ராஸ லீலா கலெக்டிபிளில் அருணாச்சலம் பற்றி எழுதியது:

மதுரையில் வசிக்கும் அருணாச்சலத்தைத் தெரியாத இலக்கிய வாசகர் யாரும் இருக்க முடியாது. அவருடைய மேகா பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்தார். நானும் ஒரு தேதியைக் கொடுத்திருந்தேன். அவரும் பணம் கொடுத்து அந்தத் தேதியில் அரங்கத்தை முன்பதிவு செய்து விட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே தேதியில் வேறொரு தவிர்க்கவே முடியாத நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்தேன் போல. அது கேரளா. கடைசியில்தான் அந்த விஷயம் எனக்குத் தெரிந்து “வேறு பலரும் கூட பேசுகிறார்கள் இல்லையா, எப்படியோ சமாளித்துக் கொள்ளுங்கள் அருணா, தவறு நடந்து விட்டது” என்று சொல்லி விட்டு கேரளா கிளம்பி விட்டேன். பார்த்தால் அருணாச்சலம் அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்து விட்டார். கேரளத்திலிருந்து திரும்பிய பிறகு என்னிடம் சொன்னார், ”உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அப்போது பார்த்துக் கொள்ளலாம்.” கடைசியில் நிகழ்ச்சி நடக்கும் போதுதான் லக்ஷ்மி சரவணகுமார் மேடையில் பேசும்போது குறிப்பிட்டார், அருணாச்சலம் அவரிடம் சொல்லியிருக்கிறார். என்னவென்று? ”சாருவுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதுதான் வெளியீட்டு விழா; அதற்கு ஒரு வருடம் ஆனாலும் சரி.” இப்பேர்ப்பட்ட அன்பெல்லாம் நோபல் பரிசு வாங்கும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

அருணாச்சலம் இந்த ஜென்மத்தில் எனக்குக் கிடைத்த வரம்.