தேவ சுப்பையா பற்றி…

தேவா என்று நான் மிகப் பிரியத்துடன் அழைக்கும் தேவ சுப்பையாவின் அறிமுகமும் நட்பும் எனக்கு சென்ற ஆண்டு ஷார்ஜா சென்ற போது கிடைத்தது. அமீரக நண்பர்களால் அண்ணன் என்று அழைக்கப்படும் தேவா ஒரு அற்புதமான மனிதர். அவரிடம் எனக்கு மிகப் பிடித்தது அவர் தன் உடல்நலத்தைப் பேணுவது. ஒரு இந்திப் பட ஹீரோ மாதிரி உடலைப் பேணுவது – வயிறும் முதுகும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்வது போல் வைத்துக் கொள்வது என்பதெல்லாம் இந்தக் காலத்தில் அத்தனை சுலபமான காரியம் அல்ல. தேவா அதை சத்தம் போடாமல் சாதித்திருக்கிறார். அவர் ஒருநாள் கூட விடாமல் ஜிம்முக்குப் போகிறார் என்பதே பலருக்கும் தெரியாது. பொதுவாக அப்படி உடல்நலம் பேணுபவர்கள் மனதளவில் இறுகிப் போய் விடுவார்கள். கலகம் அவர்களை விட்டு விலகி விடும். சிரிக்கக் கூட மாட்டார்கள். ஹெடோனிஸம் என்றால் காத தூரம் ஓடி விடுவார்கள். ஆனால் தேவா இது எதிலும் சிக்க மாட்டார். ஜாலியான பேர்வழி.

இதையெல்லாம் விட மிக முக்கியம், தேவா முகநூலில் எழுதும் பதிவுகளையும் கவிதைகளையும் நான் விரும்பி வாசிக்கிறேன். அவையெல்லாம் தொகுக்கப்பட வேண்டும்.

அவரோடு ஷார்ஜாவில் செலவிட்ட தருணங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை. நான் இந்தியா திரும்பும் அன்று ஷார்ஜா விமான நிலையத்தில் அவரும் பாலாஜியும் தெரிசை சிவாவும் சாஷ்டாங்கமாக என் காலில் விழுந்து வணங்கிய போது, ’லௌகீக வாழ்வில் எனக்கு உறவுகள் இல்லையே’ என்ற தீராத ஏக்கத்துடனேயே வாழ்ந்த என் தனிமையெல்லாம் பறந்து போய் விட்டது.

தேவாவும் பாலாஜியும் என்னை வாய் நிறைய அப்பா அப்பா என்றுதான் அழைப்பார்கள். அவர்களுக்கு என் எழுத்தைத் தவிர கொடுப்பதற்கு வேறு என்ன இருக்கிறது…