எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அது ஒரு பாக்கியம் என்பது உண்மையாக இருந்தால். பெற்றோர் தங்கள் குழந்தைகளை நேசிப்பது ஒருவித narcissism தானே தவிர வேறில்லை. தங்களின் நீட்சியாகத்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்கிறார்கள். Designated Survivor என்ற வெப்சீரீஸில் ஒரு இடம்: சந்தர்ப்பவசத்தினால் அமெரிக்க அதிபராக ஆகும் டாம் கர்க்மெனை அந்தப் பதவியிலிருந்து நீக்க பலரும் முயற்சிக்கிறார்கள். டாமின் மனைவி அலெக்ஸுக்கு அவரை மணப்பதற்கு முன்னால் ஒரு காதலன் இருந்தான். அவன் ஒரு கிரிமினல் என்று தெரிந்து விலகி விடுகிறாள் அவள். ஆனால் இப்போது அவள் கணவன் ஜனாதிபதி ஆகி விட்டதால் அவளுடைய முன்னாள் காதல் வெளியே கசிந்து ஒரு பத்திரிகையாளன் அவள் மகனிடம் வந்து, “அதிபராக இருக்கும் உன் தந்தை உண்மையிலேயே உன் தந்தை தானா?” என்று கேட்கிறான். அதுவரை இந்த விஷயம் எதுவுமே தெரியாத மகன் தன் பெற்றோரிடம் போய் கோபமாக விசாரிக்கும் போது அவனுக்கு மரபணு சோதனை செய்ய வைக்கிறாள் அலெக்ஸ். முடிவு வருகிறது. அந்தக் கவரைப் பிரிக்காமலேயே டாம் தன் மகனிடம் சொல்கிறார். “நீ என் மகன் என்பதை இந்தப் பரிசோதனை முடிவு எனக்குச் சொல்ல வேண்டியது இல்லை; நீ என் மகன் என்பது இந்த இடத்தில் இருக்கிறது” என்று சொல்லித் தன் இதயத்தைத் தொட்டுக் காண்பிக்கிறார். முதலில் பெரும் பதற்றத்தில் இருந்த இளைஞன் பிறகு அந்தக் கவரை பிரிக்காமலேயே தன் தந்தையிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறான்.
என் எழுத்தில் இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறதோ, திரையில் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. தமிழ் சினிமாத் தலைப்பு மாதிரி இருந்தாலும் உண்மை இதுதான்: பெற்றால்தான் பிள்ளையா? ஷார்ஜாவில் வசிக்கும் பாலாஜி ஜி. சேகர் நான் பெறாத பிள்ளை.
முகநூலில் தினமும் ஒரு டஜன் பேரை ப்ளாக் செய்வது என் வழக்கம். இப்படியே போனால் உங்களையே நீங்கள் ப்ளாக் செய்து கொண்டு விடுவீர்கள் என்று கூட நண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு. எனக்குப் பிடிக்காத ஏதேனும் ஒரு காமெண்ட் பார்த்தால் போதும், ப்ளாக் செய்து விடுவேன். அப்படித்தான் எப்போதோ பாலாஜியை ப்ளாக் செய்து விட்டேன் போல. நண்பர்கள் மூலம் பலமுறை பாலாஜி செய்தி அனுப்பினார். ”பாலாஜி உங்களுடைய தற்கொலைப் படை; அவரைப் போய் ப்ளாக் செய்து வைத்திருக்கிறீர்களே?” என்று பல நண்பர்கள் என்னைத் திட்டினார்கள். பிரச்சினை என்னவென்றால், ப்ளாக் செய்யத் தெரிந்த எனக்கு அன்ப்ளாக் செய்யத் தெரியாது. பிறகு நான் ஷார்ஜா சென்ற போது பாலாஜியிடமே கேட்டு அவர் மூலமே அவரை அன்ப்ளாக் செய்தேன். இதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ”கலைஞர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நீங்கள் இப்படி இல்லாவிட்டால்தான் நான் கவலைப்பட வேண்டும்” என்றார் பாலாஜி.
ஷார்ஜா விமான நிலையத்தில் நான் இந்தியா கிளம்பும் தருணத்தில் பாலாஜி என் கால்களில் விழுந்து நமஸ்கரித்து எழுந்து ”அடிக்கடி ஷார்ஜா வாருங்கள் அப்பா” என்று சொல்லி என்னைக் கட்டித் தழுவிய போது நான் அழுது விட்டேன்…