செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாம். அன்றைய தினம் காலை பத்து மணிக்கு நாகூர் நேஷனல் ஹைஸ்கூலில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களிடையே உரையாற்றுகிறேன். பழைய மாணவர் சந்திப்பு என்றுதான் பழைய மாணவர்கள் சொன்னார்கள். 50 ஆண்டுக்குப் பிறகு சந்திக்கிறோம். ஆனால் நான் ஒரு எழுத்தாளன் என்பதால் மாணவர்களிடையே பேசுங்கள் என்றார்கள். வெறும் சினிமாவை மட்டுமே அறிந்த மாணவர்களிடையே என்ன நான் பேச முடியும்? என்றாலும் யாரிடமாவது அந்தத் தீப்பொறி பற்றும் இல்லையா? ஒருவரிடமாவது? ஜெயகாந்தனைக் கேட்டுக் கேட்டுத்தானே நான் மாறினேன்? எல்லோரும் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பத்தாம் வகுப்பு மாணவனாக நான் ரவி ஷங்கரின் சிதாரை அல்லவா கேட்டேன்? ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் ஒன்பதரையிலிருந்து பதினோரு மணி வரை ரேடியோ சங்கீத் சம்மேளனிலிருந்து (ஆல் இந்தியா ரேடியோ) ஒலிபரப்பாகும் இசை நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் கேட்பேன். காரணம், ஜெயகாந்தன் கொடுத்த அறிமுகம்தான். அப்படி ஒருவருக்காவது தீப்பொறி பற்றினால் சரி.
என்ன பேசலாம் என்று ராகவனைக் கேட்டேன். தன்னெஞ்சு அறிவது பொய்யற்க என்றார். இதை வைத்தே ஒரு மணி நேரம் பேசலாம்; நல்வாழ்வுக்கான தாரக மந்திரம் அதுதான் என்றார். ம்ஹும். பையன்களிடையே – அதுவும் கீழத்தஞ்சை மாவட்டத்துப் பையன்களிடையே நெஞ்சு என்ற வார்த்தையையே பயன்படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டேன். சிரித்து விடுவான்கள். அதுவும் எல்லோரும் சேர்ந்து சிரித்தால் என்ன ஆகும். அதனால் பதமாகப் பேச வேண்டும். சரி, சீரியஸாகவே யோசித்தாலும், என் நெஞ்சு என்ன சொல்கிறது? என் நெஞ்சு எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது? 14, 15, 16 வயது மாணவர்களின் மனம் வெறும் சினிமாவினால்தானே உருவாக்கப்பட்டிருக்கிறது? அந்த மனம் எனக்கு என்ன சொல்லும்? தமிழ் சினிமா என்ற ஆபாசத்தினால் உருவாக்கப்பட்ட தன்னெஞ்சு என்னத்தை அறியும்? அது நினைப்பதெல்லாம் பொய்யாக அல்லவா இருக்கும்?
ம்… என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஜெயகாந்தனுக்கு இந்தப் பிரச்சினை இருந்திருக்காது. ஏனென்றால், அவர் எதிர்கொண்ட எம் போன்ற மாணாக்கர்கள் காலிப் பாத்திரமாக இருந்தோம். அவர் கொடுத்ததை ஏற்றோம். இப்போதைய மாணவர்களின் பாத்திரம் சினிமா குப்பையால் நிரம்பியிருக்கிறது. என்ன செய்ய?
காயத்ரி நல்ல ஆசிரியர் என்று ஸ்டெல்லா மாரிஸில் பெயர் எடுத்தவர். ராம்ஜி இதுவரை 2000 மோடிவேஷனல் ஸ்பீச் கொடுத்திருக்கிறார். (அதற்கும் மேலேயா ராம்ஜி?) எனவே ரெண்டு பேரிடமும் கேட்கலாம் என்று இருக்கிறேன்.