Flap

அதற்கு flap என்றுதான் பெயரா அல்லது வேறு பெயரா என்று எனக்குத் தெரியாது.  தெரிந்தவர்கள் என்னைத் திருத்தலாம்.  ஆனால் ஏதோ கொலைக் குற்றம் செய்து விட்டது போல் இது கூடத் தெரியாத நீயெல்லாம் ஒரு எழுத்தாளனா என்று அஞ்சல் போடாதீர்கள்.  ஃப்ளாப் என்ற வார்த்தையையே இன்றுதான் முதல்முதலாகக் கேள்விப்படுகிறேன்.  அதுவும் அருணாசலம் சொன்னதால்.

சற்று நேரத்துக்கு முன்புதான் அவர் ஒரு மெஸேஜ் அனுப்பினார்.  ”சென்னை வந்திருக்கிறேன்; இப்போது உங்களை ஃபோனில் அழைக்கலாமா? மதிய உணவுக்குச் சந்திக்கலாமா?”  இப்போது அவந்திகா கடும் மன உளைச்சலில் இருப்பதால் நான் யாரிடம் ஃபோனில் பேசினாலும் அவளது மன உளைச்சலை அது அதிகப்படுத்தும் என்று தோன்றியதால் “இப்போது அழைக்க முடியாது; ஆனால் மதிய உணவுக்குச் சந்திக்கலாம்” என்று பதில் மெஸேஜ் அனுப்பினேன்.  பொதுவாக அவரை மதிய உணவுக்குச் சந்தித்தால் மவுண்ட் ரோட்டில் உள்ள புகாரி உணவகத்தில்தான் சந்திப்பது.  பரோட்டாவும் மட்டன் கறியும் நான். அந்த ரெண்டும் புகாரியில் பிரமாதமாக இருக்கும். இன்னொன்று, புகாரியின் டீயை அடித்துக் கொள்ளவே முடியாது. அப்படி ஒரு டீயை நாகூரில்தான் குடித்திருக்கிறேன். மலேஷியாவிலும் கிடைக்கும். அப்புறம் புகாரிதான்.

அருணாசலம் சைவ உணவு.  பார்ப்பதற்கு வில்லன் நடிகர் போல் இருந்தாலும் அருணாசலம் குடிக்க மாட்டார்; புகைக்க மாட்டார்; அசைவம் உண்ண மாட்டார்; காஃபி டீ கூட குடிப்பாரோ இல்லையோ தெரியவில்லை.  என் மகாத்மா நண்பர்களில் அவர்தான் முதன்மையானவர் என்று சொல்லலாம்.  ஆனால் இன்று புகாரி வரை போக முடியாது.  வீட்டுக்கு எதிரே உள்ள பாம்ஷோரிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதுதான். பாம்ஷோரில் அத்தனை நன்றாக இருக்காது. இருந்தாலும் பரோலில் ரொம்ப நேரம் வெளியே வர இயலாது. நான் இங்கே செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறேன்; நீ ஜாலி பண்ணிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்பாள் அவந்திகா.  ஒருநாளில் ஐம்பது முறையாவது “எனக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது; வாழ்க்கையே வீண்; என் உயிரே என்னை விட்டுப் போய் விட்டது; இனி வாழ்வது எதற்கு?  என்னை வாழ வைத்துக் கொண்டிருந்த ஆத்மாவே போய் விட்டது; என் சந்தோஷத்துக்குக் காரணமாக இருந்த உயிரே போய் விட்டது; இத்தனை நாள் இந்தக் கொடுமையான – வேதனையான – மகா துயரமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரே பிடிமானமாக இருந்த பப்புவே போய் விட்டது; பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது” என்று புலம்பிக் கொண்டிருக்கிறாள்.  பனிரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் வளர்த்த முதலாம் பப்பு காலமான போது இதே  புலம்பலைக் கேட்டு சகிக்க முடியாமல்தான் இரண்டாம் பப்புவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.  கார்த்திக்கும் அவன் பங்குக்கு ஸோரோவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான்.  இரண்டுக்குமாக மாதம் 25000 ரூபாய் கடந்த பத்து ஆண்டுகளாகச் செலவாயிற்று.   ஸோரோ காலமான பிறகு செலவு 12000 ரூபாயாகக் குறைந்தது.  இத்தனை பணத்தில் நான் உலகம் பூராவும் சுற்றி வந்திருப்பேன்.  ஆனால் ஒன்று, பப்புவும் ஸோரோவும் எங்களுக்குக் கொடுத்த பேரன்புக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. 

ஒருநாள் காயத்ரி என் வீட்டுக்கு வந்திருந்தாள்.  அதுதான் அவள் எங்கள் வீட்டுக்கு வருவது முதல் நாள்.  சோஃபாவின் மீது போட்டு மூடியிருந்த படுக்கை விரிப்பை எடுத்து விட்டு அங்கே உட்காரச் சொன்ன அவந்திகா படுக்கை விரிப்பைக் கொண்டு போய் வேறொரு அறையில் போட்டு விட்டு வந்து காயத்ரியிடம் பப்புவைக் காண்பித்து “இவன் இருக்கானே, டெய்லி ஸோஃபாவைக் கிழிப்பதே வேலை; அதனால் படுக்கை விரிப்பைப் போட்டு மூடியிருக்கிறேன்” என்றாள்.  அவந்திகா காயத்ரியிடம் சொன்னதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பப்பு குண்டுகுண்டு என ஓடிப் போய் படுக்கை விரிப்பைத் தன் வாயினால் கவ்விக் கொண்டு வந்து காயத்ரியிடம் கொடுத்தது.  இதுபோல் பப்புவும் ஸோரோவும் கொடுத்த விஷயங்கள் ஓராயிரம் இருக்கும்.  அத்தனையும் சொன்னால் உங்களுக்கு அலுப்பாக இருக்கும்.  வேண்டாம்.   ஆனால் ஒரு எழுத்தாளனான நான் நாய் வளர்த்தா என் நாட்களைக் கடத்துவது?  எத்தனை பெரிய மானுடத் துரோகம் அது?  புரிகிறதா?  ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் சமூக சேவை செய்கிறேன் பேர்வழி என்று தினமும் ஐந்து மணி நேரம் மெரினா கடற்கரையில் குப்பை பொறுக்கினால் என்ன ஆகும்?  அதே கதைதான் நான் செய்ததும்.  25 ஆண்டுகள்.  பல சமயங்களில் பத்திரிகைக்காக எழுதிக் கொண்டிருப்பேன்.  நேரக் கெடுவோடு கூடிய கட்டுரைகள்.  ஸோரோவுக்கும் பப்புவுக்கும் மீன் தீர்ந்திருக்கும்.  ஸோரோ மீன் இல்லாவிட்டால் பட்டினி கிடக்கும்.  சைவ உணவுப் பழக்கம் கொண்ட, சாதியில் பிராமணரான பிரபு காளிதாஸ் எனக்காக மீன் கடைக்குப் போய் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.  இப்படி நாய்களுக்காக என் நண்பர்களும் பாடுபட்டிருக்கிறார்கள்.  அதனால் இந்த முறை என்ன ஆனாலும் சரி – ஆம், என்ன ஆனாலும் சரி – அவந்திகாவின் மன உளைச்சல் தீர புதிய நாய் வாங்குவதில்லை என்று உறுதியாக இருக்கிறேன்.  மீன் மட்டுமல்ல; எல்லா வேலைகளும் என் தலையில் விழுந்து விடும்.  இப்போது காலையில் கூட வாக்கிங் போகாமல் கெய்ரோவுக்காக நொச்சிக்குப்பம் போய் சாளை மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.  அதுவரை பசியினால் கத்தி, தூங்கிக் கொண்டிருந்த அவந்திகாவை எழுப்பி விட்டு விட்டது.  வாரம் இரண்டு முறை கெய்ரோவுக்காக நொச்சிக்குப்பம் போய் மீன் வாங்கி வருகிறேன்.  ”இன்றுதான் கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்தேன்; குழந்தை பசியில் கதறும்போது எங்கே தூங்குவது?” என்பதையே அவந்திகா ஒரு பத்து முறை சொல்லி விட்டாள்.  ”அப்டியே தலையெல்லாம் கிர்ருங்குது; பாதித் தூக்கத்துல எழுந்துட்டதால மயக்கமா வருது” என்று ஒரு இருபது முறை சொல்லி விட்டாள். 

”சரி, போய் மெடிட்டேஷன் செய்யேம்மா” என்றேன். 

”மெடிட்டேஷனாவது மண்ணாங்கட்டியாவது; அதெல்லாம் சும்மா; ஏதோ வாழணுமேன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.” 

ஆஹா ஆஹா…  என்ன சொன்னாலும் சரி, இனி ஒரு நாய் கிடையாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.  ஏனென்றால், நாய்களை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவது போல் ஒரு கொடுமை இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.  எல்லா மனிதர்களும் நாயைப் பார்த்தாலே வெறி நாயாக மாறி விடுகிறான்கள்.  சமீபத்தில் பப்பு தெருவின் நடுவில் – அதுவும் எங்கள் வீட்டுக்கு எதிரே – கக்கா போனதற்காக பக்கத்து வீட்டு ஆள் புடுக்கு அறுந்த பன்றி மாதிரியே கத்தினான்.  நான் பதுங்கியபடி வந்து விட்டேன்.  இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் ஒரு ஆட்டோக்காரன் என்னை அடிக்கவே வந்து விட்டான்.  சென்னை ஆட்டோக்காரர்கள் என்றால் எனக்கு பயத்தில் மூத்திரமே வந்து விடும் என்பதால் ஆட்டோ ஸ்டாண்டுக்கு 200 அடி தூரத்திலேயே பப்புவை யூ டர்ன் அடித்தேன்.  அதற்கு வேறு பின்னங்கால்களில் ஆர்த்ரைடிஸ் என்பதால் கஷ்டப்பட்டுத்தான் நடக்கும்.  கயிற்றை வேகமாக  இழுத்தோம் என்றால், கால் மளுக்கென்று முறிந்து முதலுக்கே மோசம் ஆகி விடும்.  நடக்க முடியாவிட்டால் மலஜலம் எப்படிப் போவது?  இருந்தாலும் ஆட்டோக்காரனிடம் ஓத்தாம்பாட்டு வாங்க முடியாது என்று கஷ்டப்பட்டு பப்புவை யூ டர்ன் போட்டேன்.  அதற்குள்ளேயே பப்பு சிறுநீர் கழித்து விட்டது.  நேராக வேகவேகமாக என்னிடம் வந்தான் ஆட்டோக்காரன்.  வயது 25 இருக்கும். ஏய் அறிவு இருக்கா உனக்கு?  இதுதான் மூத்திரம் போற எடமா?

கிட்டத்தட்ட என்னை அடித்து விடும் தொனியில் கேட்டான்.  என் ரத்தம் முழுக்க தலைக்கு ஏறி விட்டது.  ”உங்க ஸ்டாண்டுலயா போச்சு?  அந்த எடத்துக்கும் இதுக்கும் 200 அடி தூரம் இருக்கும் இல்ல?” என்றேன்.   “என்னா புளுத்தி தூரம்?  நாறுதடா பாடு…”

நீங்களாக இருந்தால் அடித்திருப்பீர்கள்.   ஆனால் நான் அடிக்கவில்லை.  நானும் அவனும் ரோட்டில் கட்டிப் புரண்டு கொண்டிருந்தால் பப்புவின் மீது ஏதேனும் வாகனம் ஏறி விடும். 

அடுத்த பிரச்சினை, எனக்குக் கோபமாகப் பேசினாலே நெஞ்சு வலி வரும்.  கட்டியெல்லாம் புரண்டால் நேராக டிக்கட்டுதான்.  வாயை மூடிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.  ஆனால் பால்கனியிலிருந்து இதைப் பார்த்து விட்ட அவந்திகா வந்து அவனோடு மல்லுக்குப் போனாள்.  அதற்குள் மற்ற ஆட்டோக்காரர்கள் வந்து அவளிடம் “அந்தப் பையன் ஒரு மெண்டல்மா; விட்ருங்க” என்று மத்தியஸ்தம் பேசி அவளை அடக்கினார்கள்.  எல்லாம் முடிந்து வரும் போது “பாவம்ப்பா, நல்ல பையன் தான் அவன்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள். 

அடுத்த நாளிலிருந்து நீ வாக்கிங் போக வேண்டாம் என்று சொல்லி பப்புவை ஒரு பத்து நாள் வாக்கிங் அழைத்துக் கொண்டு போனாள்.  அதற்குப் பிறகு அந்த வேலை வழக்கம் போல் என்னிடமே வந்து சேர்ந்தது.

சரி, நாம் ஆரம்பித்த இடத்துக்கு வருவோம்.  Flap.  இதை நாங்கள் அரசு அலுவலகங்களில் Flag என்று சொல்லுவோம்.  கோப்புகளில் எந்தெந்தப் பக்கங்களை விசேஷமாகக் குறிப்பிட வேண்டுமோ அந்தப் பக்கங்களில் கொடி மாதிரி ஒரு சிறிய காகிதத்தை குண்டூசியால் குத்தி வைப்போம்.  அப்படிக் குத்தும் போது குண்டூசியின் முனை அதிகாரியின் கையைக் குத்தி விடாமல் குத்த வேண்டும்.  ஆனால் பொதுவாக அதை flap என்கிறார்கள் போல.  அருணாசலத்திடம் ஜெயமோகனுக்காக நான் ஒரு ArtReview Asia பத்திரிகையைக் கொடுத்தனுப்ப வேண்டும்.   அது இருக்கும் ஒரு நூறு பக்கம்.  வழவழா பேப்பர் வேறு.  அதில் நான் எழுதியிருக்கும் கட்டுரையை அவர் பார்க்க வேண்டும்.  ஏனென்றால், அவருடைய கட்டுரையைத்தான் நான் அதில் முழுக்க முழுக்கப் பயன்படுத்தியிருந்தேன்.  அதனால் அவர் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறியிருக்கிறேன்.  அதில் என் கட்டுரை வந்திருக்கும் பக்கத்தில் flap போட வேண்டும்.  அதற்காக அவரை ஒரு flap வாங்கிக் கொண்டு வரச் சொன்னேன். 

நான் பேசும் இலக்கியக் கூட்டங்களில் புத்தகங்களிலிருந்து மேற்கோள் காண்பிக்க வேண்டும் என்றால் இந்த ஃப்ளாப் தேவைப்படும்.  அதைப் போய் ஒரு ஸ்டேஷனரியில் வாங்கும் அளவுக்குப் பொறுமை இல்லை.  வாகனம் ஓட்டத் தெரியாததும் ஒரு காரணம்.  அதனால் ஒரு வெள்ளைக் காகிதத்தைப் பத்துப் பனிரண்டு துண்டுகளாக விரல் சைஸுக்குக் கிழித்து அதை எந்தப் பக்கத்தில் வைக்க வேண்டுமோ அதில் வைத்து குண்டூசியால் குத்தி விடுவேன்.  குண்டூசி கிடைக்கவில்லையானால் சோற்றுப் பசையால் ஒட்டி விடுவேன்.  ஆனால் இன்று ஞாயிற்றுக் கிழமை.  அருணாசலத்துக்கு ஸ்டேஷனரி கடை கிடைக்கிறதோ என்னவோ…

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai