கலையும் ஜனரஞ்சகமும்…

நான் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை.  நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் என்ற என் சிறுகதையைப் படித்திருந்தீர்களானால் நான் ஏன் இரங்கல் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.  நம் தமிழ்ச் சமூகம் necrophelic மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது என்பது என் முடிவு. உயிரோடு இருக்கும் போது தெருநாயைப் போல் அலைய விட்டு விட்டு இறந்து போனதும் சிலை வைப்பதையும் மாலை போடுவதையுமே நெக்ரோஃபீலிக் மனப்பான்மை என்கிறேன்.  பாரதிக்குத் தமிழ்ச் சமூகம் செய்தது இதைத்தான்.  பாரதிக்கு மட்டும் அல்ல; எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் இதைத்தான் செய்தது தமிழ்ச் சமூகம்.  அந்தக் காரியத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். 

பாலு மகேந்திரா இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னால் நான் அவரைச் சந்தித்தேன். அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி ஆஹா ஓஹோ என்றவர்களெல்லாம் அவருடைய தலைமுறைகள் படத்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை.  ஒரே ஒரு விதிவிலக்கு பாலச்சந்தர் மட்டுமே.  மற்ற யாருமே தனக்கு ஒரு ஃபோன் கூட செய்யவில்லை என்றார். ரஜினி, கமல் இரண்டு பேர் பெயரையும் குறிப்பிட்டே சொன்னார்.  அதே சமயம் பாலச்சந்தர் தனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதை என்னிடம் காண்பித்து அதை ஒரு பிரதி எடுத்து வரச் சொல்லியும் கொடுத்தார்.  குழந்தையைப் போல் அந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு சந்தோஷப் பட்டார். 

நேற்று ஒரு ஊடக நண்பர் போன் செய்து கிரேஸி மோகன் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா என்று கேட்டார்.  போனில் பேசினாலே போதும்; பதிவு செய்து கொள்கிறேன் என்றார். நான் பொதுவாக வெகுஜனக் கலாச்சாரத்தைச் சேர்ந்த யாருடைய மறைவு பற்றியும் பேசுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறேன்.   ஏனென்றால், உலகிலேயே தமிழ்நாடு ஒரு தனித்த தீவைப் போல், கடைந்தெடுத்த philistine சமூகமாக இருந்து வருவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இங்குள்ள வெகுஜன கலாச்சாரம்.  அமெரிக்காவில் வெகுஜன கலாச்சாரம் இல்லையா, வேறு எந்த நாட்டிலும் இல்லையா என்று கேட்கக் கூடாது.  ஏனென்றால், வெளிநாடுகளில் வெகுஜன கலாச்சாரம் வெகுஜன கலாச்சாரமாக மட்டுமே அடையாளம் காணப்பட்டு ரசிக்கப்படுகிறது.  நான் சொல்ல வருவது புரிகிறதா?  அதாவது, சினிமா இயக்குனர் ஷங்கரை இங்கே எழுத்தாளர் என்கிறார் கமல்ஹாசன். கமல் யார்?  உலக இலக்கியம் படித்தவர்.  இப்படி அமெரிக்காவில் சொன்னால் வழித்துக் கொண்டு சிரிப்பார்கள்.  இதைத்தான் சொல்கிறேன்.  இங்கே சினிமாவுக்கு எழுதுபவர் தான் எழுத்தாளர். சினிமாவுக்குப் பாட்டு எழுதுபவர்தான் கவிஞர்.  சினிமாவுக்குக் கதை எழுதுபவர்தான் எழுத்தாளர்.  சமூகம் கொடுக்கும் இந்த அங்கீகாரத்தை நம்பி “நான் நோபல் பரிசு வாங்கப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் வைரமுத்து.  அந்தோ பரிதாபம்! 

திரும்பவும் சொல்கிறேன்.  நான் வெகுஜன கலாச்சாரத்துக்கு எதிரி அல்ல.  ஆனால் கேபரேயை கேபரேயாகவும் பரத நாட்டியத்தை பரத நாட்டியமாகவும் பாருங்கள் என்கிறேன். எல்லா சமூகத்திலும் வெகுஜன கலாச்சாரம் உண்டு. எல்லோராலும் சி.சு. செல்லப்பாவையும் க.நா.சு.வையும் நகுலனையும் படிக்க முடியாது.  இங்கே ரமணி சந்திரன்கள் தேவை.  ஆனால் ரமணி சந்திரனுக்கும் நகுலனுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும்.   

ஒரு உதாரணம் சொல்கிறேன். பஞ்சாபியில் அத்தம்ஜித் சிங் என்று ஒரு நாடகாசிரியர் இருக்கிறார். உலகம் பூராவும் தமிழர்களைப் போலவே சீக்கியர்களும் பரவியிருப்பதால், அத்தம்ஜித் சிங்கை இந்தியாவிலேயே பார்க்க முடியாது.  வருடத்தில் பத்து மாதம் வெளிநாடுகளில்தான் இருக்கிறார்.   கனடாவுக்கு மட்டும் முப்பது தடவைகளுக்கு மேல் போயிருப்பதாகச் சொன்னார்.  கனடா என்னுடைய இன்னொரு வீடு என்றார். அங்கே உள்ள சீக்கியர்கள் அத்தம்ஜித் சிங்கை வரவழைத்து அவரது நாடகங்களை அவரையே வாசிக்கச் சொல்கிறார்கள்.   அந்த நாடகங்கள் நம் எஸ்.வி. சேகர், கிரேஸி மோகன் நாடகங்களைப் போல் தமாஷ் நாடகங்களாக இல்லை.  மேற்கத்திய நாடகக் கோட்பாடுகளுக்கு இணங்க, ஒரு நாடகம் என்பது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கின்றன.  சொல்லப் போனால் இந்திய மொழிகளிலேயே பஞ்சாபி மொழியில்தான் ஜனரஞ்சக நாடகங்கள் அதிகம். இரட்டை அர்த்த வசனங்கள் தூக்கலாக உள்ள நாடகங்கள் அவை.  ஆனால் அதே பஞ்சாபியில்தான் அத்தம்ஜித் சிங் ஒரு சினிமா நடிகரைப் போல், ஒரு பாப் பாடகரைப் போல் பிரபலமாக இருக்கிறார்.

2001 டிசம்பர் 30-ஆம் தேதி அன்று ஜெர்மனியில் உள்ள வூப்பர்ட்டாலில் தங்கியிருந்தேன். எங்கு பார்த்தாலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்.  வூப்பர்ட்டாலுக்குப் பக்கத்தில் 28 கி.மீ. தூரத்தில் டுஸல்டார்ஃப் என்று ஒரு ஊர் உள்ளது.  அங்கே இசையமைப்பாளர் ஆதித்யன் வருகிறார் என்று நோட்டீஸ் கொடுத்தார்கள்.  நானும் நண்பர்களும் போனோம்.  அன்று இரவு வூப்பர்ட்டாலே டுஸல்டார்ஃபில்தான் இருந்தது.  எல்லோரும் குழந்தை குட்டிகளாக வந்து நிறைந்திருந்தார்கள்.  ஆனால் கடைசியில் பார்த்தால் ஆதித்யனைக் காணோம். வேறு யாரோ வந்தார்.  அப்புறம்தான் தெரிந்தது, ஆதித்யனின் உதவியாளராம்.    நோட்டீஸில் தப்பாகவா போட்டிருந்தது?  நோட்டீஸைத் தேடிப் பிடித்துப் பார்த்தால் ஆதித்யனின் பெயர் கொட்டை எழுத்திலும் அஸிஸ்டெண்ட் பெயர் பொடி எழுத்திலும் இருந்தது.  நிகழ்ச்சிக்குக் கடும் டிக்கட் வசூலித்தார்கள்.   இன்னும், நியூயார்க், நியூஜெர்ஸி என்று முக்கியமான அமெரிக்க நகரங்களிலும் ஐரோப்பிய நகரங்களிலும் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. அவர்களெல்லாம் இந்த கிரேஸி மோகன்களைத்தான் அழைத்து நாடகம் போடுகிறார்கள்.  இல்லாவிட்டால் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டை அழைக்கிறார்கள்.  திரும்பவும் சொல்கிறேன்.  நான் ஜனரஞ்சக நாடகங்களில் எதிரி அல்ல.  கிரேஸி மோகன் என் நண்பர்.  மிகவும் திறமையானவர்.  ஆனால் அவரது நாடகங்கள் உலகம் பூராவும் நாடகக் கலை என்று சொல்லப்படும் கலை வடிவத்துக்குள் வராது.  வரவே வராது. 

கிரேஸி மோகனுக்கு என் நண்பர் ராமசேஷன் நண்பர்.   சேஷனிடம் கிரேஸி ஐயரா என்று கேட்டேன். வடகலை அய்யங்கார் என்றார்.  கிரேஸியின் மரணத்தில் என்னை வெகுவாக பாதித்த ஒரு விஷயம் உண்டு.  அவர் வயது 67 தான். முதல் ஹார்ட் அட்டாக்கிலேயே போய் விட்டார். இன்னொரு முக்கியமான விஷயம், அவர் தந்தை ஒரு ஆறு மாதம் முன்னால்தான் காலமானார்.  அவர் வயது 95.  கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்; காலம் கொஞ்சம் திருப்பிப் போட்டிருந்தால்  அவர் தந்தையின் நிலை என்ன ஆகியிருக்கும்!  95 வயதில் 66 வயது ஆன தன் தனயனைப் பறி கொடுக்கும் துயரம் எத்தகையது!  இறை சக்தி அந்த  முதியவருக்கு அந்தத் துயரத்தைக் கொடுக்கவில்லை. ஆனாலும் 66 வயதெல்லாம் சாகிற வயதா என்று கேட்டார் ராகவன்.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர்.  80 வயது.  ஐந்து தலைமுறைகளுக்கான குடியைக் குடித்திருக்கிறார்.  இன்னமும் குடிக்கிறார். மட்டமான டாஸ்மாக் சரக்கு.  சாக்கடையிலெல்லாம் விழுந்து கிடப்பார். 55 ஆண்டுகளாகக் குடிக்கிறார். ஒரு வியாதி கிடையாது.  என்னை விட வேகமான நடக்கிறார். இன்னும் ஐந்து வருடங்கள் இருப்பேன் என்கிறார்.  இதுவரை எந்த உடல் பயிற்சியோ நடைப் பயிற்சியோ செய்தது கிடையாது. அவரைப் பற்றி ராகவனிடம் சொன்னேன். ஆயுள் என்பது முன்பே எழுதப்பட்டது என்கிறார்களே, அது உண்மைதானோ?

***

நேற்று மற்றொரு மரணச் செய்தி.  கிரிஷ் கர்னார்ட்.  போதும்.  நீங்களே மேலே உள்ள கட்டுரையையும் கிரிஷ் கர்னார்ட் என்ற பெயரையும் ஒப்பிட்டுக் கொண்டு விடலாம்.  கிரிஷ் கர்னார்ட் பாரதீய ஞானபீடப் பரிசு வாங்கியவர்.  நாடகாசிரியராக உலகப் புகழ் பெற்றவர்.  இந்தியக் கலாச்சாரத்தின் அடையாளங்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.  அவருடைய நாடகங்கள்தான் நான் நாடகம் எழுதத் தூண்டுதலாக இருந்தவை. அவருடைய துக்ளக் என்ற நாடகம் நாடக இலக்கியத்தில் ஒரு கிளாஸிக், ஒரு மாஸ்டர்பீஸ்.   இன்றைய மோடி ஆட்சியைப் பற்றி அந்த நாடகத்தில் 1964-இலேயே எழுதி விட்டார் கிரிஷ் கர்னார்ட்.   இங்கே அசோகமித்திரன் என்ற மகத்தான தமிழ் எழுத்தாளர் இறந்ததை நினைவு கூருங்கள்.  அசோகமித்திரன் சாவுக்கு 25 பேர் வந்திருந்தனர்.  ஆனால் கிரிஷ் கர்னார்டின் மறைவுக்கு அவர் வாழ்நாள் பூராவும் கடும் வார்த்தைகளால் விமர்சித்துக் கொண்டிருந்த மோடி மிக மரியாதையான வார்த்தைகளால் இரங்கல் செய்தி கொடுக்கிறார்.    மோடிக்கு இப்படி மரியாதையான வார்த்தைகளால் இரங்கல் செய்தி கொடுக்க வேண்டும் என்று யார் சொன்னது?  கன்னடர்கள். இங்கே தமிழ் எழுத்தாளன் இறந்தால் ஹெச். ராஜாவும் தமிழிசையும் மோடியிடம் என்ன சொல்வார்கள்?  சே.  உதாரணமே தப்பு.  அவர்கள் இருவருக்கும் எழுத்தாளன் என்றாலே என்னவென்று தெரியாது. இது பாரதி காலத்திலேயே நடந்து போனது.  காந்தியிடம் பாரதியை அறிமுகம் செய்யத் துப்பு இல்லாதவர்களாக இருந்தார்கள் ராஜாஜியும் அவர் கூட இருந்தவர்களும். பிறகு காந்தி பாரதியை ராஜாஜி கோஷ்டிக்குத் தகுந்த முறையில் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது இல்லையா? 

கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி இறந்த போது கர்னாடக அரசு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டித்தது.  ஒருநாள் அரசு விடுமுறை. தேசியக் கொடு அரைக் கம்பத்தில் பறக்கவிடப் பட்டது.  அனந்தமூர்த்தியின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.  இப்போது கிரிஷ் கர்னார்ட் இதையெல்லாம் மறுதலித்து விட்டுப் போயிருக்கிறார்.  நான் இறந்தால் அரசு மரியாதை செய்யக் கூடாது.  என் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படக் கூடாது.   என் உடலுக்கு எந்த மதத்தைச் சார்ந்த சடங்குகளும் செய்யப்படக் கூடாது.  அவரது விருப்பப்படியே அவரது குடும்பத்தாரும் நெருங்கிய நண்பர்களும் சூழ அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.   உடலை தகனத்துக்கு எடுத்துச் செல்லும் போது உடன் வர இருந்த போலீஸ் பந்தோபஸ்தைக் கூட அவரது குடும்பத்தார் மறுதலித்து விட்டனர்.   இருந்தாலும் நேற்று கர்னாடக அரசு அரசு விடுமுறை அறிவித்தது. மூன்று தினங்கள் துக்கம் கொண்டாடுகிறது அந்த மாநிலம்.  நடக்க இருந்த மந்திரி சபை விரிவாக்கத்தைக் கூட அரசு தள்ளி வைத்து விட்டது.

கிரிஷ் கர்னார்டை உலகமே கொண்டாடியது.  அவர் அந்தப் புகழை மறுதலித்தார். ஆனால் இங்கே தமிழ் எழுத்தாளன் சோற்றுக்கு அலையும் தெருநாயைப் போல் அல்லவா தமிழ்ச் சமூகத்தால் நடத்தப்படுகிறான்?  எனவேதான் நான் தங்கப் பல்லக்கில்  பவனி வர விரும்புகிறேன். நீ தராததை நான் எடுத்துக் கொள்கிறேன். 

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai