இயக்கம்: தியேட்டர் நிஷா பாலகிருஷ்ணன்
பாலா என்று நண்பர்களால் அழைக்கப்படும் பாலகிருஷ்ணன் தில்லியின் புகழ்பெற்ற தேசிய நாடகப் பள்ளியிலும் பிறகு லண்டனின் Royal Court Theatre-இலும் நாடகம் பயின்றவர். பாலாவுக்கு நாடகம்தான் உயிர்மூச்சு. அதில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடாமல் வாழ்பவர். இதன் பொருள், பலரைப் போல் சினிமாவுக்குப் போவதற்கான பாலமாக நாடகத்தைப் பயன்படுத்தாதவர். கடந்த 18 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி நடித்திருப்பவர். பாலகிருஷ்ணன் பற்றி அறிந்திருக்கிறேனே தவிர அவர் நாடகங்களை இதுவரை நான் பார்த்ததில்லை. நேற்று பார்த்தேன். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஔரங்கசீப் ஓர் உலகத் தரமான நாடகம். கிரிஷ் கர்னாடின் துக்ளக் என்ற உலகப் புகழ் பெற்ற நாடகத்துக்கு இணையானது இ.பா.வின் ஔரங்கசீப். ஆனால் கிரிஷ் கர்னாடின் துக்ளக் பிரபலமான அளவுக்கு ஔரங்கசீப் பிரபலம் ஆகவில்லை. காரணம், நான் ஏற்கனவே பல நூறு முறை எழுதியதுதான். தாகூருக்கு இணையானவராக இருந்தாலும் பாரதியைத் தமிழ்நாட்டுக்கு வெளியே யாருக்கும் தெரியாது. ஆனால் தாகூர் நோபல் பரிசு பெற்றார் இல்லையா? அதே கதைதான் இன்றும் தொடர்கிறது. இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. தமிழர்களாகிய நாம்தான் காரணம்.
நான் தில்லியில் 1978-இலிருந்து 1990 வரை இருந்தேன். இந்தப் பனிரண்டு ஆண்டுக் காலமும் தில்லியின் கலாச்சார மையமாக விளங்கும் மண்டி ஹவுஸ் என்ற இடத்தில்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். வாரத்தில் ஆறு நாட்கள் இசை, சினிமா, நாடகம் என்றே கழியும். எப்படியும் வாரத்தில் ஒருநாள் மண்டி ஹவுஸில் உள்ள கமானி ஆடிட்டோரியத்திலோ, ஸ்ரீராம் செண்டரிலோ, சங்கீத் நாடக அகாதமி ஹாலிலோ ஒரு நாடகம் இருக்கும். அப்போது பார்த்த நாடகங்கள் எதையுமே என்னால் மறக்க இயலவில்லை. மு. ராமசாமியின் நிஜ நாடக இயக்கத்தின் துர்க்கிர அவலம், சே. ராமானுஜத்தின் கறுத்த தெய்வத்தைத் தேடி, அலிக் பதம்ஸீயின் பாகல்கானா மற்றும் ரத்தன் திய்யத்தின் எல்லா நாடகங்களும். நூற்றுக் கணக்கான நாடகங்களைப் பார்த்திருந்தாலும் எண்பதுகளில் பார்த்த இந்த ஒரு டஜன் நாடகங்களை என்னால் காட்சி காட்சியாக இப்போதும் சொல்ல முடியும் என்ற அளவுக்கு ஞாபகத்தில் பதிந்திருக்கின்றன. பாகல்கானா நாடகத்தைப் பார்த்து விட்டு பார்வையாளர்கள் அத்தனை பேருமே ஒரு மாதிரி மந்திரித்து விட்டவர்களைப் போல் ஆனார்கள். கிராமங்களில் பேய் பிடித்து ஆடுவார்களே பார்த்திருக்கிறீர்களா, அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்? அந்த மாதிரி ஆனார்கள் பாகல்கானா நாடகத்தைப் பார்த்தவர்கள். யார் நடிகர், யார் பார்வையாளர் என்றே தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு பெரிய ரகளையே ஆனது அரங்கம். காரணம், இது அந்தோனின் ஆர்த்தோவின் (Anthonin Artaud) நாடகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். The Persecution and Assassination of Jean-Paul Marat as Performed by the Inmates of the Asylum of Charenton Under the Direction of the Marquis de Sade என்ற நீண்ட தலைப்பைக் கொண்ட ஜெர்மன் நாடகத்தின் இந்தி வடிவமே அலிக் பதம்ஸீ இயக்கிய பாகல்கானா (பைத்தியக்கார விடுதி). Peter Weiss 1963-இல் ஜெர்மன் மொழியில் எழுதிய இந்த நாடகத்தை சுருக்கமாக Marat/Sade என்றும் சொல்வார்கள். அதேபோல் ரத்தன் திய்யத்தின் இம்ஃபால் இம்ஃபால் என்ற நாடகம். இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் பற்றித் தனித்தனியாக எழுதியிருக்கிறேன் என்பதால் இங்கே அது வேண்டாம்.
இந்திரா பார்த்தசாரதியை தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளர்களைத் தவிர யாருக்கும் தெரியாது. அசோகமித்திரன் அளவுக்கு இ.பா. பிரபலமானவர் அல்ல. இதற்கெல்லாம் தர்க்கத்தின் துணை கொண்டு காரணங்கள் தேடிக் கொண்டிருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. அசோகமித்திரன் விளிம்புநிலையில் வாழ்ந்தவர். இ.பா. மேல்தட்டு. இது கூட ஒரு காரணமாக இருக்கலாம். டால்ஸ்டாயை விட தஸ்தயேவ்ஸ்கிதானே எல்லோரும் அறிந்தவராக இருக்கிறார்? இ.பா.வின் மழை என்ற நாடகம் கசடதபற என்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. அறுபதுகளோ எழுபதுகளின் முற்பகுதியோ. ஔரங்கசீப் எழுபதுகளில் எழுதப்பட்டிருக்கலாம். தமிழ் எழுத்தாளனின் பரிதாபகரமான நிலை என்னவென்றால், காலையிலிருந்து இரண்டு மணி நேரமாக ஔரங்கசீப் எந்த ஆண்டு எழுதப்பட்டது என்று இணையத்தில் தேடுகிறேன். எந்த இடத்திலும் கிடைக்கவில்லை. இ.பா.வையும் கிரிஷ் கர்னாடையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் கூட கிரிஷ் கர்னாடின் நாடகங்களைக் குறிப்பிடும் போது அது எழுதப்பட்ட ஆண்டை அடைப்புக்குறியில் குறிக்கிறார்கள். உதாரணமாக, துக்ளக் 1964-இல் எழுதப்பட்டது. ஆனால் இ.பா.வின் மழை, போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப் போன்ற நாடகங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது எப்போது எழுதப்பட்டது என்ற விபரம் காணோம். அநேகமாக ஔரங்கசீப்பும் அறுபதுகளில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். எழுபதுகள் எண்பதுகளில் இந்திரா பார்த்தசாரதி தில்லியில் பிரபலமான ஒரு நாடக ஆசிரியராக அறியப்பட்டிருந்தார். அப்போது அங்கே ENACT என்று ஒரு நாடகப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. ராஜேந்திர பால் ஆசிரியர். (அதன் பிரதிகள் இப்போதும் என் வசம் உள்ளன.) இந்தப் பத்திரிகையில் இப்போது உலக அளவில் அறியப்பட்டிருக்கும் மோகன் ராகேஷ், கிரிஷ் கர்னாட், விஜய் டெண்டுல்கர், மகேஷ் எல்குஞ்ச்வர் போன்றவர்களின் நாடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதிலேதான் இ.பா.வின் நாடகங்களும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்தன. பிறகு இ.பா.வின் நாடகங்கள் ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு தில்லியில் அரங்கேறின. எனவே இந்திரா பார்த்தசாரதி என்ற தமிழ் நாடகாசிரியர் தமிழ்நாட்டில் அறியப்படாமலேயே இந்தி நாடக உலகில் எண்பதுகளிலேயே பிரபலமாக இருந்தார். இதுபற்றி இ.பா.வே பலமுறை எழுத்திலும் நேரிலும் வருத்தப்பட்டிருக்கிறார். (இந்தியில் ஒரு நாடகாசிரியனாகப் பிரபலமாக இருக்கும் என் தமிழ் நாடகங்கள் தமிழில் அரங்கேறவில்லையே என்ற குறை எனக்கு உண்டு! –இ.பா.) காரணம், அவரது நந்தன் கதையும் ஔரங்கசீப்பும் தமிழில் அரங்கேறுவதற்குப் பல ஆண்டுகள் முன்பே இந்தியில் அரங்கேறி விட்டன.
இந்தச் சூழலில்தான் நேற்று இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப் நாடகத்துக்குப் போயிருந்தேன். ஆனால் ஒரு உலகத்தரமான நாடகம் அதன் நடிகர்களின் இயலாமையின் காரணமாக எவ்வித நாடக அனுபவத்தையும் தரவில்லை. இதற்கிடையில் இந்த நாடகம் தியேட்டர் நிஷா பாலகிருஷ்ணன் இயக்கத்திலேயே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை அரங்கேற்றம் ஆகியிருக்கிறது. முதலில் நான் நேற்றைய நாடக நிகழ்வு பற்றி எதுவும் எழுதாமல் இருந்து விடலாமா என்றே நினைத்தேன். ஏனென்றால் தியேட்டர் நிஷா பாலகிருஷ்ணன் நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை இயக்கியவர். நாடகமே அவர் சுவாசம். நாடகத்துக்காகவே வாழ்பவர். நாடகத்திலேயே வாழ்பவர். மேலும் அவர் இயக்கிய நாடகங்கள் எதையும் நான் பார்த்ததில்லை. அப்படியிருக்கும் போது ஒரு எதிர்மறையான விமர்சனத்தை எப்படி எழுதுவது என்றே தயங்கினேன். ஆனாலும் அப்படி எழுதாமல் விட்டு விடுவது பாலகிருஷ்ணனுக்கு நான் செய்யும் அநீதி என்று தோன்றுவதால் நான் பார்த்ததை இங்கே பதிவு செய்கிறேன். இப்படி எழுதுவதால் இது பாலகிருஷ்ணனின் நாடக ஈடுபாட்டையோ அர்ப்பணிப்பையோ சிறிதளவும் குறைவு படுத்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆங்கிலத்தில் இயங்குபவர்கள் தமிழுக்கு வந்தால் என்ன நேர்கிறது என்பதை மட்டுமே ஒரு பார்வையாளனாகப் பதிவு செய்கிறேன்.
தமிழில் பிராமணர்கள் மட்டுமே நாடகம் பார்க்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் கிரேஸி மோகன், எஸ்.வி. சேகர் வகையறா நாடகத்தைப் பார்க்கிறார்கள். மற்றொரு சாரார் – இவர்கள் மேல்தட்டு புத்திஜீவிகள் – அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் நாடகம் பார்க்கிறார்கள். முதல் வகையறாவை விட்டு விடுவோம். அவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இந்த இரண்டாவது கோஷ்டிதான் நம் கவனத்துக்குரியது. இந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்தான் நாடகத்திலும் நடித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஔரங்கசீபாக நடித்த ஸ்வாமியையும் கடைசியில் நடனமாடியபடியே பேசும் வாஸந்தியையும் தவிர வேறு யாருக்கும் தமிழே சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. அமெரிக்கர்களும் ஃப்ரெஞ்சுக்காரர்களும் தமிழ் கற்றுக் கொண்டு எப்படிப் பேசுவார்களோ அப்படிப் பேசுகிறார்கள் நடிகர்கள். இன்னொரு கொடுமை என்னவென்றால், அவர்களுடைய பிராமின் டிக்ஷன். முழுக்க முழுக்க அக்ரஹாரத் தமிழ். அவாள் இவாள் என்று அப்படி இல்லை. அவர்களின் தமிழ் உச்சரிப்பு அப்படி இருக்கிறது. உதாரணமாக, வேண்டும் என்பதை எப்படி உச்சரிப்பீர்கள்? நமக்கெல்லாம் வேண்டும் என்று சொல்லும் போது நாக்கு மேல் அண்ணத்தின் முன்பகுதியைத் தொடும். ஆனால் பிராமணர்கள் வேண்டும் என்று சொல்லும் போது நாக்கு உள்புறமாக மடிந்து “ள்” என்ற எழுத்தைச் சொல்லும் போது எப்படிச் சொல்வீர்களோ அப்படிச் சொல்லும். வேண்டுமானால் வேளுக்குடி கிருஷ்ணனின் உபந்யாசத்தை ஒரு ரெண்டு நிமிடம் கேட்டுப் பாருங்கள், புரியும். வேண்டும் என்பதை வேளுக்குடி கிருஷ்ணன் சொல்வது போல்தான் சொல்ல வேண்டும். அதுதான் சரி. ஆனால் நாடகம் ஔரங்கசீப் ஆயிற்றே? பின்னணியில் பாங்கு ஒலித்துக் கொண்டே இருக்கிறது. (நல்லவேளை, ஒரு நிஜ அதானையே – அதான் = தொழுகைக்கான அழைப்பு – பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்கும் ஒரு மைலாப்பூர்க்காரரை muezzin-ஆக வைத்து விடவில்லை. அதானை பிராமண மொழியில் கேட்டால் நன்றாக இருக்காது!) ஆனால் உள்ளே நாடகத்தில் பிராமண உச்சரிப்பு என்றால் பொருந்தவில்லையே?
பிராமண உச்சரிப்பை விடுங்கள். அதைவிடக் கொடுமை என்னவென்றால், நாடகத்தில் நடித்த ஸ்வாமியைத் தவிர வேறு யாருக்கும் தமிழையே உச்சரிக்கத் தெரியவில்லை. காதல் என்பதை காதள் என்றால் எப்படி இருக்கும்? நாடகம் பூராவும் இப்படியே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறார்கள். தமில், நீங்கல், உங்கல், இரைவன், அள்ளா (அல்லாஹ்), கடவுல், கண்கல், மக்கல், சிரைச்சாளை… அடி பின்னியெடுக்கிறார்கள்.
டியர் பாலா, இதற்கெல்லாம் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாடே இப்படித்தான் தமிழ் பேசுகிறது. தமிழ் எழுத்தாளர்களே இப்படித்தான் பேசுகிறார்கள். நான் ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்கிறேன். அடுத்து இந்த நாடகத்தை அரங்கேற்றும் போது நடிகர்களுக்கு வார்த்தை உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் எடுத்துத் தருகிறேன். எப்போது வேண்டுமானாலும் சொல்லுங்கள், வருகிறேன்.
மேலும், ஒரு கொடுமை. கனவை நனவாக்குதல், கனவு நனவாகுதல் என்பதெல்லாம் சின்னப் பசங்களுக்குக் கூட தெரிந்த விஷயம். ஆனால் நாடகத்தில் நடிகர் கனவை நினைவாக்குகிறேன் உங்கள் கனவை நினைவாக்குகிறேன் என்றே பத்துப் பதினைந்து முறை ஷாஜஹானிடம் சொல்லும் போது அதைக் கேட்டே ஷாஜஹானுக்குப் பைத்தியம் பிடித்திருக்குமோ என்று அஞ்சினேன். இத்தனைக்கும் இந்த நாடகம் ஐந்தாறு ஆண்டுகளாக உங்கள் இயக்கத்தில் அரங்கேறி வருகிறது. ஒரே ஒரு பார்வையாளர் கூடவா உங்களிடம் இந்தத் தவறைச் சுட்டிக் காட்டவில்லை? சொல்லியிருக்க மாட்டார்கள். காரணம், இதில் நடிப்பவர்கள், இதைப் பார்ப்பவர்கள் அத்தனை பேருமே மேட்டுக்குடி பிராமணர்கள். அவர்களுக்கும் தமிழுக்கும் தொடர்பு விட்டுப் போய் ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. கனவை நினைவாக்குதல் என்பது கனவைக் குழி தோண்டிப் புதைப்பது என்று பொருள். நனவாக்குதல் என்றால்தான் அதை நிறைவேற்றுதல் என்று ஆகும்.
மேலும், சில இடங்களில் சில நடிகர்கள் வசனத்தைச் சொல்லும் போது தடுமாறினார்கள். தப்பாகச் சொல்லி திருத்திக் கொண்டார்கள். அலிக் பதம்ஸீயின் பாகல்கானாவை நினைத்துப் பார்க்கிறேன். நாடக மேடை என்பது ஒரு நடிகனின் வேள்விக் கூடம். அங்கே உச்சரிக்கப்படும் சொல் மந்திரம். நடிகனிடம் நடப்பது ஒரு catharsis. அவன் உள்ளே அந்தக் கதாபாத்திரம் புகுந்து கொண்டு ஆட வேண்டும். புகுந்து கொண்டு பேச வேண்டும். நான் ஆவேசக் கூச்சலைச் சொல்லவில்லை. ஔரங்கசீப்பின் நடிப்பும் பேச்சும் நன்றாக இருந்தது. அந்தப் பாந்தம் ஏன் வேறு யாரிடமும் வரவில்லை?
ஒன்று செய்யலாம். நாடகம் தமிழில் இல்லை. நடிப்பதற்கும் ஆட்கள் இல்லை. அதனால் இந்த நாடகத்தை ஆங்கிலத்திலேயே அரங்கேற்றலாம்.
***
இ.பா.வின் ஔரங்கசீப் ஓர் உலகத் தரமான நாடகம் என்று குறிப்பிட்டேன். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த நாடகம் உயிர்ப்போடு இருக்கும். ஏனென்றால், ஔரங்கசீப் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற கோட்பாட்டுக்காகவே அரசைப் பிடித்தான். அந்தக் கொள்கைக்காகவே தான் நேசித்த ஷாஜஹானைச் சிறை வைத்தான். அதற்காகவே தன் அண்ணன் தாராவைக் கொன்றான். அப்படிப்பட்ட ஃபாஸிஸக் கோட்பாடு மனித இனம் உள்ளளவும் உயிரோடு இருக்கும். ஔரங்கசீப் என்றும் ஹிட்லர் என்றும் மோடி என்றும் பல பெயர் மாற்றங்களோடு வந்து கொண்டே இருக்கும். அதுவரை ஔரங்கசீப் நாடகத்துக்குத் தேவை இருக்கும்.
இந்த நாடகம் பலவிதமான உள்ளடுக்குகளைக் கொண்டது. இ.பா.வின் மொழி வெளியில் பார்க்க மிக எளிமையாக இருக்கும்; ஆனால் உள்ளுக்குள்ளே பல உளவியல் சிடுக்குகளைப் பொதிந்து கொண்டிருக்கும். அவருடைய நாவல்களிலும் அப்படித்தான். மேலும், அவருடைய பாத்திரங்களின் பேச்சு மின்னல் பொறி போன்றது. கூர்வாளின் முனை போன்றது. அது இந்த நாடகத்திலும் துள்ளி விளையாடுகிறது. ஷாஜஹானின் பித்தநிலை ஆகட்டும்; தாராவின் கவி மனமாகட்டும்… எல்லா பாத்திரங்களின் உள் ஆழங்களிலும் வெளிச்சம் பாய்ச்சுகிறார் இ.பா. அதன் உச்சமாக ஔரங்கசீப்பின் வாழ்க்கை, அவனுடைய சிந்தனைப் போக்கு… கடைசியில் ஔரங்கசீப் “இமையத்தின் உச்சியிலிருந்து பார்க்கிறேன்; கீழே பள்ளத்தாக்குகளாகத் தெரிகின்றன” என்று சொன்னதும் நடன மங்கை “இசையையும் கவிதையையும் நாட்டை விட்டு விரட்டினீர்கள்; இப்போது நீங்களே கவியாகி விட்டீர்களே?” என்று சொல்லி நகைக்கிறாள். இப்படி ஔரங்கசீப்பின் உள்முரண்களைப் பிரமாதமாக நாடகமாக்கியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.
மொழியைப் புரிந்து கொண்டு, பாத்திரங்களையும் புரிந்து கொண்டு, ஆத்மார்த்தமாக நடித்தால் இந்த நாடக அனுபவம் மறக்க முடியாததாக இருக்கும்.