிலிருந்து இறக்குமதியான மைலாப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். நுனிநாக்கு ஆங்கிலம். தொட்டுக்கொள்ள கொஞ்சம் பிராமணத் தமிழ். மும்முரமாக சுஜாதாவின் துப்பறியும் நாவல் ஒன்றை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்து முடித்து விட்டு ஸ்ரீராமானுஜரின் பாஷ்யத்தை ஃப்ரெஞ்சில் கொண்டு செல்ல முட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த தமிழ்க் கவிஞர்கள் கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து.
டாஸ்மாக்கை விடவும் அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் அருவருப்பூட்டும் மற்றொரு காரணம், இங்கே தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக நானும் இன்னும் ஒன்றிரண்டு பேரும் ஃப்ரெஞ்சில் உள்ள அத்தனை தத்துவவாதிகளையும் எழுத்தாளர்களையும் கவிகளையும் தமிழில் மொழிபெயர்த்தும், வாசித்தும், விவாதித்தும், கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதி வந்து கொண்டிருக்கும் நிலையில் இது பற்றிய எந்த அறிவும் இல்லாமல் ஜுங்கா அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இப்படிப்பட்ட அறிவிலிகளின் கூட்டத்தை உலகத்தில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது. நினைத்துப் பாருங்கள், ஃப்ரெஞ்சில் உள்ள அத்தனை எழுத்தாளர்களையும் பற்றி இங்கே விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் 40 ஆண்டுகளாக. ஆனால் அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு ஃப்ரெஞ்ச் கூட்டமும் தமிழ்க் கூட்டமும் ஜுங்கா அடித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதைப் பற்றி என்ன சொல்ல?
அப்படிப்பட்ட அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸுக்கு நேற்று சென்றிருந்தேன், தியேட்டர் நிஷா குழுவின் இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கிய ஔரங்கசீப் நாடகம் பார்ப்பதற்காக. நாடகத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம். இப்போது அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் பற்றி மட்டும். அரங்கமே நிறைந்து விட்டது. அது ஒரு சாதனைதான். 150 பேர் இருக்கலாம். ஒரு இருக்கை கூட காலியாக இல்லை. இந்த 150 பேரில் நான் மட்டுமே அ-பிராமணன் என்பதையும் கவனித்தேன். அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்காதீர்கள். பார்த்தாலே தெரிந்து விடும். சில ஏரியாக்கள் இருக்கின்றன. உதாரணமாக, க்ரீம் செண்டர் என்ற ஒரு உணவகம். கல்லூரி சாலையில் உள்ள க்ரீம் செண்டரில் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்க்கலாம். ஆனால் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள க்ரீம் செண்டரில் பிராமணர்களை மட்டுமே பார்க்கலாம். இப்படியெல்லாம் எழுதுவதால் என்னை பிராமண எதிர்ப்பாளன் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். எனக்கு அந்தப் பதமே பிடிக்காது. மனிதர்களில் சாதி, மத, இன, தேச வித்தியாசங்கள் எதுவுமே இருக்கக் கூடாது என்று கருதும் ஒருசில பைத்தியக்காரர்களில் நானும் ஒருவன். நான் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு தலித்துக்கும் பிராமணனுக்கும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கும். உணவிலேயே அந்த வித்தியாசத்தைப் பார்த்து விடலாம். ஆனால் அப்படிப்பட்ட வித்தியாசங்கள் மனிதார்த்தத்தின் அடையாளத்தை மதிப்பீடு செய்வதாக இருக்கலாகாது. அவ்வளவுதான் நான் சொல்வது. நான் ஒஸ்தி, நீ மட்டம் என்று நினைக்கலாகாது. என்னுடைய அடையாளம் பிராமண சாதி என்று இருக்கலாகாது. நம்முடைய அடையாளத்தை ஒரு சாதியிடம் கொண்டு போய் பொதியக் கூடாது. நம் அடையாளம் சாதி அல்ல. நம் அடையாளம் மதம் அல்ல. இதை கணியன் பூங்குன்றன் சொல்லியிருக்கிறான். ஆதி சங்கரர் சொல்லியிருக்கிறார். அந்த அர்த்தத்தில் சொல்கிறேன். இந்தப் பின்னணியில் ஒரு உணவகத்திலோ ஒரு கலாச்சார மையத்திலோ அங்கே உள்ள அத்தனை பேரும் பிராமணர் என்றால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வளவுதான். ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை மட்டுமே இங்கே பதிவு செய்கிறேன். மற்றவர்கள் இந்த இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று புரிந்து கொள்கிறேன். இதற்கு பிராமணர்கள் எதுவும் செய்ய முடியாது. ஆனால் நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் இதை அவதானிக்கிறேன். இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த ஆச்சரியம் நேற்று எனக்கு ஏற்பட்டது. வந்திருந்த 150 பேரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் பிராமணர்.
இன்னொரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் – இந்த அவதானத்தில் ஆச்சரியம் மட்டுமல்லாமல் துக்கமும் துயரமும் கலந்திருக்கிறது – அந்த 149 பேரில் யாருக்குமே என்னைத் தெரியவில்லை. ஆனால் அத்தனை பேரும் தமிழர்கள்! அடப்பாவிகளா! இந்த அளவுக்கா தமிழின் சமகால இலக்கியத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறீர்கள்! இந்த அவல நிலைக்குக் காரணம் என்னவென்றால், வந்திருந்த அத்தனை பேரும் உயர் மத்திய வர்க்கம் அல்லது உயர் வர்க்கம். யாருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் தமிழ் எழுத்தாளனையும் தெரியாது. கதம் கதம். ஆனால் நான் ஒரு தமிழ்ப் படத்தில் வில்லனாகவோ காமெடியாகவோ நடித்திருந்தால் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பட்டினப்பாக்கம், நடுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகிய குப்பங்களில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஒருத்தர் இருக்கிறார். அவர் மீன் விற்பவர் அல்ல. மீனை நறுக்கித் தருபவர். ஒரு கிலோ நறுக்கினால் இருபது ரூபாய். அதிலும் சிலர் பத்து ரூபாய்தான் தருவேன் என்று கடுமையாக சண்டை போடுவார்கள். அவர் ஒருநாள் என்னிடம் சொன்னார், கூட்டத்தின் நடுவே, மீன் வெட்டிக்கொண்டே, சார் நீங்களும் ஜெயமோகனும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போக மாட்டீர்கள். ஆனா பிரபாகரன் விஷயத்துல மட்டும் எப்படி ஒரே மாதிரி எழுதுனீங்க. எழுதி ரொம்ப வருஷம் இருக்கும். உங்கள்ட்ட கேக்கணும் கேக்கணும்னு இருந்தேன்.
எப்படி?
இப்படி ஒரு ஆளை நேற்று அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் பார்க்க முடியவில்லை. என்னை யாருக்குமே தெரியாது. போன வாரம் கூட அந்த மீன் வெட்டுபவர் (அடுத்த முறை பார்த்தால் பெயரைக் கேட்க வேண்டும்) என்ன சார், ராஸ லீலா ஸ்பெஷல் எடிஷனுக்கு நிறைய பேர் பணம் அனுப்பினார்களா என்று கேட்டார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ராகவன் ஒருத்தர்தான் சாட்சி. அய்யங்காருக்கு மீன் மார்க்கெட்டில் என்ன வேலை என்கிறீர்களா? ம்ஹும். அடுத்தவர் விஷயத்தை அதிகம் எழுதக் கூடாது.
நேற்று அந்த பிராமணக் கூட்டத்தைப் பார்த்த போது பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. நானும் என் தோழியும் மியூசிக் அகாதமியில் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தோம். மார்கழி மாதம். தோழி சொன்னார். இந்தக் கூட்டத்தில் நாம் இரண்டு பேர் மட்டும்தான் நான் பிராமின்ஸ்னு நினைக்கிறேன். நான் சுற்றி வரப் பார்த்தேன். தோழி சொன்னது சரிதான். அப்போது அந்தப் பக்கமாக வந்த நடராஜன் (நல்லியின் நண்பர்) “என்ன இது, ஆரியக் கூடாரத்தில் ரெண்டு திராவிடப் பறவைகள்?” என்று கிண்டலடித்தார். உங்களை மாதிரிதான் சார் என்று சட்டென்று அவருக்குப் பதில் சொன்னார் தோழி. நேற்று அந்த விஷயம் ஞாபகம் வந்தது.
நாடக விமர்சனம் அடுத்த கட்டுரையில் தொடர்கிறது.
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai