தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 4

காஃபி டே முதலாளி தற்கொலை பற்றி நாலு வரி எழுதியிருந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நான்கு ஊர்களில் ஆறு பிரிவுகளில் அலுவலகம் வைத்திருந்தார். நூறு பேர் அவருக்குக் கீழ் வேலை செய்து அவரிடம் சம்பளம் வாங்கி வந்தனர். இப்போது – அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு – நாலு ஊர்களில் இருந்த எல்லா பிரிவுகளையும் பூட்டி விட்டார். அவரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தள்ளுவண்டியில் டீ விற்கிறார்கள். என்னுடைய மற்றொரு நண்பர் – ம்ஹும் நண்பர் இல்லை, உயிர் நண்பர் மோடியின் தீவிர ஆதரவாளர் – அவரிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டேன். சீச்சீ… ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும் சாரு, இன்னும் சில ஆண்டுகளில் பாருங்கள் இந்தியாவின் பொருளாதாரமே டாப்பில் பறக்கும் என்றார். அவர் என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. நமக்குப் பொருளாதாரம் எல்லாம் ரொம்ப வீக். இதை அந்த பிஸினஸ்மேன் நண்பரிடம் சொன்னேன். சொல்லி, வாங்க உங்க ஜாதகத்தை எடுத்துக்கிட்டு என்று முருகேசனிடம் போனேன். நண்பரின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்த முருகேசன் ஜனவரிக்குப் பிறகு வாங்க பார்க்கலாம் என்றார். அப்புறமாக முருகேசனை அழைத்த நான் இப்டி நீங்க யார்ட்டயும் சொன்னதில்லையே என்றேன். ஆமா, அவர் ஜாதகத்துல ரெண்டு மாசத்துல தற்கொலன்னு போட்டுருக்கு சாரு என்றார் முருகு. உடனே நண்பரை அழைத்து இன்ன மாதிரி சேதி, தற்கொலை ஞாபகம் வந்தா நல்லா செக்ஸ்ல ஈடுபடுங்க, இல்லேன்னா என்னைக் கூப்பிடுங்க, பேசிட்டு இருப்போம், தற்கொலை கிற்கொலை பண்ணிக்கிட்டீங்கன்னா நானே உங்களைக் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போய்டுவேன்னு மிரட்டினப் பிறகுதான் ஆள் நிதானத்துக்கே வந்தார். ஆனா நான் சொன்னது போல எனக்கு அவரிடமிருந்து ஃபோனே வரலை. பிறகு நான் என் உளவுத் துறை மூலம் விசாரித்ததில் ஆள் பத்துப் பதினைந்து லவ்வில் தீவிரமாக இருக்கிறார் என்று அறிந்தேன். அதைக் கேட்ட பிறகு எனக்குத்தான் தற்கொலை எண்ணம் வந்ததுன்னு சொல்லணும். அப்புறம் அந்த அனுபவங்களையெல்லாம் அவர்… சரி, வேண்டாம், இதுக்கு மேல ஒரு வார்த்தை எழுதினாலும் ஆளைக் கண்டு பிடிச்சிடுவீங்க… ஐயோ… இப்பவே கண்டு பிடிச்சிட்டீங்களா… செத்தேன்.

இப்பவும் ஆள் பிஸினஸ் எதுவும் இல்லாம ஃபேஸ்புக்லதான் திரிஞ்சுக்கிட்டிருக்கார். முருகு சொன்ன ஜனவரி போய்டுச்சு. இப்போ காபி டே ஓனர் தற்கொலை பண்ணிருக்கார்.

முந்தாநாள் கூட மோடி ஆதரவு நண்பரைச் சந்தித்து காஃபி டே ஓனர் பற்றிக் கொஞ்சம் வருத்தப்பட்டேன். போங்க சாரு… இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சுப் பாருங்க… இந்தியா ஓஹோன்னு இருக்கும் என்றார்.

அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

charu.nivedita.india@gmail.com