யார் ஹெடோனிஸ்ட்?

சாம்நாதன் பற்றி ராஸ லீலா கலெக்டிபிளில் எழுதியிருந்த பின்வரும் குறிப்பை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.  அந்தக் குறிப்பை சாம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறான்.  உடனே சாமின் முகநூல் நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டத்தைப் பதிவு செய்திருக்கிறார். 

முதலில் என் குறிப்பு; அதைத் தொடர்வது சாமின் முகநூல் நண்பரின் எதிர்வினை. 

”சாம்நாதனோடு நீங்கள் பேசுவதே இல்லை; நேரிலும் அடிக்கடி பார்ப்பதில்லை. இருந்தாலும் சாமுக்கும் உங்களுக்கும் இடையே ஒரு தீவிரமான பிடிப்பும் நேசமும் பற்றுதலும் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன என்று ஒருமுறை என்னைக் கேட்டாள் காயத்ரி. உண்மைதான். இந்தப் பத்து ஆண்டுப் பழக்கத்தில் ஓரிரு முறைதான் ஃபோனில் பேசியிருப்பேன். வாசகர் வட்ட சந்திப்புகளில் பல மணி நேரம் பேசியதுண்டு. பல மணி நேரம் என்றால் ஒரு இரவு முழுக்க என்று பொருள். அப்படி இரண்டுமூன்று இரவுகள் போகும். இமயமலைக்குப் போனபோது பனிரண்டு இரவுகள் கண் விழித்துப் பேசியிருக்கிறோம். என் எழுத்தை விட என் வாழ்க்கையிலிருந்து ஒருவன் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் அது சாம்தான்.

சாமுக்கு ஈகோவே கிடையாது. முழுக்க முழுக்க ஒரு ஹெடோனிஸ்ட். இதெல்லாம் என்னிடமிருந்து அவன் பெற்றுக் கொண்டது. பணம் மட்டுமே கொடுக்கக் கொடுக்க சிறுக்கும். ஞானம் கொடுக்கக் கொடுக்கப் பெருகும் இல்லையா? அவனுக்குக் கொடுத்ததன் மூலம் என்னிடமிருந்த உள்ளங்கை ஞானம் இரட்டிப்பாகப் பெருகியது.

முழுக்க முழுக்க அன்பே உருவானவன் சாம். உண்மையான கிறிஸ்தவன். அந்த வகையில் சாமைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோபி கிருஷ்ணனின் ஞாபகமே வரும். கோபி, கிறிஸ்து நாதரைப் போல் வாழ்ந்தவர். எனக்கு ரத்த உறவுகள் கிடையாது. ஆனால் நான் பெறாத பிள்ளையாக என்னோடு எப்போதும் இருப்பவன் சாம். நான் ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் இருந்த போது இரவு பகலாக என் உடன் இருந்து சிசுருக்ஷை செய்தவர்களில் முக்கியமானவன் சாம். கொஞ்சம் புரண்டு படுத்தால் போதும், என்ன வேண்டும் சாரு என்று கேட்பான். அது நள்ளிரவாக இருக்கும். ஒரு தாய் கூட தன் பிள்ளையை இப்படி கவனித்துக் கொண்டிருக்க மாட்டாள். அப்படி என்னை கவனித்துக் கொண்டவன் சாம். சாம் என் ரத்தம். அவனுக்கு இந்தப் பிரதியை அளிக்க நேர்வது என் கொடுப்பினை.”

***

மேற்கண்ட என் குறிப்புக்கு சாமின் முகநூல் நண்பரின் எதிர்வினை கீழே:

“இல்லை சாம்.  உன்னை தன்னுடைய வாரிசாக / சீடனாக சொல்வதின் வழி அவர் தன்னை உயர்திக் கொள்கிறார் என்பதே என் அனுபவம்…. 

சாரு ஹெடோனிஸ்ட் என தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறாரே தவிர அவர் அப்படி வாழ்வதில்லை. ஒருவேளை அப்படி வாழ்ந்தால் புலம்பவோ/ திரும்பத்திரும்ப தன்னைப்பற்றியோ பேச மாட்டார்.  

நீ உன்னுடைய அனுபவங்களை எழுதுகிறாய்.   அவரோ தான் அனுபவித்திடாத ஒன்றை / ஏக்கத்தை தான் அனுபவித்தது போல எழுதுகிறார். அவ்வளவுதான் உனக்கும் அவருக்குமான வித்யாசம்.

சாருவின் எழுத்திற்கும் உன்னுடைய வாழ்விற்கும் துளியளவு கூட ஒற்றைமையை நான் கண்டதில்லை.  

உன்னைப் போல இலக்கிய உலகில் வாழ்கிறவர் எனச் சொன்னால் ராஜ சுந்தரராஜனைத் தான் சுட்டுவேன். அவருடைய எழுத்திற்கு முன் சாருவுடைய எழுத்தும் வாழ்வும் ச்சும்மா.  

நம்முடைய கடைசி சபையில் கூட நாடோடித்தடத்தை பற்றி பேசினோம்.

ஜெகா கூட ராஜசுந்தரராஜனைத்தான் ஆசான் என்பான். சாருவை தகப்பன் என்பான்…. 

மற்றபடி

எழுத்து சுய பிம்பக் கட்டமத்தலைக் கடந்து அன்பு செய்வதை வரவேற்கிறேன்….”

***

இதற்கெல்லாம் பதில் எழுதுவது உங்கள் தகுதிக்கும் உயரத்துக்கும் பொருந்தாத விஷயம் என்று சொன்னார் ராகவன்.  இருக்கலாம்.  ஆனால் வாழ்நாள் முழுவதும் நான் மட்டுமேதான் எனக்காக வாதாடிக் கொண்டிருக்கிறேன்.  (இப்போது இன்னொரு ஆத்மாவும் கிளம்பியிருக்கிறது.  கடவுளுக்கு நன்றி!) உண்மையில் மேலே கண்டுள்ள அவதூறுக்கு சாம்தான் தக்க பதிலை எழுதியிருக்க வேண்டும்.  அல்லது, சீனி எழுதியிருக்க வேண்டும்.  அல்லது, செல்வகுமார் எழுதியிருக்க வேண்டும்.  கருப்பு எழுதியிருக்க வேண்டும்.  (கருப்பு, நீங்கள்தான் நம் குழுவில் கொஞ்சம் கோபக்காரர்.  அந்தக் கோபம் இந்த இடத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டும்.  மாறாக அது தேவையில்லாத இடங்களில் வெளிப்பட்டு விடுகிறது!) குமரேசன் எழுதியிருக்க வேண்டும்.  ஸ்ரீராம் எழுதியிருக்க வேண்டும்.  கணேஷ் அன்பு எழுதியிருக்க வேண்டும்.  கருந்தேள் எழுதியிருக்க வேண்டும்.  ஜெகா எழுதியிருக்க வேண்டும்.  ஏன், சாமின் முகநூல் நண்பரால் புகழப்படும் ராஜ சுந்தரராஜனே கூட எழுதியிருக்கலாம்.  ஏனென்றால், ராஜ சுந்தரராஜன் என் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர் என்பதை அவர் நேர்ப்பேச்சிலிருந்து நான் உணர்ந்திருக்கிறேன்.  ஆனால் அவரும் அந்த முகநூல் அன்பரின் எதிர்வினைக்கு ஒரு விருப்பக்குறி இட்டு விட்டு ஒதுங்கி விட்டார்.  (’நல்லவேளை, சாருவைப் போல நம்மையும் போலி என்று சொல்லவில்லை.  தப்பினோம்’ என்று அவர் நினைத்திருக்கலாம்!)  நம்முடைய ஆட்களே வாயை மூடிக்கொண்டு கிடக்கும் போது அவர் என்ன செய்வார் பாவம்?

நம் ஆட்கள் யாரும் வம்புதும்பு எதற்கும் போகாதவர்கள்.  சரி.  உங்கள் தகப்பனை ஒருவர் அவமானப்படுத்தும் போதும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பீர்களா?  அந்த உங்களின் மௌனத்தினால்தான் எனக்கு நானே பாதுகாவலனாக இருக்கிறேன்.  இதற்குப் பெயர்தான் சுயபிம்பக் கட்டமைத்தல்.  சேற்றை வாரி இறைப்பீர்கள்.  பதில் சொன்னால் அதற்குப் பெயர் சுயபிம்பக் கட்டமைப்பு.  அன்னாருக்குத் தெரியுமா, தமிழின் சிறந்த நூறு நாவல்கள் என்று நூறு பேர் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.  இதில் ஒரு பட்டியலில் கூட என் பெயர் இருக்காது.  இது எப்படியென்றால், ஒரு டெலஃபோன் டைரக்டரியிலேயே ஒருவரின் பெயர் இருக்காது என்பதைப் போல.  இன்னொரு உதாரணம் தருகிறேன்.  தமிழின் முக்கியச் சிறுகதைகள் என்று ஆங்கிலத்தில் தலையணை சைஸில் ஒரு புத்தகம் வந்தது.  தொகுப்பாளர் திலீப்குமார் என்பவர்.  அந்த ஆள் அண்ணாதுரையிலிருந்து கருணாநிதி வரை, பாரதியாரிலிருந்து இமையம் வரை தமிழில் சிறுகதை எழுதியுள்ள அத்தனை பேரின் சிறுகதைகளிலும் ஒன்று ஒன்று எடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து தொகுத்திருக்கிறார்.  அதில் இல்லாத சிறுகதை ஆசிரியரே இல்லை.  தமிழ்வாணன் பெயரும் என் பெயரும்தான் இல்லை.  இப்படிப்பட்ட சூழலில் என்னைப் பற்றி நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்கள்?  அப்படிச் சொன்னால் சுயபிம்பத்தைக் கட்டமைக்கிறேனாம்.  கட்டமைத்து இங்கே என்ன மயிரையா புடுங்க முடியும்?  இங்கே தமிழ் இலக்கியத்தில் என்னய்யா அதிகாரம் இருக்கிறது?  வாசகர்களிடம் பணம் வாங்கி சீலே போகிறேன்.  இதுதான் நிலைமை.  இதில் சுயபிம்பத்தைக் கட்டமைத்து என்ன கிழியப் போகிறது?

”உன்னை தன்னுடைய வாரிசாக / சீடனாக சொல்வதின் வழி அவர் தன்னை உயர்திக் கொள்கிறார் என்பதே என் அனுபவம்….” என்கிறார் முகநூல் அன்பர்.  இந்த வாக்கியத்தில் இருக்கும் இலக்கணப் பிழைகள், அச்சுப் பிழைகள், ஒற்றுப் பிழைகளை விட்டுவிட்டு கருத்துக்குச் செல்வோம்.  நான் சாமை என் எழுத்துலக வாரிசு என்றா சொன்னேன்?  அவன் தன்னுடைய முதல் நாவலை என்னிடம் கைப்பிரதியாகக் கொண்டு வந்து கொடுத்த போது, பத்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லையடா செல்லம் என்று சொல்லித் திருப்பிக் கொடுத்து விட்டேன்.  ”ஒரு நாவலைத் திட்டக் கூட செய்யலாம்.  படிக்கவே முடியாவிட்டால் அது பெரும் தோல்வியில்லையா?” என்று பலபடியாக அவன் நாவலை விமர்சித்துத் திருப்பிக் கொடுத்தேன்.  அது இலக்கியம்.  நான் ராஸ லீலா கலெக்டிபிளில் பேசி இருப்பது முழுக்க லௌகீக வாழ்க்கை.  இரண்டும் இரு வேறு தளங்கள்.  சாமை உயர்த்திச் சொல்வதன் மூலம் என்னை உயர்த்திக் கொள்ள முயல்கிறேனாம்.  முயன்று?  எதாவது நோபல் கீபல் கொடுப்பார்களோ?  கொஞ்சமாவது காமன்சென்ஸ் வேண்டாமாய்யா கபர்கூஸ்? 

முகநூல் அன்பரின் பின்னூட்டம் முழுவதையும் படித்தால், அதில் ’சாரு ஒரு போலி; சாம் நிஜம்’ என்ற வாதமே முன்வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.  இந்த அவதூறை நான் 40 ஆண்டுகளாக – நான் எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்து – எதிர்கொண்டு வருகிறேன்.  இதை எழுதிய முகநூல் அன்பரின் வயதே நாற்பது இருக்குமா என்று தெரியவில்லை.  வெங்கட் சாமிநாதனிலிருந்து இன்றைய நாகர்கோவில் கவிஞர்க்குஞ்சு வரை சாரு போலி சாரு போலி என்றுதான் கத்திக் கொண்டிருந்தன; கத்திக் கொண்டிருக்கின்றன.  ஒருமுறை திருநெல்வேலியில் – 20 ஆண்டுகளுக்கு முன்னே – ஒரு இலக்கிய விழாவில் நான் கலாமோகனின் சிறுகதைத் தொகுப்பு பற்றிப் பேசினேன்.  உடனே கவிஞர்க்குஞ்சு எழுந்து “சாரு பாரிஸ் போவதற்காகத்தான் கலாமோகனுக்கு ஐஸ் வைக்கிறார்” என்றது.  விஷயம் என்னவென்றால், கலாமோகன் பாரிஸில் வசிக்கிறார்.  என்னாலெல்லாம் இன்று வரை கூட – இந்த ஜென்மா பூராவுமே – இப்படியெல்லாம் சில்லறைத்தனமாக யோசிக்க முடியாது.  இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்?  இத்தனை கேவலமாகவா ஒரு மனிதன் யோசிப்பான்?  இவனெல்லாமா எழுத்தாளன்?  அப்போது நான் முரடன்.  அப்படியே நான் பேசிக் கொண்டிருந்த மேஜையை எடுத்துப் போட்டு உடைத்தேன்.  எத்தனை கெட்ட வார்த்தைகள் தமிழில் உண்டோ அது அத்தனையையும் மைக்கிலேயே சொல்லிக் கத்தினேன்.  பாய்ந்து போய் அந்த ஜந்துவை அடிக்கப் போனேன்.  ஒரே கலவரமாகி விட்டது.  ஜந்துவை நாலு பேர் பிடிக்க, என்னை எட்டு பேர் பிடிக்க ஒரு மணி நேரம் அந்தப் பள்ளிக்கூட வளாகத்தில் போர் நடந்தது.  இப்போதும் கூட அந்த ஜந்து என்னை போலி போலி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறது.  இப்படியாக இந்தக் கதை நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஹெடோனிஸம் என்ற வார்த்தையையே தமிழில் அறிமுகப்படுத்தியது அடியேன் தான்.  என்னிடமிருந்து கற்றுக் கொண்டு என்னையே பதம் பார்க்க வருகிறீர்களா?  ஹெடோனிஸம் என்பதற்கு நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் அர்த்தம் தவறு.  வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ்வது ஹெடோனிஸம் என்று எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் இதன் உள்படிவுகள் மடிப்புகள் என்ன?  மதுவும் மாதரோடு சல்லாபிப்பதும்தான் ஹெடோனிஸம் என்று உங்களுக்கு எந்த மடையன் சொன்னது?  அந்த ரெண்டும்தான் ஹெடோனிஸம் என்று உங்களுக்குத் தோன்றினால், அதுதான் உங்கள் தெரிவு என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.  அதில் வாழ்ந்து பழகுங்கள்.  எனக்கு ஆட்சேபணை இல்லை.  ஆனால் வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்து கொண்டு அதில் உச்சத்தைக் காண்கின்ற ஒருவனைப் பார்த்து போலி என்று சொல்லாதீர்கள்.  என்னைப் பொறுத்தவரை காந்தி ஒரு ஹெடோனிஸ்ட்.  தாகூர் இல்லை.  தாகூர் ஒரு careerist.  போராட்டமே காந்தியின் ஹெடோனிஸம்.  சமரசம் செய்து கொள்ளாத வாழ்வே அவரது ஹெடோனிஸம்.  வெளியிலிருந்து பார்த்தால் குடியும் குட்டியுமாக வாழ்ந்த நேருவே ஹெடோனிஸ்டாகத் தோன்றும்.  அது தவறு.  நேருவும் தாகூரைப் போலவே ஒரு careerist.  ஃபிடலையும் சேவையும் எடுத்துக் கொண்டால் ஃபிடல் careerist; சே ஹெடோனிஸ்ட்.  காந்தியைப் போலவே போராட்டமே தனது ஹெடோனிஸமாகத் தெரிவு செய்து வாழ்ந்தவன் சே. 

நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்.  என்னுடைய 40 ஆண்டுக் கால வாசிப்பின் – வாழ்வின் – சாரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்.  எது சுதந்திரமோ அதுவே ஹெடோனிஸம்.  நான் சினிமாவுக்கு வசனம் எழுதினால் உலகம் பூராவையும் சுற்றிச் சுற்றி வரலாம்.  எனக்கு லெபனான் போக வேண்டும்.  அதுவும் என்னுடைய ஒரு தாய்நாடு.  மொராக்கோ போக வேண்டும்.  ஜப்பான் போக வேண்டும்.  நியூஸிலந்துக்குப் பக்கத்தில் 100 பேர் மட்டுமே வசிக்கும் ஒரு தீவுக்குப் போக வேண்டும்.  அங்கே உள்ளவர்கள் பிரிட்டிஷ் வம்சாவளிகள்.  ஆங்கிலம்தான் பேசுகிறார்கள்.  கணினி இல்லை; மின்சாரம் இல்லை; இண்டர்நெட் இல்லை; பள்ளி இல்லை; நவீன வாழ்க்கையின் அடையாளங்கள் எதுவுமே இல்லை.  நாம் அங்கே போனால் ஒரு வாரம் தங்கியிருந்து அவர்களோடு உண்ணலாம்; உறங்கலாம்.  அங்கே போக வேண்டும்.  தென்னமெரிக்க நாடுகள் பூராவும் போக வேண்டும்.  மத்திய அமெரிக்க நாடுகள் பூராவும் போக வேண்டும்.  அடிப்படையில் நான் ஒரு பயணி.  பணம் வேண்டும்.  வசனம் எழுதினால் நிறைய பணம் வரும்.  ஆனால் இயக்குனர்களுக்கு சோப்புப் போட வேண்டும்.  ஹீ ஹீ என்று 32 பல்லையும் காட்ட வேண்டும்.  ஆனானப்பட்ட கமல்ஹாசனே இயக்குனர் ஷங்கரைப் பார்த்து நீங்கள் எழுத்தாளர் என்கிறார்.  அப்படியிருக்கும் போது என் நண்பர் ரஜினியைப் பார்த்து ஒரு மேடையில் “நீங்கள் எழுத்தாளர்” என்று சொல்வதில் தப்பே இல்லை.  ஆனால் நண்பர்களே, என்னால் சொல்ல முடியாது.  ஏனென்றால், நான் HEDONIST.  இப்போது அர்த்தம் புரிகிறதா?  வசனம் எழுதினால் சுதந்திரம் போய் விடும். 

இன்னொரு உதாரணம் தருகிறேன்.  என் எழுத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபலம் பெங்களூரில் என் மீது கிரிமினல் கேஸ் போட்டிருக்கிறது.  அதன் காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூர் சென்று ஒரு நாள் பூராவும் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னே கால் கடுக்க நின்று பெயில் வாங்கிக் கொண்டு வருகிறேன்.  எவ்வளவு காலம்?  ஏழு ஆண்டுகள்.  இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.   ஒரே ஒருமுறை அரெஸ்ட் வாரண்ட் வந்து விட்டது.  ஒரு வாரம் தலைமறைவாக இருந்தேன்.  இன்னமும் பெங்களூர் கோர்ட்டுக்குப் போய்க் கொண்டுதான் இருக்கிறேன்.  ஒரே ஒரு வார்த்தை “மன்னிப்பு” என்று சொன்னால் எனக்கு அந்தக் கேஸிலிருந்து விடுதலை கிடைக்கும்.  மன்னிப்புக் கேட்டால் கண்ணாடியில் என்னை நான் பார்த்துக் கொள்ள முடியாது.  காறித் துப்பத் தோன்றும். 

தூக்கம் வராது.  என்னைப் பார்த்து நானே காறித் துப்பும் நிலையில் இருந்தால் ஹெடோனிஸமாவது மயிராவது?  ஆக, என் சுதந்திரத்தை நான் முழுமையாக வாழ்வதே ஹெடோனிஸம்.  என் சுதந்திரத்துக்கு எதிராக, தடையாக எதெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் புறக்கணிப்பதே ஹெடோனிஸம்.  

கலைஞர்களின் பாலியல் வேட்கை குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.  உடம்பே பற்றி எரியும் என்கிறார்.  அதைத் தனது எழுத்தின் மூலம், கலையின் மூலம் தாண்டியதாக எழுதுகிறார்.  அந்தப் பாலியல் வேட்கை சாமான்யர்களால் புரிந்து கொள்ள முடியாதது.  சந்திரமுகி படத்தில் ஜோதிகா பேய் பிடித்து ஒரு பிரம்மாண்டமான கட்டிலை அனாயாசமாக எடுப்பார் இல்லையா?  ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒவ்வொரு ஓவியனும் அப்படித்தான் பேய் பிடித்த நிலையில் வாழ்கிறான்.  அவன் காமம் பேய்க் காமம்.  மட்டுமல்லாமல் நான் நீண்ட காலமாக ஹட யோகம் பழகுபவன்.  இதெல்லாம் போதாது என்று தஞ்சாவூர்க்காரன்.  தஞ்சை மண்ணிலேயே காமம் கரை புரண்டு ஓடுகிறது.  இந்த 66 வயதிலும் 26 வயது மாதிரிதான் உடம்பும் மனமும் காமத்தீயில் பற்றி எரிகிறது. 

சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன்.  என் தோழியோடு ஒரு பப்பில் இரண்டரை மணி நேரம் டான்ஸ் ஆடினேன்.  நான் குடித்திருக்கவில்லை.  பனிரண்டு மணி அளவில் கிளம்பும் போது அவள் சொன்னாள், ”சாரு, உங்களைப் போன்ற gentleman-ஐ நான் பார்த்ததே இல்லை.  உங்களைப் பற்றியா இத்தனை அவதூறு சொல்கிறார்கள்?  இரண்டரை மணி நேர டான்ஸில் உங்கள் கையில் ஒரு கணம் கூட wrong touch-ஐ நான் பார்க்கவில்லை.”   சிரித்துக் கொண்டே நான் “எனக்குக் கிடைத்த மிக மோசமான பாராட்டு இது” என்றேன்.  எது ஹெடோனிஸம்?  64 வயதில் 24 வயதுப் பெண்ணோடு ஒரு பப்பில் இரண்டரை மணி நேரம் டான்ஸ் ஆட முடிந்தது ஹெடோனிஸம்.  Wrong touch இல்லாதது என் தனிமனித ஒழுக்கம்.  யோசிப்பேன்.  இத்தனை காமம் ஊறிப் பெருகி வழிகிறதே?  ஒரு பெண்ணோடு பழகினால் என்ன?  உடனடியாக என் நண்பன் தருண் ஞாபகம் வரும்.  பொட்டென்று எல்லாம் அவிந்து விடும்.  தேவையா?  அஞ்சு நிமிட கரவேலையில் முடியும் சமாச்சாரத்துக்காக என் வாழ்க்கையை, என் பெயரைத் தெருக்குப்பையில் போட முடியுமா?  ஆறு மாதங்களுக்கு முன்பு – ப்ரியங்கா சோப்ராவைத் தோற்கடிக்கும் ஒரு அழகியோடு நட்பு ஏற்பட்டது.  21 வயதுதான் சொல்ல முடியும். நிஜ வயது 31.   எனக்கு முதல் சந்திப்பு.  அவள் பல ஆண்டுகளாக என் எழுத்தில் வாழ்கிறாள்.  ஒரு பகல் முழுதும் பேசிக் கொண்டிருந்தோம்.  பத்தாண்டுகள் பழகினது போல் இருந்தது. ரெண்டு பேருக்குமே.  நில்.  நின்றாள்.  உட்கார்.  உட்கார்ந்தாள்.  ஆஹா.  ஆஹா.  ஆனால் மறுநாள் தருண் ஞாபகம் வந்தது.  தேவையா?  அவளிடம் விஷயத்தை விளக்கி விட்டு நம்பரை ப்ளாக் பண்ணி விட்டேன்.  எதற்கு?  தினமும் நூறு மெஸேஜ் அனுப்ப வேண்டும்.  சந்திக்க வேண்டும்.  ரகசியம் காக்க வேண்டும்.  சுதந்திரம் போய் விடும்.  ”பத்து முறை போன் செய்தேன்.  நீ எடுக்கவில்லை.  என்னை மறந்து விட்டாயா?” என்று கதற வேண்டும்.  “உனக்கு நான் முக்கியமா?  உன் கணவன் முக்கியமா?” என்று உளற வேண்டும்.  தேவையா இதெல்லாம்? 

வேலை இருக்கிறது.  இரண்டு நாவல்களை முடித்தாக வேண்டும்.  பயணக் கட்டுரைக்கு ஏராளமாகப் படிக்க வேண்டும்.  இப்போதைக்கு என் எழுத்தே என் ஹெடோனிஸம்.  நான் ஹெடோனிஸ்டாக இருக்கிறேனா இல்லை போலியா என்பது இப்போது என் கவலை இல்லை.  என் எழுத்தைப் படித்தவர் பெரும்பாலும் ஹெடோனிஸ்டாக மாறியிருக்கிறார்கள்.  அது போதும் எனக்கு. 

மேலும், வங்கியில் ஒன்றரை லட்சம் இருக்கும் போது, அந்த ஒன்றரை லட்சத்துக்கும் ஒரு கண்ணாடியை வாங்கிக் கொண்டு வருகின்ற மனநிலையில் வாழ்பவன் அத்தனை பேருமே ஹெடோனிஸ்ட் தான். 

மேலும், மரணத்தைக் கண்டு அஞ்சாதவன் ஹெடோனிஸ்ட். 

அப்படிப்பட்ட எனக்கு உங்களைப் போன்ற மனோவியாதிக்காரர்களின் அங்கீகாரம் தேவையில்லை.  டேய் சாம், நீ எழுத வேண்டியதை உன் அப்பன் எழுதி விட்டேன்.  நீ இன்றைக்கான போத்தலைத் திற மகனே…