ஜீவனாம்சம்

நேற்றிலிருந்து சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சத்தையும், அசோகமித்திரனின் இருவர் குறுநாவலையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.  கையில் இருந்திருந்தால் நேற்றே அய்யனாருடனான உரையாடலை முடித்திருப்பேன்.  இது போன்ற அடிப்படை நூல்கள் கூட இணையத்தில் கிடைப்பதில்லை என்பது ஆயாசம் அளிக்கிறது.  கிடைத்திருந்தால் ரெண்டு நிமிட வேலை.  என்னுடைய ஜீவனாம்சம் காப்பி 1985-இல் வாங்கியது.  எழுத்து பிரசுரம், 19-A, பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5இலிருந்து செல்லப்பாவே பிரசுரித்தது.  அதுதான் செல்லப்பா குடியிருந்த வீடாக இருக்க வேண்டும்.  சில தினங்களுக்கு முன்னர் என் நண்பர் கண்ணன் (நான் தபால் துறையில் ஸ்டெனோவாக வேலை பார்த்த போது சக ஸ்டெனோவாக இருந்து இன்று ஒரு சர்வதேச நிறுவனத்தில் உலகம் பூராவும் சுற்றிக் கொண்டிருக்கும் பணியில் இருக்கிறார்.  போனை எடுத்தாலே “இப்போது எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?” என்றுதான் கேட்க வேண்டும்.  அய்யங்கார் இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும் நல்லவர்.  ராமானுஜரைப் போல் புரட்சிக்காரர்.  உடம்பெல்லாம் மூளை.  அப்படிப்பட்டவர்கள் அந்த மூளையை பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்துவார்கள்.  கண்ணன் அந்தத் திறமையை பிறர் பணி செய்து கிடப்பதற்காகப் பயன்படுத்துகிறார்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வாக்கியத்தின் நடமாடும் உருவம் கண்ணன்) – திருவல்லிக்கேணியைச் சுற்றிக் காண்பித்தார்.  திருவல்லிக்கேணியில் ஏ.கே. ராமானுஜன், கணித மேதை ராமானுஜம் எல்லாம் வாழ்ந்த வீடுகள் இன்று சாதாரண கட்டிடங்களாக – அபார்மெண்ட்டுகளாக நின்று கொண்டிருக்கும் போது சி.சு. செல்லப்பா வாழ்ந்த பிள்ளையார் கோவில் தெரு வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் என்னை உதைக்க வருவார்கள்.  (ஒருநாள் அந்த வீட்டைப் பார்க்க வேண்டும் கண்ணன்.)

செல்லப்பா பதிப்பித்த ஜீவனாம்சத்தின் விலை ஆறு ரூபாய்.  ஜானி ஜான் கான் ரோட்டில் (ராயப்பேட்டை) உள்ள (இப்போது இருக்கிறதா என்று தெரியாது) நாவல் ஆர்ட் ப்ரிண்டர்ஸ் என்ற அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்.  இதை நான் நண்பரிடம் கொடுத்திருந்தேன்.  நிரந்தரமாக.  படித்தாயா என்று கேட்டேன்.  இன்னும் இல்லை.  நிச்சயம் படிப்பார்.  ஆனால் தமிழ் சமூகம் ஜீவனாம்சத்தைப் படிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.  என்னைப் பொறுத்தவரை சி.சு. செல்லப்பாவையும் தி. ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் படிக்காதவர்களை பிராமணர் என்றோ, இந்து என்றோ, இந்தியர் என்றோ ஒப்புக் கொள்ள மாட்டேன்.  மரபு தெரியாத அனாதைகள் என்றே அவர்களை அழைக்க வேண்டும்.  நாகரீகமாக இப்படி எழுதியிருக்கிறேன் என்று புரிந்து கொள்க.  தன் மூதாதையரே யார் என்று தெரியாத ஒரு கூட்டத்தை என்னவென்று சொல்வது?

வாஸ்தவத்தில் இன்று ராம், ராகவன், சேஷன், நான் நால்வரும் கபாலி கோவில் வாசலில் உள்ள பாரதி மெஸ்ஸுக்கோ அதன் எதிரே உள்ள ஜன்னல் கடைக்கோதான் போகலாம் என்று இருந்தோம்.  ராகவன் இன்னும் 15 நாட்களுக்கு வர மாட்டேன் என்று காலையிலேயே ஃபோன் செய்து சொல்லி விட்டார்.  நாரத கான சபாவின் மினி ஹாலில் இன்றிலிருந்து உபந்நியாசமாம்.  என்னையும் அழைத்தார்.  மாலையில் வாக்கிங் போய்க் கொள்ளலாம் என்றார்.  என்னால் மாலையில் வாக்கிங் போக முடியாது.  மூன்று சுற்றிலேயே களைப்பாக ஆகி விடும்.  மேலும் தொப்பையைக் குறைப்பதற்காக நாகேஸ்வர ராவ் பூங்காவிலேயே உள்ள ஜிம்முக்கும் போய்க் கொண்டிருக்கிறேன்.  அதெல்லாம் மாலையில் ஆகிற கதை இல்லை.  ஆனாலும் உபந்நியாசத்துக்கும் மனசு இழுத்தது.  ஞானமா, உடல் ஆரோக்கியமா என்று தத்தளித்தது.  சுவரை வைத்துத்தான் சித்திரம் என்ற பழமொழி ஞாபகத்துக்கு வந்து காலையில் ஞானம் வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.  எப்போது முடியும் ஞானம்?  எட்டு மணிக்கு முடியுமாம்.  ஆகா, அப்படியானால் நீங்கள் எங்களோடு சாப்பிட வரலாமே, நாங்களே எட்டேகாலுக்குத்தானே போவோம் என்றேன்.  ”ம்ஹும் முடியாது.  உபந்நியாசத்துக்கு என் மனைவியோடு போகிறேன்” என்றார் ராகவன்.  

ராமுக்கும் ஏதோ வேலை வந்து விட்டது.  அவரும் வரவில்லை.  ராமைத்தான் ரொம்ப மிஸ் பண்ணினேன்.  அவர் இருந்தால் மோடியின் தியாக உள்ளம் பற்றியும் சுயநலமற்ற வாழ்க்கை பற்றியும் அவர் உருகி உருகிப் பேசுவதைக் கேட்கலாம்.  நேற்று இதே சங்கீதா ஒக்கடேயில் அவர் மோடியின் தியாகக் கதைகளைப் பற்றிப் பேசிய போது மோடியின் எதிர்ப்பாளனான எனக்கே கண் கசிந்து விட்டது.  தியாகத்தைப் பற்றிக் கேட்டால் யாருக்குத்தான் கசியாது சொல்லுங்கள்?   ம்ஹும்.  இன்று எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.  இனிமேல் அடுத்த வாரம்தான் மோடியின் தியாகக் கதைகளைக் கேட்க முடியும். 

ஆகக் கடைசியில் எப்போதும் போலவே நானும் சேஷனும் மட்டுமே மிஞ்சினோம். பாரதி மெஸ்ஸுக்குப் போகலாமா என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன்.  அங்கே போனால் செல்லப்பாவின் ஜீவனாம்சத்தை நண்பரிடமிருந்து வாங்க முடியாது.  நண்பர் வீடு சங்கீதா ஒக்கடே பக்கம் இருக்கிறது.  அதனால் பாரதி மெஸ்ஸை தியாகம் செய்து விட்டு சங்கீதா ஒக்கடே நோக்கிப் பயணமானோம் நானும் சேஷனும். 

ராமசேஷனின் ஸ்கூட்டரில் ஏறி நண்பரின் வீட்டுக்குப் போனேன்.  சேஷன் கேட்டிலேயே காத்திருந்தார்.  நல்லவேளை மின்சாரம் இருந்தது.  இல்லாவிட்டால் மூன்று மாடிகளை படிக்கட்டில் ஏற வேண்டும்.  நுரை தள்ளி விடும்.  இன்றைய தினம் மின்சாரத்தை வழங்கியதற்காக மின்வாரியத்துக்கு நன்றி செலுத்தி விட்டு லிஃப்ட்டில் ஏறிப் போய் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சேஷனும் நானும் சங்கீதா ஒக்கடே போனோம். ஆளுக்கு ஒரு தோசை.  நேற்று இதே சங்கீதாவில்தான் ஆனியன் ரவா தோசை சாப்பிட்டு புட்டுக் கொண்டது. ஆனியன் ரவா  கண்றாவியாக இருந்தது.  பாதி தோசையை வைத்து விட்டேன்.  ரவா தோசை என்றால் மெல்லிசாக இருக்க வேண்டாமா?  தத்தி தத்தியாக இருந்தது ஆனியன் ரவா.  ஆனியனையே தேட வேண்டியிருந்தது.  ஆனால் சங்கீதாவில்தான் – அதாவது, ஆர்.ஏ. புரம் சங்கீதாவில்தான் காஃபி நன்றாக இருக்கும்.  காஃபி நன்றாக இருக்கும் உணவகத்தில்தான் சாப்பிடுவது என்ற தீவிரமான கொள்கைக்காரன் நான்.  ஆனால் துரதிர்ஷ்டம், இன்றைய தினம் பாலைக் கருக விட்டு விட்டார் சமையல்காரர்.  சொன்னேன்.  உடனே பக்கத்தில் உள்ள அடுத்த கிச்சனிலிருந்து நல்ல காஃபி வந்தது. 

பிறகு ராமசேஷனிடம் என்னை சேமியர்ஸ் ரோட்டில் உள்ள பழமுதிர் நிலையத்தில் இறக்கி விட்டு விடச் சொன்னேன்.  அங்கே மாதுளம் பழத்தை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீட்டுக்குப் போய் விடலாம்.  இரவு ஒருவேளை நானும் அவந்திகாவும் பழ உணவுதான்.

பழத்தை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பும்போது வழக்கம் போல் ஆட்டோக்காரர் என்னென்னவோ கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.  ஒரு ஆட்டோக்காரர் பாக்கியில்லாமல் எல்லா ஆட்டோக்காரர்களும் என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.  நான் கதைக்காரன் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.  தெரியாமலேயே இது நடக்கிறது.  இந்த ஆட்டோக்காரரிடம் எம்மெஸ் விஸ்வநாதன் வீட்டுக்குப் பக்கத்து வீடு என்று சொன்ன அடுத்த கணமே கதையை ஆரம்பித்தார்.   அவர் சங்கர் கணேஷின் சொந்தக்காரராம்.  அவரை எங்கே பார்த்தாலும் நிறுத்தி ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுப்பாராம் சங்கர்.  ஜெர்க் ஆனேன்.  உடனே சுதாரித்துக் கொண்டார் ஆட்டோக்காரர்.  அப்போது ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்தது சார்.  பிறகு ஏதேதோ சொன்னார்.  மனம் லயிக்கவில்லை.  திடீரென்று கவனித்தேன்.  கையில் ஜீவனாம்சம் இல்லை.  ஐயோ.  ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதே.  பார்த்து விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்று வேறு எச்சரிக்கை செய்திருந்தார் நண்பர்.  உடனே ஆட்டோவை கடைக்கே திருப்பச் சொன்னேன்.  வைத்த இடத்திலேயெ இருந்தது ஜீவனாம்சம். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai