வெப்சீரீஸ் பார்ப்பது கால விரயம்தான். முப்பது மணி நேரம் நாற்பது மணி நேரம் என்று கொன்று விடுகிறது. ஆனால் நான் ”காதம்”, ”லூசிஃபர்” போன்ற அமெரிக்க வெப்சீரீஸ் பார்த்து அமெரிக்க ஆங்கிலத்தை அமெரிக்கரைப் போல் உச்சரிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கோவையில் மனோவுக்குக் கொஞ்சம் க்ளாஸ் எடுத்தேன். அவரிடம் water என்று சொல்லச் சொல்லுங்களேன். பின்னி எடுப்பார். ஓட்டலில் போய் நான் சொன்ன மாதிரி water கேட்டார். சர்வர் முழித்தார். உடனே தமிழ்ப் பாணியில் wa-t-t-t- e- rrrr என்றார். அடுத்த நொடியில் தண்ணீர் வந்தது. பெயில் பெயில் பெயில் என்று மூன்று முறை சொன்னேன். பிறகு என்ன பண்ணுவது சாரு, தண்ணி குடிக்கலேன்னா பிரச்சினைன்னு நீங்கதானே சொன்னீங்க என்றார். இந்த ஓட்டல் வேண்டாம், வேறொரு ஓட்டல் இப்பவே போவோம் வாங்க என்று வேறொரு ஓட்டல் போனோம். நான் கேட்கிறேன் பாருங்க என்று சொல்லி விட்டு அமெரிக்கப் பாணியில் watcer என்றேன். சர்வர் வழக்கம் போல் முழித்தார். கட்டை விரலை வாய்ப் பக்கம் கொண்டு போய் மீண்டும் watcer என்றேன். உடனே புரிந்து கொண்டு கொண்டு வந்தார். once, மேட்டுக்குடிப் பக்கம் வந்தாச்சுன்னா அப்றம் திரும்பவும் சாராயக் கடைப் பக்கம் போக்கூடாது மனோ என்றேன். பாம்பு சட்டையை உரிச்சாப்ல உரிச்சுடணும்.
என் முன்னாள் கனவுக் கன்னி ப்ரியங்கா சோப்டாவுக்காக quantico சீரீஸை எட்டிப் பார்த்தேன். செம போர். ரெண்டு எபிசோடுக்கு மேல் தாங்கவில்லை. ஆனால் ப்ரியங்கா நான் எதிர்பார்த்தபடி இல்லை. அமெரிக்கரைப் போலவே ஆங்கிலம் பேசுகிறார். ஆனால் மெரிக்கரின் தொண்டைக்குழியிலிருந்து ழ ழ ழ என்று ஒரு ழகரம் வந்து கொண்டே இருக்கும். அந்த ழகரம்தான் ப்ரியங்காவிடம் மிஸ்ஸிங். மற்றபடி அதே உச்சரிப்பு. உதாரணமாக, இந்தியர்கள் activities என்பதை activittteees என்று உச்சரிப்பர். ப்ரியங்கா மிகச் சரியாக acttividdis என்கிறார். முதல் டி,யில் அழுத்தி இரண்டாவது டியை மென்மையாக்க வேண்டும். நம் ஆட்கள் முதல் டியை டி போலவும் இரண்டாவது டி,யை நாலைஞ்சு டி போட்டும் கொல்வார்கள். அதை விட ஆச்சரியம், repatriated என்பதை நம்மவர் pat இல் வரும் a யை cat or pat இல் வரும் a போல் உச்சரிப்பர். ஆனால் அதன் அமெரிக்க உச்சரிப்பு ரிபேட்ரியேட்டட். பே. பேய்-இல் வரும் பே. அதையும் சரியாகச் சொன்னார். செம.
ஆனால் இந்த ப்ரிட்டிஷ் உச்சரிப்பு என்னைக் கொன்று போட்டாலும் வராது. கொடுமை. ஆங்கிலத்தை மென்று மென்று துப்புகிறார்கள்.