இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் இருந்த சுதந்திரம் அத்தனையும் போய் விட்டது. ஜேஎன்யூ போன்ற சர்வகலாசாலைகளில் இந்துத்துவாவின் ஊடுருவல் அதிகமாகி விட்டது. இது பற்றி நடுநிலையான புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் அறிஞர்களும் என்ன சொல்கிறார்கள் என்றே தெரிந்து கொள்ளாமல் மோடி ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருப்பது எனக்குக் கவலை அளிக்கிறது. மோடியை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள் எதற்காக இத்தனை கவலைப்படுகிறோம் என்று செவி கொடுத்துக் கேட்பதற்குக் கூட நியாயவாதிகள் தயாராக இல்லை. வாஷிங்டன் போஸ்டின் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஆமோதிக்கிறேன். சரி செய்யவே முடியாத அழிவுப் பாதையை இந்திய மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இனி இவர்களின் எதிர்காலம் ரத்தத்தால் எழுதப்பட இருக்கிறது. மகாத்மா கனவு கண்ட இந்தியாவுக்கு நேர் எதிரான நிலை இது. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எதிர்காலம் இருண்டு கிடக்கிறது.
மேற்கண்டவாறு எழுதி அதோடு வாஷிங்டன் போஸ்ட் லிங்கையும் என் முகநூல் பக்கத்தில் கொடுத்திருந்தேன். அதற்கு ஒரு சௌக்கிதார் ”செத்துருங்க சாரு, 2029 வரை பா.ஜ.க. தான்” என்று எழுதி என்னை வாழ்த்தியிருக்கிறார். நான் செத்து விட்டால் அவர் நம்பும் இந்து மதம் வாழ்ந்து விடும் என்று நினைக்கிறார். 66 வயது ஆன ஒருவரை செத்துப் போ என்று சொல்வதுதான் அவருக்கு அவர் சார்ந்த இந்து மதம் கற்பித்திருக்கிறது. இதுதான் மோடி இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் கொடை. இந்திரா ஊழலைக் கொடுத்தார். மோடி ரத்தத்தைத் தருகிறார். பிணங்களைத் தின்னக் கொடுக்கிறார்.
செத்துப் போ. இந்து மதம் இப்படியா சொல்கிறது? மாற்றுக் கருத்தை முன்வைத்தால் சாக வேண்டும். சாகவில்லை என்றால் சூலாயுதத்தால் தாக்கிக் கொல்வார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளில் பாஜகவினால் நான் கொல்லப்படுவேன் என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு 66 வயது ஆகி விட்டது. இந்தியனின் வயது இப்போது 60 என்று ஆகி விட்ட நிலையில் நான் வாழும் ஒவ்வொரு நாளுமே எனக்கு போனஸ்தான். ஒரு சௌக்கிதார் கையால் எனக்கு மரணம் என்றால் அப்படியே நடந்து விட்டுப் போகட்டும். சமீபத்தில்தான் எழுதியிருந்தேன், தும்மல் வந்து செத்துப் போன பல பேரை எனக்குத் தெரியும். என் மரணத் தேதி எப்போதோ எழுதப்பட்டு விட்டது. அது ஒரு சௌக்கிதார் கரத்தினால் நடக்கும் என்றால், அது பற்றி எனக்குக் கவலையே இல்லை. எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்வதுதான் ஃபாஸிஸத்தின் நடைமுறை. அது கம்யூனிஸ்ட் ஃபாஸிஸமாக இருந்தாலும் சரி, தாலிபானாக இருந்தாலும் சரி, இந்துத்துவாவாக இருந்தாலும் சரி. ஏற்கனவே மோடி ஆட்சியில் சில பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள். இப்போது எழுத்தாளர்களின் பக்கம் திரும்பி இருக்கிறீர்கள். திரும்புங்கள். சீக்கிரம் முடியுங்கள் என் கதையை. கொலைகாரனின் வேலை என்ன? கொலை செய்வது. அதைத்தானே சொல்கிறீர்கள்? செயலில் இறங்குங்கள். 2019 என்ன, 2029 வரை கூட ஆட்சி செய்யுங்கள். எனக்கென்ன கவலை? இந்த ஃபாஸிஸ தேசத்தில் எனக்கு இருக்கவே இஷ்டமில்லை. ஆனால் அவந்திகாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். உன்னை விட்டு ஓடி விட மாட்டேன் என்று. அந்த வாக்குக்காக மட்டுமே நான் இந்தியாவில் இருக்கிறேன். இன்னொரு காரணம், நான் வளர்க்கும் பூனைகள். அவைகளை விட்டு விட்டு எக்காரணம் கொண்டும் வேறு தேசத்துக்கு ஓடி விட முடியாது. அனாதை ஆசிரமத்தை நடத்துவதைப் போன்றது அது. வேட்டையாடித் தின்பதை அறியாத பூனைகள் அவை. நான் தான் அவைகளுக்கு உணவு கொடுத்தாக வேண்டும். இந்த இரண்டு கடப்பாடுகளும் இருந்திராவிட்டால் நிச்சயம் ஃப்ரான்ஸ் மாதிரி ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் தெருவோரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்தாவது வாழ்ந்து கொள்வேன். இப்படிப்பட்ட ஒரு ஃபாஸிஸ தேசத்தில் வாழ்வதை விட அது எத்தனையோ மேல்!
பின்குறிப்பு:ஒருவரை செத்துப் போ என்று சொல்வது நமக்கு நாமே மரணக் குழியை வெட்டிக் கொள்வதைப் போன்றது. என்னை செத்துப் போ என்று சொன்ன அந்த அன்பரை அவர் நம்பும் கடவுள் அந்த மரணக் குழியிலிருந்து காப்பாற்றட்டும்…
வாஷிங்டன் போஸ்ட் இணைப்பு