மீண்டும் தடம் பற்றி…

கிட்டத்தட்ட நூறு பேரை முகநூலில் என் நட்பு வட்டத்திலிருந்து நீக்கினேன். யாருக்குமே நாம் பேசுவதன் பொருளை அறிந்து கொள்ளவோ, சொல்லின் உள்ளே செல்லவோ பொறுமை இல்லை. அவர்கள் என் எழுத்தைப் படித்துப் பயனில்லை என்று எல்லோரையும் நீக்கி விட்டேன்.

தடம் பற்றி நான் எழுதியிருந்ததன் பொருளே பலருக்கும் புரியவில்லை. முதியோர் இல்லம் மாதிரி பத்திரிகை நடத்தினா எவன்யா வாங்குவான் என்பது என் கேள்வி. உடனே எதிர்க் கேள்வி என்ன தெரியுமா? நடத்துபவர்களெல்லாம் இளைஞர்கள்; நீர்தான் வயசானவன். அடப்பாவிகளா! இப்படியெல்லாம் அறிவுகெட்டத்தனமாகப் பேசினால் எப்படி நான் உங்களோடு உரையாடுவது? இளைஞர்கள்தான் கிழட்டுத்தனமாக யோசிக்கிறார்கள் என்கிறேன். ஒரு உதாரணத்துக்கு எனக்கு வந்த கடிதத்தை இங்கே தருகிறேன். அவர் என் நெருங்கிய நண்பர். பெயர் வேண்டாம். பணி நிமித்தமாக வெளிநாடுகளிலேயே வசிப்பவர். வெளிநாடு என்றால் அமெரிக்கா இல்லை. ஆஃப்ரிக்கா கண்டத்தில் என்னென்னவோ பெயர் தெரியாத நாடுகள். அவருடைய கடிதம் கீழே:

”ப்பா, இதுக்குத்தான் தலைவன் தலைவன்னு நெஞ்சில அடிச்சுக்கிறோம். ஆசான் ஆசான்னு தலையில தூக்கிக் கொண்டாடுறம். இதெல்லாம் எதுக்கு? தடம் பத்திரிகை பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். Indeed, You remain a 25 years old adult, Charu. சூப்பர் கட்டுரை. இலங்கையிலிருந்து சிலர் அதில் கதை எழுதுகிறார்கள். காலாகாலமாக எழுதுகிறார்கள். தரத்தையும் அழகியலையும் உள்ளீட்டையும் பாராமல், அவர்களுடைய பெயரைக் கண்டாலே அந்த கதையைத் தூக்கி அடுத்த இதழில் போட்டுவிடுகிறார்கள். ஒருமுறை, பப்புவா நியூகினியைத் தளமாக வைத்து ஒரு கதையை எழுதி அனுப்பினேன். எனக்குத் தெரிந்து அக்கதையையோ அல்லது பப்புவா நியூகினி என்கின்ற ஒரு தேசத்தின் கதையையோ வேறு யாராலும் எழுத முடியாது. ஐ மீன் தமிழில். அங்கு 12 மாதங்கள் வாழ்ந்திருக்கிறேன். ஆயிரமாயிரம் மனிதர்களைக் கண்டு வியந்திருக்கிறேன். கதைகளாக பல பப்புவா மாந்தர்கள் என்னோடு இருக்கிறார்கள். அப்படி எழுதிய ஒரு கதை அது. தடம் கண்டுகொள்ளவே இல்லை. அடுத்த இதழில் ஒரு படு மட்டமான கதையைப் பிரசுரித்திருந்தார்கள்.என் கதையைப் பிரசுரிக்கத்தான் இல்லை, ஏன் என்று ஒரு வார்த்தையாவது எனக்கு எழுதியிருக்கலாம்.
எனிவே, நான் ஒரு இணைய இதழ் ஆரம்பித்தால் எப்படியிருக்கும் என்பதை கண்ணாடியில் பார்ப்பதுபோல் இருந்தது உங்கள் கட்டுரை. Thank you for making my day blissful. Had to run for a meeting. You held me up for 20 mins! Love you Charu.

***

நண்பருக்கு எழுத நினைத்தேன். ஒரு காலத்தில் பத்திரிகை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார். நல்ல கதை வந்தால் வீடு தேடிப் போய் ஆயிரம் ரெண்டாயிரம் என்று பண முடிப்பாகக் கொடுத்து விட்டு வந்தார். பெயர் பாலசுப்ரமணியன். விகடனில் ஆசிரியராக இருந்தவர். அதன் இப்போதைய நிலையைத்தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் தடத்தை விட விகடன் தேவலாம் என்றே சொல்வேன். என்ன பிரச்சினை என்றால், இனி வரும் காலத்தில் இப்படிப்பட்ட அச்சு இதழ்களே இருக்காது. இணைய இதழ்களும் விடியோ இதழ்களும்தான் நடைமுறையில் இருக்கும்.